வாசகர்கள் கருத்துகள் ( 1 )
மத்திய அரசு கொடுப்பது எல்லாம் பி ஜே பி கட்சி நிதியிலிருந்தா வருகிறது?
எ.திலகர்
ஈஸ்வரன், சேலத்திலிருந்து எழுதிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கல் பண்டிகையை
முன்னிட்டு, பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி - சேலை, ரொக்கம் 3,000
ரூபாய் வழங்கி வருகிறது, தி.மு.க., அரசு. அதேநேரம், இது அரசு விழாவாக இல்லாமல், தி.மு.க., கட்சி விழாவாக நடத்தப்படுவது தான், திராவிட மாடல் விளம்பர மோகத்தின் உச்சம்! ரேஷன் கடைகளில் தி.மு.க., கொடிகள் பட்டொளி வீசிப் பறக்க, தி.மு.க.,
முதல்வரை போற்றி புகழும் பேனர்களும் என்று, பொங்கல் தொகுப்பு வழங்குவதை
கட்சி விழாவாக நடத்துகின்றனர், உடன் பிறப்புகள். இதில், பொங்கல்
தொகுப்பு கொடுப்பதை துவக்கி வைக்க, தி.மு.க.,வின் வட்டசெயலர்கள் முதல்
நகர, ஒன்றிய நிர்வாகிகள் வரை வரிசை கட்டி வருகின்றனர். பல கடைகளில் கட்சியினர் வரும் வரை, மக்கள் காத்து கிடக்க வேண்டிய அவலநிலையும் அரங்கேறியுள்ளது. இது மக்களின் வரிப்பணத்தில் கொடுக்கப்படும் அரசு நிதி; தி.மு.க.,வினர்
தங்கள் சொத்தை விற்றுக் கொடுக்கும் நிதியோ, அக்கட்சியின் சொந்த நிதியோ
அல்ல! தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகள் இருக்கலாம்; ஆனால்,
கட்சி நிர்வாகிகளை வைத்து, ரேஷன் கடைகளில் பணம் வழங்குவது எந்த விதத்தில்
நியாயம்? துணை முதல்வர் உதயநிதியின் வார்த்தைகளில் கூறுவது
என்றால், 'இது, தி.மு.க.,வினருடைய அப்பா வீட்டு காசு அல்ல; தமிழக மக்களின்
பணம்!' என்பதை திராவிட மாடல் அரசு மனதில் கொள்ள வேண்டும்!
உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் லாபமா, நஷ்டமா?
கே.என்.ரமணி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், 2003, ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு ஏற்படுத்தப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று, பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இக்கோரிக்கையை நிறைவேற்றுவதாக, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தாலும், தற்போது, அதற்கு பதிலாக, 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம்' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டம் புதிய ஓய்வூதிய திட்டத்தை விட, ஓய்வூதியத்தை பொருத்த வரை லாபகரமானது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரம், பழைய ஓய்வூதிய திட்டத்துடன் ஒப்பிடும் போது நஷ்டமே! ஏனெனில், பழைய திட்டத்தில், பணிக்காலம் முழுதும் ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்பட்ட தொகைகள் வட்டியுடன் சேர்த்து, ஓய்வு பெற்றவுடன் அவர்களுக்கே திரும்ப வழங்கப்படும். ஆனால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், மேற்படி தொகை மற்றும் அதற்கு சமமான அரசின் பங்களிப்புத் தொகை ஆகிய இரண்டுமே அரசால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. பணியின் போது கடைசி மாதத்தில் பெற்ற சம்பளத் தொகையில் பாதி, பழைய ஓய்வூதிய திட்டத்தை போலவே, இதிலும் ஓய்வூதியமாக வழங்கப்படுவதுடன், பணியில் இருப்பவர்களுக்கு சமமான அகவிலைப்படியும் வழங்கப்படும் என்பதே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் முக்கியமான அம்சம். இத்திட்டம், கடந்த ஆண்டு மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, 'ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை' அடிப்படையாக கொண்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களில் வெறும் 5 சதவீதம் பேர் மட்டுமே ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து இருப்பதாகவும், மீதமுள்ள 95 சதவீதம் பேர் புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடர்வதையே விரும்புவதாகவும் அறியப்படுகிறது. தற்போதைய காலகட்டத்தில் அனைவருக்கும் சம்பள விகிதங்கள் அதிகமாக உள்ளதால், பணிக்காலம் முடிந்து, தங்களின் பங்களிப்பு மற்றும் அரசின் பங்களிப்பு இரண்டையும் சேர்த்து பெறப்படும் தொகை, பல லட்சங்களை தாண்டும். இதை அப்படியே அரசுக்கே ஒப்படைத்து விட்டு, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை சில ஆண்டுகளுக்கு பெறுவதைக் காட்டிலும், இத்தொகையை தாங்களே வைத்து, அதை முதலீடுகள் செய்வதிலிருந்து கிடைக்கும் வருமானமே, மிகுந்த லாபகரமாக இருக்கும் என்று கணக்கிட்டே, பலரும் புதிய ஓய்வூதிய திட்டத்தில் தொடர்ந்திட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில், விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இணையலாம் என்று அறிவிக்கப்படும் பட்சத்தில், ஏற்கனவே, புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ள தமிழக அரசு ஊழியர்களில் எத்தனை சதவீதம் பேர் இதில் இணைவர் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்! மொழி பிரச்னையை தவிர்க்க...
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் ஒன்று முதல் 10 வகுப்பு வரை மலையாள மொழியை கட்டாய பாடமாக்கும் மசோதாவை, கவர்னருக்கு அனுப்பியுள்ளது, அம்மாநில அரசு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 'கேரள மாநில எல்லை கடற்கரை மாவட்டமான காசர்கோட்டில், 70 சதவீத மக்கள் கன்னடம் பேசுபவர்கள் வசிப்பதாகவும், இவர்களின் பிள்ளைகள் பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் கற்க வேண்டும் என்பது, அரசியல் சாசனம் விதி 350க்கு எதிரானது என்பதால், இந்த மசோதாவுக்கு கேரள கவர்னர் இசைவு தரக்கூடாது' என்று, 'கர்நாடக எல்லை ஏரியா மேம்பாட்டு ஆணையம்' சார்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. 'காசர்கோடு நிர்வாக ரீதியாக கேரளாவுடன் இணைந்து இருக்கலாம். ஆனால், அங்கு வாழும் கன்னடர்கள் கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களுக்கு சமம். கேரள அரசு இப்படிசெய்யும் என்று எதிர்பார்க்கவில்லை' என்று, எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளார், கர்நாடக முதல்வர் சித்தராமையா. மாநில பற்று, எல்லைகளைக் கடந்து எதிரொலிக்கிறது. இதேபோன்று, தமிழ்நாடு - ஆந்திர எல்லையில் உள்ள குப்பம், கேரள எல்லையில் உள்ள பொள்ளாச்சி, மீனாட்சிபுரம், களியக்காவிளை, கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி, பெலகாவி போன்ற ஊர்களிலும் மொழிப் பிரச்னைகள் உள்ளன. இதைத் தவிர்க்க, மாநில எல்லைப் பகுதிகளில், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை துவக்கினால், மொழிப் பிரச்னை எழாததுடன், மொழியின் காரணமாக மாணவர்களிடையே பிரிவினை ஏற்படாது. மாநில அரசுகள் யோசிக்குமா?
மத்திய அரசு கொடுப்பது எல்லாம் பி ஜே பி கட்சி நிதியிலிருந்தா வருகிறது?