உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / காங்கிரஸ் கொடுக்கும் அதிகார பகிர்வு!

காங்கிரஸ் கொடுக்கும் அதிகார பகிர்வு!

எஸ்.ஆர்.கபிலவர்மன், திருவள்ளூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரத்தில் நியாயமான பங்கு வழங்கும் வரை, அவர்களது பிரச்னை தீராது; எந்த துறையாக இருந்தாலும், அதிகாரத்தில் அவர்களுக்குரிய பங்களிப்பை தர வேண்டும்' என, லோக்சபா காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார். இதற்கு காங்., கட்சியே முன் உதாரணமாக செயல்பட்டுள்ளது; செயல்பட்டும் வருகிறதுஎப்படி தெரியுமா? கடைசியாக, காங்., ஆட்சியை விட்டு இறங்கியபோது, பிரதமராக இருந்தவர், மன்மோகன் சிங்!பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர், ராகுலின் பாட்டி இந்திராவை சுட்டுக் கொன்ற சீக்கிய இனத்தை சேர்ந்தவர்.அப்படி இருந்தும், 'மன்னிப்போம் மறப்போம்' என்ற உயரிய நோக்கில், மன்மோகன் சிங்கிற்கு பிரதமர் பதவி அளித்து, நிழல் பிரதமராக சோனியா இருந்து, அவரை இஷ்டம் போல் ஆட்டி வைத்தார்.இதுதான், காங்., பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கும் அதிகார பகிர்வு!தலித்துகளுக்கு அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ள ராகுல், அதை எப்படி செயல்படுத்தி உள்ளார் தெரியுமா? மல்லிகார்ஜுன கார்கேவிற்கு, அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி அளித்து, நிழல் தலைவராக தான் இருந்து, கட்சியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதைப் போல், அதிகாரம் வழங்குகிறார். இந்த தைரியம் எல்லாம் இந்தியாவில் வேறு எந்த கட்சிக்கும் கிடையாது.தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரம் கிடைக்க வேண்டுமென்றால், காங்., கட்சி வழிகாட்டியுள்ளதை போல, பிற அரசியல் கட்சிகளும், தலைமை பொறுப்பை அவர்களிடம் கொடுத்து, லகானை தங்கள் கையில் வைத்து ஆட்டி வைக்கலாம்!இதுதான், காங்கிரஸ் கொடுத்த, கொடுத்துக் கொண்டிருக்கும் அதிகார பகிர்வு!

தீர்வே இல்லையா?

ஆர்.பிச்சைமணி, சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கல் பண்டிகைக்கு, தி.மு.க., அரசு 1,000 ரூபாய் கொடுக்காததற்கு, சமூக வலை தளங்களிலும், இதர மீடியாக்களிலும் மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர். இதைப் பார்த்த போது, இலவசத்திற்கு எவ்வளவு துாரம் அடிமையாகி விட்டனர் என்பதை அறிய முடிந்தது. இதை பற்றி, தி.மு.க., மூத்த அமைச்சர் ஒருவரிடம், நிருபர்கள் கேட்ட பொழுது, 'தேர்தல் வரும்போது பார்க்கலாம்' என்று கூறிச் சென்றார். இதன் வாயிலாக, மக்களின் மன நிலையை, திராவிட மாடல் அரசு தெளிவாக அறிந்து வைத்துள்ளது புலனாகிறது. இது ஒருபுறம் இருக்க, வரி கட்டுவோரின் கஷ்டங்கள் புரிந்து, அதை களையும் நோக்கத்தில் அரசின் செயல்பாடுகள் இல்லை. இப்படியே போனால் சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் எண்ணிக்கை குறைந்து, பொருளாதாரம் பாதிக்கும். தொழிற்சாலைக்கு மின் கட்டணத்தை அதிகரித்து, அதன் வாயிலாக, மகளிர் உரிமைத் தொகையாக மாதம், 1,000 ரூபாய் கொடுக்கப்படுவதாக, சிறு தொழில் உரிமையாளர் ஒருவர் அங்கலாய்த்தார். மாநிலத்தின் வருவாயை பற்றி கவலைப்படாமல், தேர்தலின்போது, இலவசங்களை அறிவிப்பதால், அம்மாநிலத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து, தேவையான காரியங்களுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படும். அதிகார சுகத்திற்காக, இலவசங்களை அறிவித்து, வரி கட்டுவோரின் வயிற்றில் அடித்து, பந்தாடுகின்றன அரசியல் கட்சிகள். சிறு, குறு தொழில்கள் அமைக்க பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கிய, 14,000 கோடி ரூபாயில், 25 சதவீத பணமே செலவானது. ஏனெனில், தொழில் முனைவோர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டன. மக்களுக்கு இலவசங்களை கொடுக்க நினைத்தால், அரசியல்வாதிகள் தங்களிடம் இருந்தோ அல்லது கட்சியிடமிருந்தோ தான் கொடுக்க வேண்டும் என்று சட்டம் வந்தால் ஒழிய, இதற்கு தீர்வே இல்லை!

பக்தர்களுக்கு தெரியலையே?

