எஸ்.கண்ணப்பன், விருதுநகரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரபு நாடுகளில் தேசிய பாதுகாப்பு, உளவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்குவது வழக்கம். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரை, நடுரோட்டில் துாக்கில் இடுவதும், கற்களால் அடித்துக் கொல்வதும் அங்கு சர்வ சாதாரணம்.அந்த தீர்ப்புகளை விமர்சித்தோ, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளை கண்டித்ததாகவோ நாம் இதுவரை கேள்விப்பட்டது இல்லை.ஆனால், நம் நாட்டிலோ, குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குவதற்கென்றே ஒரு கும்பல் உள்ளது.மனித வெடிகுண்டு, தற்கொலைப் படை தாக்குதல் என, பல அப்பாவி உயிர்களை கொன்ற குற்றவாளிகளுக்கு, சிறை தண்டனை கொடுத்தால், உடனே கொடி பிடித்து, கோஷமிட்டு, தண்டனையை ரத்து செய்து, குற்றவாளியை விடுதலை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதே இந்த கும்பலுக்கு வேலை. மரண தண்டனை என்றால் கேட்கவே வேண்டாம்...ஐ.நா., சபைக்கு கூட அப்பிரச்னையை எடுத்து சென்று, குற்றம் இழைத்தவர்களுக்காக வாதாடுவர். கேட்டால், ஓர் உயிரைப் பறிக்க யாருக்கும் உரிமை இல்லை என்று நியாயம் பேசுவர். குற்றவாளி ஓர் உயிரை கொலை செய்திருக்கிறானே எனக் கேட்டால், கொலைக்கு கொலை தீர்வல்ல என்று வியாக்கியானம் பேசுவர்.இதோ... கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பாறசாலை பகுதியைச் சேர்ந்த ஷாரோன் ராஜ் என்பவரை, அவரது காதலி கிரீஷ்மா, கஷாயத்தில் விஷம் வைத்து கொலை செய்த வழக்கில், அம்மாநில நீதிமன்றம் கிரீஷ்மாவுக்கு துாக்கு தண்டனை கொடுத்துள்ளது. மே.வங்க மாநிலம் கோல்கட்டாவில், பயிற்சி பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராய், குற்றவாளி என அறிவித்துள்ள நீதிமன்றம், அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. இனி, இவர்களுக்காக வக்காலத்து வாங்கி, தண்டனையில் இருந்து அவர்களை தப்பிக்க வைக்க, 'மனித உரிமை ஆர்வலர்கள்' என்ற போர்வையாளர்கள் தயாராகி விடுவர்.நீதி தேவதை, இவர்களுக்கு, குட்டு வைத்தால் நல்லது. துாங்கிட்டிருந்தாரோ சத்யராஜ்?
ரவி
சர்வோத்தமன், கணபதி மாநகர், கோவை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ -மெயில்'
கடிதம்: தமிழகத்தில், கடந்த மூன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில்,
சட்டம் - ஒழுங்கு, போதை கலாசாரம், பாலியல் பலாத்காரம் போன்ற பல்வேறு
பிரச்னைகள் அதிக கவனம் பெற்று, ஆட்சியாளர்களை எதிர்க்கட்சிகள் கடுமையாக
விமர்சனம் செய்து, போராட்டங்கள் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.இந்நிலையில்,
இந்த மூன்று ஆண்டு காலமும் கும்பகர்ணன் போலக் கிடந்த நடிகர் சத்யராஜ்,
திடீரென விழித்து, ஈ.வெ.ரா., குறித்து விமர்சிப்பவர்களை எதிர்க்கத் துவங்கி
உள்ளார். 'தற்போது நிறைய புதுமுகங்கள், ஏதோ அரசியல் செய்ய வேண்டும்
என்பதற்காக, புதுசு புதுசாக ஏதாவது பேசி வருகின்றனர். அவர்களைப் பார்த்து
கோபம் வரவில்லை; பரிதாபம் தான் ஏற்படுகிறது.'சமூக நீதி கோட்பாட்டை,
திராவிட கருத்தியலை மிகப்பெரிய அளவில் அனைத்து இயக்கங்களும், கட்சிகளும்
ஏற்றுக்கொண்டு உள்ளனர். திராவிடம் என்று பெயர் வைத்துள்ள அனைத்து
கட்சிகளும், ஈ.வெ.ரா.,வை ஆதரிப்பவர்கள். திராவிடம் பெயர் இல்லாத பா.ம.க.,
நிறுவனர், வி.சி., கட்சி தலைவர் ஆகியோர் ஈ.வெ.ரா., குறித்த
விமர்சனங்களுக்கு தெரிவித்துள்ள கண்டனத்திற்கு என் நன்றி' எனத் தெரிவித்து
உள்ளார்.மூன்றரை ஆண்டுகளாக, வேங்கை வயல் சம்பவம், பல கொலைகள்,
பாலியல் பலாத்காரங்கள், அண்ணா பல்கலைக்கழக வளாக சம்பவம், 'நீட்' தேர்வு
ரத்து செய்யாதது போன்ற எந்த பிரச்னை குறித்தும், எந்த கருத்தையும்
தெரிவிக்காமல் துாங்கிக் கொண்டிருந்தவர், திடீரென பொங்கி எழுவதைப்
பார்த்தால், கபட நாடகச் சாயம் வெளுத்தது போல் இருக்கிறது.இவரைப்
போன்ற கருத்து கந்தசாமிகள், திராவிட மாடல் ஆட்சியின் அவலங்கள் குறித்து
மவுனம் சாதிப்பதை, தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தைரியம்
இருந்தால், வேங்கைவயல் மற்றும் அண்ணா பல்கலைக்கழக சம்பவங்கள் குறித்து தன்
கருத்தை தெரிவித்து, அதன் பின் பட்டிமன்றத்துக்கு வரலாம். முடியுமா அவரால்? ஏற்றுக்கொள்ள முடியுமா?
சா.பா.குமார்,
சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்து அறநிலையத்
துறையை, தமிழக அறநிலையத் துறையாக மாற்ற வேண்டும்' என தமிழக காங்., கட்சித்
தலைவர் செல்வப் பெருந்தகை சட்டசபையில் திருவாய் மலர்ந்துள்ளார். ஆங்கிலேயர்கள்,
இந்தியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்த, சிந்து என்ற வார்த்தையை, ஹிந்து
என்று மாற்றி விட்டனராம்... இந்த மெத்தப் படித்த மேதாவி, தன் அரிய
கண்டுபிடிப்பை அவிழ்த்து விட்டுள்ளார்!திராவிட மாடல் அரசை
புகழ்ந்தால், வரும் சட்டசபை தேர்தலில் விரும்பிய தொகுதியை பெறலாம்; தேர்தல்
செலவுக்கு நாலு பொட்டிகள் கூடுதலாக கிடைக்கும் என்பதற்காக, இப்படியெல்லாமா
அடிவருடிக் கொண்டிருப்பது?சரி... இவர் சொல்வது போலவே, தமிழக
அறநிலையத் துறை என்று அரசு மாற்றம் செய்யட்டும்... அதேநேரம், இதன் கீழ்
ஹிந்து கோவில்கள் மட்டுமல்லாமல், சர்ச்சுகள், மசூதிகள் என்று அனைத்துமே
ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.வழிபாடு, தொழுகை, பிரார்த்தனை
சம்பந்தமான அனைத்து இடங்களையும், தமிழக அரசின் கீழ் கொண்டு வர வேண்டும்;
தமிழக அரசால் இதை செய்ய முடியுமா? அதைவிடுத்து, வெறுமனே கோவில்
உண்டியல் பணத்தையும் கோவில் நிலங்களையும் ஆக்கிரமித்து, அதன் வருவாயை அரசு
எடுத்துக்கொள்ள நினைத்தால், ஹிந்துக்கள் தொடர்ந்து இளிச்சவாயர்களாக இருக்க
மாட்டார்கள்! தமிழக அரசு பெயரின் கீழ் அறநிலையத்துறை வருமேயானால்,
எல்லா மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்தே
ஆக வேண்டும்! முதல்வர் இதற்கு தயாரா என கேட்டுவிட்டு, செல்வப்பெருந்தகை தன் ஜால்ராவை தட்டட்டும்!