உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இது உங்கள் இடம்: நவ. 20

இது உங்கள் இடம்: நவ. 20

தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா!

எஸ்.கந்தவடிவேல், மதுரையில் இருந்து எழுதுகிறார்: தேர்தல் காலங்களில் தமிழக வேட்பாளர்கள், பெண்களின் ஓட்டுகளை கவர, தோசை, இட்லி சுட்டும், சமையல் செய்தும், ஆண்களின் ஓட்டுகளை கவர, டீ கடைகளில் டீ போட்டுக் கொடுத்தும், பரோட்டா சுட்டும், மாவை பிசைந்து கொடுத்தும் ஓட்டுகளை பெற்றனர். தமிழக வேட்பாளர்களை பின்பற்றி, அமெரிக்காவில் நடந்து முடிந்த இடை தேர்தலில், வாக்காளர்களை கவர தோசை சுட்டுக் கொடுத்தும், சாமி கும்பிட்டும் நுாதன பிரசாரத்தில் ஈடுபட்டனர், அந்நாட்டு வேட் பாளர்கள். ஆனாலும், அதிபர் டிரம்பின் குடியரசு கட்சியினர் சுட்ட தோசை பிடிக்கவில்லை போலும்; தோல்வியை பரிசளித்து விட்டனர். எதிர்க்கட்சியினர் சுட்ட தோசையின் ருசி பிடித்து, அவர்களை வெற்றி பெற வைத்து விட்டனர், அமெரிக்கர்கள். எப்படியோ, தமிழக அரசியல்வாதிகளின் இந்த தேர்தல் கால, 'அட்ராசிட்டி' அமெரிக்க வரை எதிரொலித்துள்ளதை நினைக்கும் போது, 'தமிழன் என்று சொல்லடா; தலை நிமிர்ந்து நில்லடா' என்று பாட்டுப் பாடத் தான் தோன்றுகிறது! lll

ராகுலின் போராட்டம் வெற்றியடையாது!

க.சண்முகசுந்தரம், பொள்ளாச்சி, கோவை மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: கடந்த 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தங்களை, பிரதமர் மோடி வெளியேற்றி விட்டாரே என்ற ஆதங்கத்திலும், மோடி பிரதமராக இருக்கும் வரை, தான் ஆட்சிக்கு வர முடியாது என்ற கோபத்திலும், நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, மக்கள் புரட்சி வாயிலாக ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று கணக்கு போட்டே, கடந்த சில மாதங்களாக டில்லியை போராட்ட களமாக மாற்றி வருகிறார், காங்கிரஸ் எம்.பி., ராகுல். எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தாலும், இவர் வெற்றியடையப் போவதில்லை. ஏனெனில், மக்கள் ஆதரவு இல்லாத போராட்டங்கள், மழைக் காலத்து வானவில் போல், வெறும் கோஷத்துடன் காணாமல் போய் விடும். கடந்த 2014 தேர்தலில் மோடி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின், நாடு பல துறைகளில் முன்னேறி வருவதுடன், இந்திய பொருளாதாரம் வலுவடைந்து, உலகில் நான்காவது பெரிய பொருளாதார நாடாக விளங்கி வருகிறது. உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, மோடி ஆட்சி அமைந்த பின், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை, 27.1 சதவீதத்திலிருந்து, 2.6 சதவீதமாக குறைந்துள்ளது. அதாவது, வறுமைக் கோட்டிற்கு கீழிருந்த கிட்டத்தட்ட, 49.6 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டு முன்னேறியுள்ளனர். மேலும், மேற்காசியப்போர் நெருக்கடி, அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல்களுக்கிடையே, இந்திய பொருளாதார வளர்ச்சியை நிலைகுலையாமல் காத்து வருவதுடன், ஏற்றுமதியில், அமெரிக்க சந்தைக்கு மாற்றாக, 38 வளர்ந்த நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்டு, இந்திய பொருட்கள் ஏற்றுமதிக்கு புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்துள்ளார், பிரதமர் மோடி. அதுமட்டுமல்ல... வரும் டிசம்பரில், ஐரோப்பிய யூனியனுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வரவுள்ளது. இதன்வாயிலாக, நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் எட்டு லட்சம் கோடி டாலர்கள் மதிப்பிலான சந்தை வாய்ப்பை பெற உள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கும்போது, நாட்டின் முன்னேற்றத்திற்கு எவ்வித தொலைநோக்கு திட்டங்களும் இல்லாமல், வெறுமனே குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில், ராகுல் எத்தனை போராட்டங்களை முன்னெடுத்தாலும், அவை வெற்றியடைய போவதில்லை என்பதே நிதர்சனம். இந்த உண்மையை உணர்ந்து, ஆக்கப்பூர்வமான அரசியலில் ராகுல் ஈடுபட வேண்டும்! lll

புதிய ரூபாய்

நோட்டுகளை

அச்சடியுங்கள்!

எஸ்.கவுரி மீனாட்சி, மதுரையில் இருந்து எழுதுகிறார்: பத்து ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இருக்கும் அளவுக்கு, 20 ரூபாய் நாணயங்கள் இல்லை. பயணத்தின் போதும், பொருட்கள் வாங்கும்போதும், பழைய, 10, 20 ரூபாய் தாள்களே கிடைக்கின்றன. ஒவ்வொரு முறையும் இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கும்போது, 'இது செல்லுமா...' என்று பார்த்து வாங்க வேண்டியுள்ளது. காரணம், அந்த அளவு இந்த நோட்டுகள் நைந்தும், கிழிந்த நிலையிலும் தான் நம்மிடம் வருகின்றன. எனவே, புதிய, 10, 20 ரூபாய் தாள்களையும், 20 ரூபாய் நாணயங்களையும் அதிகளவில் இந்திய ரிசர்வ் வங்கி வழங்க வேண்டும்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