பழ.சுந்தரமூர்த்தி, கோவையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைத் திருநாளை முன்னிட்டு, வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அலைமோதியதால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.இதுகுறித்து, பக்தர்களின் முறையீடுக்கு, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 'ஆறு மணி நேரம் காத்திருந்தால், அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? திருப்பதிக்கு போனால், 24 மணி நேரம் நின்று சுவாமி தரிசனம் செய்கின்றனர்; முருகனை தரிசிக்க, 6 மணி நேரம் நிற்க மாட்டார்களா?' என, அதிகார தோரணையில் கேட்டுள்ளார். ஐயா சேகர்பாபு அவர்களே... திருப்பதியில், 24 மணி நேரம் அல்ல; 48 மணி நேரம் என்றாலும் கூட, காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யலாம். ஏனென்றால், காத்திருக்கும் பக்தர்களுக்கு காற்றோட்டமான இருக்கை, மின்விசிறி, அவ்வப்போது பால், காபி, சிற்றுண்டி மற்றும் உணவு வகைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, தொலைக்காட்சியில், முன்பு நடந்த விழாக்கள் பற்றிய செய்திகள், சுத்தமான, சுகாதாரமான கழிப்பறைகள் என, அனைத்து வசதிகளையும், கோவில் நிர்வாகத்தினர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர். ஆனால், நீங்கள், என்ன வசதியை செய்து கொடுத்துள்ளீர்கள்?வயதானவர்கள், நீரிழிவு நோயாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வந்திருப்போர் படும் அவஸ்தைகளை அறிந்து கொள்ள, கொஞ்சமாவது மனசாட்சியும், நேர்மையும் வேண்டும். நெற்றி நிறைய திருநீறு பூசியபடி, அறநிலையத் துறை அமைச்சராகவும் இருந்தபடி, சனாதன எதிர்ப்பு மாநாட்டில் கைகட்டி வாய் பொத்தி இருந்த நீங்கள், இப்படி தான் பேசுவீர்கள் என, பக்தர்களுக்கு தெரியாமல் போய் விட்டது.

மக்களின் குரலாக உள்ளது 'தினமலர்' நாளிதழ்!

ஜி. ராமநாதன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திண்டுக்கல் - பழனி ரோட்டில், தி.மு.க., கட்சி கொடி நடுவதற்கு, டிரில்லிங் மிஷன் வாயிலாக, சாலையில் நுாற்றுக்கணக்கான துளைகள் போடப்பட்டு இருந்தன. அதை கண்டு, மிகுந்த வேதனையும், கோபமும் ஏற்பட்டது. பொதுமக்கள் தேவைக்காக, அவர்களது வரிப் பணத்தில் போடப்பட்ட சாலையை, சிறிதும் மனசாட்சி இல்லாமல், தி.மு.க., வினர் துளை போடுவது பார்த்து, பதறினேன். என்னைப் போல் பலரும், இவர்களது செயலைக் கண்டு திட்டியபடியே சென்றனர். சுதந்திரம் பெற்றோம்... குடியாட்சியில் உள்ளோம்; ஆனால், எந்த ஒரு சமுதாய பொறுப்பும், கடமையும் இல்லாமல், ஆளுங்கட்சி என்ற மமதையில், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையை துளையிடும் அராஜகத்தை தட்டிக் கேட்க முடியவில்லை!அப்படி கேட்டால், நம் மீது வழக்கு பாயும் என்பதற்கு, பல உதாரணங்களை தினமும் செய்தித்தாள்களில் தான் பார்க்கிறோமே...! அதேநேரம், என்னைப் போன்றவர்களின் ஆதங்கத்தை, 'தினமலர்' நாளிதழ் செய்தியாக வெளியிட்டபோது, 'ஆளுங்கட்சியின் தவறை தைரியமாக சுட்டிக் காட்ட, தினமலர் பத்திரிகையாவது உள்ளதே' என்று மன ஆறுதல் அடைந்தேன். தினமலர் இதழுக்கு மிக்க நன்றி!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Dharmavaan
பிப் 04, 2025 20:18

காங்கிரஸ் எங்கிருந்தாலும் கொத்தடிமைகளையே அமர்த்தும் காரணம் ராகுல்கான் குடும்பம்அதிகாரம் செலுத்தும் ஆனால் வசவுகளை கொத்தடிமை ஏற்க வேண்டும். பன்சிங்க் பாக் தான். ராகுல் கேள்விகேட்பான் அவனை யாரும் கேள்விகேட்க கூடாது என்பது அந்த குடும்ப ஆணவம் இவன் ஜாதி கணக்கெடுப்பு கேட்பது திராவிட கூட்டம் போல் ஹிந்துக்களை பிரித்து முஸ்லீம் ஓட்டுடன் சேர்த்து பதவியை பிடிக்க...


D.Ambujavalli
பிப் 04, 2025 06:35

ஒரு இடத்தில் ‘அல்லேலூயா’, ஒரு இடத்தில் சனாதன எதிர்ப்பு, பெரிய குடும்பத்துக்கு காவடி என்று மட்டும்தான் கவனம் போகும், இத்தனை கூட்டம் வரும் ஆனால் எந்த வசதியும் செய்யாமல், திருப்பதியுடன் ஒப்பிடுவது அமைச்சருக்கு மட்டுமே முடியும்


சமீபத்திய செய்தி