உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தினமலர் நாளிதழுக்கு நன்றி!

தினமலர் நாளிதழுக்கு நன்றி!

கே.ராமநாதன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சுதந்திர தினத்தை ஒட்டி, தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக தேசியக்கொடியின் வண்ணங்களின் பின்னணியில் மலரின் இலச்சினை மிளிர 'தினமலர்' நாளிதழ் வெளியானது, பெரும் உற்சாகத்தை கொடுத்தது.சுதந்திர தின மலர் இதழில், சுதந்திர தினம் மற்றும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் குறித்து அரிய பல தகவல்களை இன்றைய தலைமுறையினரும் அறிந்து கொள்ளும் வித மாக வெளியிட்டு இருந்தது சிறப்பாக இருந்தது.'நக்சல்களை ஒழிப்பது நம் முதல் கடமை'யென தலைநகரில் பிரதமர் மோடி சூளுரைத்ததும்,' ஊழல் - லஞ்சங்களை ஒழிப்பது இரண்டாவது சுதந்திர தினம் கிடைப்பதற்கு ஒப்பானது' என, தமிழக முதல்வர் முழங்கியதும், 80-வது சுதந்திர தினத்தை முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட வைத்தது.தேச பக்தியை, வித்தியாசமான முறையில் வெளிப்படுத்திய, 'தினமலர்' நாளிதழுக்கு நன்றி!

முதல்வர் விஜய்க்கு தெரியாததல்ல இது!

பி.ஜெயபால், பழையூர், கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: நாட்டின் வளத்தை அரிக்கும் கரையான் போன்றது ஊழல் என்றால், வீட்டையே எரிக்கும் நெருப்பு போன்றது மது.என் உறவினர் ஒருவர் போதை பழக்கத்தால் வீடு, வாசல், காடு, கழனி என்று அத்தனையும் இழந்து விட்டார். அவரது மனைவியின் சாமர்த்தியத்தால், அவரது வேலை மட்டும் காப்பாற்றப்பட்டது.மற்றொரு உறவினர் குடி பழக்கத்தால் உடல் உள்ளுறுப்புகள் மோசமடையவே, வைத்திய செலவுக்காக, அவரது மனைவியின் நகைகளை விற்றும், உறவினர்களிடம் கடன் வாங்கியதாலும் இன்று அக்குடும்பமே கடன் பிரச்னையில் நடைபிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.மதுவிலக்கிற்கு பொருளாதாரம் தடையென கூறும் ஆட்சியாளர்கள், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்து யோசிக்கவில்லை.மது போதையில் பாலியல் அத்துமீறல் போன்ற சமூக குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.மதுவின் தாக்கத்தால், மிருகங்களை விட மனிதர்களின் நடவடிக்கைகள் மோசமாகி வருகின்றன. அரசு இவ்விஷயத்தில் அலட்சியம் காட்டக் காட்ட, மக்கள் இதன் தாக்கத்தை பல வழிகளில் அனுபவிக்கும் போது, ஆட்சியாளர்கள் மீது தான் வெறுப்பு கொள்வர்.அதேநேரம், தமிழகத்தின் நிதி ஆதாரமே மது விற்பனையில் இருப்பதால், அரசு மதுவிலக்கை அமல்படுத்த தயங்கலாம்.ஆனால், இலவச திட்டங்கள் மற்றும் அவசியமற்ற அரசின் ஆடம்பர செலவுகளை தவிர்த்தாலே, மதுவின் வாயிலாக ஏற்படும் நிதி இழப்பை ஓரளவு சரி கட்ட முடியும்.சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்; ஆரோக்கியமான மக்கள் சக்தி இருந்தால் தான் நாடு வளம் பெறும். முதல்வர் விஜய்க்கு தெரியாததல்ல இது!

லஞ்சம் வாங்குவது தவிர்க்கப்படும்!

மா.சங்கர் சீனிவாசன், ஆசிரியர் (பணி நிறைவு), பாவூர்சத்திரம், தென்காசி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மாவட்டங்களுக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் உபசரிப்பு செலவிற்காக, நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, தமிழக அரசு. பொதுவாக, வி.வி.ஐ.பி., மற்றும் வி.ஐ.பி.,க்கள், உயர் அதிகாரிகள் மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு வரும்போது, அவர்கள் தங்கும் இடம், உணவு, போக்குவரத்து செலவுகள் சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரிகளின் தலையில் விழும். அவர்களும், 'எங்கள் சம்பளத்தில் இருந்தா இதுபோன்ற செலவுகளை செய்ய முடியும்?' என்று கூறி, அதையே சாக்காக வைத்து லஞ்சம் வாங்கி பாக்கெட்டை நிரப்புவர். இனி, அது தவிர்க்கப்படும்! கூடவே, அமைச்சர்கள் மற்றும் முதல்வர் வருகை தரும் போது செய்யப்படும் செலவுகளுக்கும் நிதி ஒதுக்கப்பட்டால், அரசு அதிகாரிகள் அதை சாக்காக வைத்து கைநீட்டுவது தவிர்க்கப்படும்!

