உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இது உங்கள் இடம்: நவ. 5

இது உங்கள் இடம்: நவ. 5

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா?

எஸ்.ஆர்.த்ராவிட், ைஹதராபாதில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: மழை, மரம், மண் இம்மூன்றும் நீர் மேலாண்மையை சீர்படுத்துவதில் முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஆனால், நாம் மரம் வளர்ப்பதிலும் அக்கறை காட்டுவதில்லை; மண் வளத்தை பராமரிப்பதிலும் சிரத்தை செலுத்துவதில்லை. என் சிறு வயதில், அதாவது, 1967க்கு முன், சாலைகள் போடும்போது, பழுதான சாலையை நன்றாக கொத்தி, அந்த இடத்தில் பெருஞ்சல்லி போட்டு, அதன்மீது பேபி ஜல்லி போட்டு சாலை அமைப்பர். அதேபோல, சாலையின் இருபுறங்களிலும் இரண்டு முதல் மூன்று அடி வரை மணல் இருக்கும்; இம்மணலில் சிறு செடிகள், மரங்கள் வளர்ந்திருக்கும். சில மரங்கள் நன்றாக வேர்விட்டு பெரியதாகவே இருக்கும். தற்போதோ, சாலை பழுது படும் போதெல்லாம், அதன் மீதே மேலும் மேலும், ஜல்லிகளை கொட்டி சாலையை மேடுபடுத்துகின்றனர். இதனால், கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வொரு சாலையும், 4 அடிக்கு உயர்ந்து விட்டது. இதனால், வீடுகள் தாழ்ந்து போகின்றன. விளைவு... சிறு மழைக்கும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுகிறது; வீட்டின் முன்புறம் தண்ணீர் தேங்குகிறது. மேலும், சாலையின் இரு புறங்களில் மணல் மேடு இல்லாமல், தார் சாலை அமைப்பதால், மழைநீர் வேகமாக ஓடி, ஏதாவது ஒரு இடத்தில் குட்டை போல தேங்குகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். சாலை அமைப்போர், சாலையை நன்றாக கொத்தி, சாலை எந்த மட்டத்தில் இருந்ததோ, அதே மட்டத்தில் அமைக்க வேண்டும்; இரு புறமும் மூன்றடி அகலத்திற்கு மண் அணைக்க வேண்டும். அப்போது தான், அதில் சிறு தாவரங்களும், மரங்களும் வளர்ந்து மண்ணின் வளத்தை காக்கும்! மரங்கள் வெறும் நிழல் தருபவை மட்டுமல்ல; மழைநீர் மண்ணுக்குள் ஊடுருவ உதவுவதுடன், மழைநீர் வேகமாக வழிந்தோடுவதையும், சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதையும் கட்டுப்படுத்த உதவுகின்றன. ஆனால், மரத்தின் அருமை தெரியாமல், பல ஆண்டுகளாக நிழல் தந்து கொண்டிருக்கும் புளியமரம், வேப்பமரம், புங்கை மரங்களை வெட்டி விட்டு, அந்த இடத்தில் பல லட்சம் ரூபாய் செலவில் கான்கிரீட் நிழற்குடை அமைக்கின்றனர். கண்ணை விற்று சித்திரம் வாங்குவது போல், இயற்கை அமைத்த நிழற்குடையை அகற்றி விட்டு, கான்கிரீட் நிழற்குடை அமைக்கலாமா? மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும்! lll

முதல்வர் கவனமாக இருக்க வேண்டும்!

சி.சுருதி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி, லஞ்சமாக, 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த வழக்கில், தி.மு.க., முன்னாள் அமைச்சர் மகேஷை போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அப்போது, அக்கட்சியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அதில், வேலுார் மாநகராட்சி கவுன்சிலர் டீட்டா சரவணன், ‘கரூரில் வைத்து கதையை முடித்திருந்தால், இந்த நிலை வந்திருக்குமா தலைவரே...’ என்று மகேஷிடம் கூறியுள்ளார். இதிலிருந்து, கரூர் சம்பவம், தி.மு.க.,வினரின் திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. அது தொடர்பாக, தீவிரமாக விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். அதேபோல், முதல்வர் விஜய் எங்கு சென்றாலும், கட்டுக்கடங்காத கூட்டம் கூடுகிறது. விஜயின் கூட்டங்களுக்கு வருவோரில் பெரும்பாலானோர் அவரது நலம் விரும்பிகளாகத் தான் இருப்பர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அந்த கூட்டத்தினரிடையே, கரூரில் செருப்பை எறிந்த விஷமிகள் போல் சிலரும் இருக்கக் கூடும். எனவே இனி, வெளியில் சாப்பிடுவது, கூட்டத்தினர் கொடுக்கும் உணவுப் பண்டங்களை உண்பதை, தொண்டர்கள் மனம் புண்படாத வகையில் விஜய் தவிர்க்க வேண்டும். எதிரிகள் எந்த ரூபத்திலும் வரலாம்; எனவே, பாதுகாப்பு விஷயத்தில் முதல்வர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !