மேலும் செய்திகள்
இது 'சர்க்கார்' படம் அல்ல!
15-Jul-2025
எஸ்.எஸ்.கருப்பையா, தேனியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிவகங் கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் அரங்கேறிய தொடர் கொலைகளும், அடிப்படை வசதிகள் இல்லாதது போன்ற காரணங்களால் மக்கள் கிராமத்தை காலி செய்து வெளியூர் சென்று விட்டனர். ஆனால், ஆளும் தி.மு.க., அரசோ, மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்துவதாகவும், மகளிர் உரிமை தொகையை சேமித்து வைத்து, குடும்பத் தலைவிகள் நகைச்சீட்டு கட்டுவதாகவும், இளம் பெண்கள் மொபைல் போன்கள் வாங்கி, காதலர்களுடன் கடலை போடுவதாகவும், இலவச பஸ் பயணத்தின் வாயிலாக பெண்கள் ஆண்டுக்கு, 10,000 ரூபாய் சேமிப்பதாகவும் கதையளந்து, 'அடுத்து, 50 ஆண்டுகளுக்கும் தமிழகத்தில் கழக ஆட்சிதான்' என்று மார்தட்டி, புளகாங்கிதம் அடைகிறது. ஆனால், நாட்டாகுடி மக்கள் மொத்தமாக ஊரையே காலி செய்து, ஆட்சியாளர்களுக்கு, 'இனிமா' கொடுத்துள்ளனர். குதிரை களவு போன பின் லாயத்தை பூட்டுவது போல், ஊரையே காலி செய்து மக்கள் புறப்பட்டு சென்ற பின், அது குறித்து விசாரித்து அறிக்கை வழங்க எஸ்.பி., சிவபிரசாத்திடம் தெரிவித்துள்ளாராம் சிவகங்கை கலெக்டர் பொற்கொடி. ஆடுகளும், மாடுகளும் கூட இல்லாத ஊருக்குள் சென்று, எவரிடம் எஸ்.பி., விசாரணை நடத்தி, கலெக்டரிடம் அறிக்கை வழங்குவார்? மண்ணிடமும், மரம் - செடி, கொடிகளிடமா? அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர் போன்றவற்றுக்காக, மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில், 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்தில் தமிழகத்திற்கு, 4,835 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. நாட்டாகுடி கிராமத்தை உள்ளடக்கிய மாத்துார் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும், 100 சதவீத குடிநீர் இணைப்பு தந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் கூட இல்லாததால், மக்கள் ஊரையே காலி செய்துள்ளனர். எனில், 4,835 கோடி ரூபாய் எங்கே போனது? 'ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்' என்பது போல், திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாகம் எந்த லட்சணத்தில் உள்ளது என்பதற்கு, நாட்டாகுடி கிராமமே சாட்சி! வரலாறு திரும்பாது! டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 1967, 1977 தேர்தல்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது போல், 2026 சட்டசபை தேர்தலிலும் ஏற்படும்' என பேசியுள்ளார், த.வெ.க., கட்சி தலைவர் விஜய். கடந்த, 1967ல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி, தி.மு.க., ஆட்சிக்கு விதை போட்டவர், அண்ணாதுரை; அதற்கு உரம் போட்டவர் எம்.ஜி.ஆர்., சித்தாந்த ரீதியாக பலம் வாய்ந்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்தாலும், அடித்தட்டு மக்களை ஈர்ப்பதற்கு, எம்.ஜி.ஆர்., எனும் காந்த சக்தி, 1953ல் தி.மு.க.,வுக்கு கிடைத்தது. காங்கிரஸ் மீது ஈர்ப்பும், இறைநம்பிக்கையும் கொண்ட எம்.ஜி.ஆர்., அண்ணாதுரை பேச்சால் ஈர்க்கப்பட்டு, தி.மு.க.,வில் சேர்ந்தது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனை. கடந்த 1962ல் நடை பெற்ற தேர்தலில் எம்.ஜி.ஆர்., செய்த பிரசாரத்தின் பலன், தி.மு.க., பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபையில் அமர்ந்தது; அதற்குப் பரிசாக, அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியை வழங்கினார், அண்ணாதுரை. தன் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் தி.மு-.க., கொடி, சின்னம், அண்ணாதுரை புகைப்படம் , கட்சி கொள்கைகளை திரும்பத் திரும்ப காட்டி, படிக்காத மக்களிடமும் கட்சியை கொண்டுபோய் சேர்த்தார், எம்.ஜி.ஆர்., அதனால் தான், ஒரு முறை, தஞ்சாவூர் வழியாக தி.மு.க., கொடி போட்ட காரில் அண்ணாதுரை பயணம் செய்தபோது, கிராம மக்கள், 'நீங்கள் எம்.ஜி.ஆர்., கட்சியை சேர்ந்தவரா?' என்று கேட்க, அண்ணாதுரையும் சிரித்தபடி, 'ஆமாம், நான் எம்.ஜி.ஆர்., கட்சிக்காரன் தான்...' என்றார். இந்நிலையில், 1967 தேர்தலில் காங்கிரசுக்கு எதிராக அமைத்த பெரும் கூட்டணிக்கு, தி.மு.க.,வை தயார் செய்தார் அண்ணாதுரை. தன்னை கடுமையாக எதிர்த்து வந்த, 'சுதந்திரா காங்கிரஸ்'கட்சி தலைவர் ராஜாஜியை கூட்டணியில் சேர்த்துக் கொண்டார். 'பிராமணர்கள் ஒரு கையில் பூணுாலை பிடித்துக் கொண்டு, இன்னொரு கையில் உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள், காங்கிரஸை வீழ்த்த வேறு வழியில்லை' என்றார் ராஜாஜி. இதுமட்டுமா... காங்., ஆட்சிக்கு எதிராக மொழி, அரிசி பஞ்சம் போன்ற பலம் வாய்ந்த கருத்துகளுடன் பிரசாரம் செய்யப்பட்டது. 'பசியும், பஞ்சமும் மூட்டியவர்களுக்கா உங்கள் ஓட்டு? சோறு சோறு என கேட்கும் மக்களைப் பார்த்து, 'எலிக் கறியை தின்னுங்கள்' என்றனரே, அவர்களுக்கா உங்கள் ஓட்டு?' என்று வாக்காளர்களை கேள்வி கேட்டார் அண்ணாதுரை. 'நாணயத்தின் மதிப்பை குறைத்தவர்கள், நாட்டை ஆளலாமா? சேலம் இரும்பாலை எங்கே?' போன்ற வாசகம் பொருந்திய பதாகைகளை ஏந்தி, மூலை முடுக்கெல்லாம் பிரசாரம் செய்தனர். அச்சமயம், தேர்தல் பிரசாரத்திற்காக தி.மு.க., பெரிதும் நம்பி இருந்த எம்-.ஜி.ஆரை, எம்.ஆ-ர். ராதா -துப்பாக்கியால் சுட்டார்; செய்தி காட்டுத் தீ போல் பரவ, மக்கள் கதறி அழுதனர். கழுத்தில் கட்டு போடப்பட்ட நிலையில், எம்.ஜி.ஆர்., போஸ்டர்கள் தமிழகமெங்கும் ஒட்டப்பட்டது. இதுவே, 1967ல் தி.மு.க., ஆட்சிக்கு வர பிள்ளையார் சுழி போட்டது. இந்நிலையில், கார் விபத்தில் காயம் அடைந்த கா மராஜர், 'நான் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன்' என்றார். ஆனால், அதற்கு நேர் மாறாக விருதுநகரில் தோற்றது மட்டுமில்லாமல், காங்கிரஸ் ஆட்சியும் வீழ்ந்தது. அதேநேரம், தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில், பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றதுடன், படுத்துக் கொண்டே காங்., ஆட்சியை வீழ்த்தினார் எம்.ஜி.ஆர்., அதனால்தான் புதிய அமைச்சரவைக்கான பெயர்ப் பட்டியலை சென்னை, ராயப் பேட்டை மருத்துவமனையில் இருந்த எம்.ஜி.ஆரிடம் காண்பிப்பதற்காக கே.ஏ. மதியழகனை அனுப்பி வைத்தார் அண்ணாதுரை. இதுவே, 1967ல் நடந்த ஆட்சி மாற்ற வரலாறு. தன் மீது மக்கள் வைத்திருந்த ஆழமான நம்பிக்கையை வைத்துதான், 1977ல் கருணாநிதி ஆட்சியை அகற்றினார் எம்.ஜி.ஆர்., இதுதான் 1967, 1977ல் நடந்த ஆட்சி மாற்ற வரலாறு. எம்.ஜி.ஆரோடு இந்த வரலாறுக்கு முடிவுரை எழுதப்பட்டு விட்டது; அதை திருப்பி எழுத எந்த நடிகராலும் முடியாது. தி.மு.க., ஆட்சியை அகற்றியே -ஆக வேண்டும் என்று விஜய் நினைத்தால், ஒன்று தன் தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணி அமைக்க வேண்டும் இல்லை என்றால், பலம் வாய்ந்த கூட்டணியில் சேரவேண்டும். இது எதுவும் இல்லாமல், பனையூரில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருக்கும் முதல்வர் அறைக்கு செல்ல நினைத்தால், அது கனவில் தான் நடக்கும்!
15-Jul-2025