வரலாற்றில் நிலைத்து நிற்கலாம்!

பா.பாலசுப்ரமணியன், லாஸ்பேட்டை, புதுச்சேரியில் இருந்து எழுதுகிறார்:'அணைகளை தனியாரே துார் வாரலாமே' எனும் தலைப்பில், இப்பகுதியில் வாசகர் ஒருவர் எழுதி இருந்தார். அவர் கூறியுள்ளது போல் தமிழக அரசு மேட்டூர் அணையை துார்வாரி, காவிரி நீர் ஓடும் பாதையில் ஆங்காங்கே தடுப்பணைகளை கட்டி இருந்தால், இன்று தண்ணீருக்காக கர்நாடகாவிடம் போராடும் நிலை ஏற்பட்டு இருக்காது. கடந்த 59 ஆண்டுகால திராவிட கட்சிகளின் ஆட்சியில், பல லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி, ஊதாரி செலவு செய்தவர்களின் சிந்தனையில், இதுபோன்று உருப்படியான தொலைநோக்கு திட்டங்கள் தோன்றவில்லை. இன்று, 'எல் நினோ' எனும் பருவநிலை மாற்றத்தால் உலகம் முழுதுமே தட்பவெப்ப நிலை தாறுமாறாக உள்ளது. தமிழகத்திலும் வெப்பத்தின் அளவு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. வருண பகவான் கருணை காட்டும் ஆண்டுகளில் மட்டுமே, காவிரி பிரச்னை இல்லாமல் இருக்கிறது. மற்றபடி, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக, இரு மாநிலங்களிலும் குடிநீர் மற்றும் விவசாயத் திற்கான நீர் தேவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. எனவே, இப்பிரச்னைக்கு நீதிமன்றம் முற்று புள்ளி வைத்தாலும், அரசியல்வாதிகள் அதற்கு, 'கமா' போட்டு தொடர்ந்து கொண்டு தான் இருப்பர். அதேநேரம், மத்திய அரசு மனது வைத்தால், தமிழகத்திற்கு மட்டும் சிறப்பு சலுகையாக, அடுத்தாண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி, காவிரியின் பாதையில் மூன்று இடங்களில் அணைகளை கட்டிக் கொடுக்கலாம்! கோதாவரியை, காவிரி யுடன் இணைக்கும் உத்தேச திட்டத்திற்கான செலவில், 10 சதவீதம் கூட இதற்கு ஆகாது. இதன்பின், காவிரி - குண்டாறு - வைகை இணைப்பை தமிழக அரசு, தன் சொந்த நிதியில் செய்து விட்டால், தமிழகம் தண்ணீரில் தன்னிறைவு பெற்று விடும். தற்போது, மத்திய அரசுடன் சமூக உறவு கொண்டுள்ள முதல்வர் விஜய், இதை சாதித்து காட்டினால், அவர் பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கும்!

கபட நாடகம்!

பி.கே.வெங்கட்ராமன், சென்னையில் இருந்து எழுது கிறார்: இன்று, 'நீட்' தேர்வு வேண்டாம் என்று கூறும் தி.மு.க.,வினர், 2010 ல் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது, காங்கிரஸ் கொண்டு வந்த நீட் தேர்வுக்கு வரவேற்பு பத்திரம் வாசித்தது. அதேபோன்று, இன்று மேகதாது அணை கட்ட வேண்டாம் என்று குரல் எழுப்பும் தி.மு.க., காவிரி நதி நீருக்காக, 1924ல் போட்ட 50 ஆண்டு ஒப்பந்தம், 1974ல் முடிவுற்ற போது, அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அதை புதுப்பிக்க துணியவில்லை. அன்று, தங்கள் சுயநலத்திற்காக செயல்படாமல் இருந்துவிட்டு, இன்று போராடுகின்றனராம்! என்னே... ஒரு கபட நாடகம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை