இது உங்கள் இடம்: அக். 16
நிர்ப்பந்திக்க முடியாது!
வி.எச்.கே.ஹரிஹரன், திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: தமிழகத்தில் இதுவரை நடந்துள்ள இடைத்தேர்தல் கள் ஆளுங்கட்சிக்கு தான் வெற்றியை தந்துள்ளன. அவ்வகையில், -----மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெற்றியை தந்தாலும், தி.மு.க., – அ.தி.மு.க., – நாம் தமிழர், கம்யூ., கட்சிகளுக்கு இருக்கும் ஓட்டு வங்கியும் வெளிச்சத்திற்கு வந்து விட்டது. சட்டசபை தேர்தலில், 24 கட்சிகளுடன் கூட்டணி வைத்தும், தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் தி.மு.க., இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தை தான் பிடித்தது. ஆனால், இடைத்தேர்தலில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தவிர, பெரிதாக எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமலேயே, தி.மு.க., இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. அதிலும், தாராபுரம் தொகுதியில், 7,000 ஓட்டுகள் தான், தி.மு.க.,விற்கு குறைந்துள்ளன. இதிலிருந்து, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் என, இந்த நான்கு கட்சிகளுக்கும் சேர்த்தே, மொத்தம், 7,000 ஓட்டுகள் தான் உள்ளன என்பதும், அதில், 1,000 ஓட்டுகள் மட்டுமே கம்யூ., கட்சியினரின் ஓட்டு வங்கி என்பதும், வெட்டவெளிச்சமாகி விட்டது. மதுராந்தகம் தொகுதியிலும், சட்டசபை தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் அமுலு பொன்மலரை விட, இடைத்தேர்தல் வேட்பாளர் பரந்தாமன், 5,000 ஓட்டுகளே குறைவாக பெற்றுள்ளார். இந்த சொற்ப ஓட்டுகளுக்காகத் தான், விக்கிரமாதித்தன் வேதாளத்தை சுமந்தது போல், தி.மு.க., இத்தனை காலமும் இக்கட்சிகளை தோளில் சுமந்துள்ளது. கூட்டணி கட்சிகள், தி.மு.க.,வுக்கு அனாவசிய, ‘லக்கேஜ்’ என்பதை தெரிந்து கொண்டதால் தான், ‘தோல்வியிலும் இது, தி.மு.க., வெற்றி’ என்று கூறியுள்ளார், அக்கட்சி தலைவர் ஸ்டாலின். கூட்டணியை விட்டு ஓடியவர்கள் வருங்காலத்தில் திரும்பி வந்தாலும், ‘கொடுப்பதை கொடுங்கள் எஜமான்’ என்று கைகட்டி வாய் பொத்தி, தி.மு.க., கொடுக்கும் இடங்களை வாங்கிக் கொள்ள வேண்டிவருமே தவிர, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், ‘டிமாண்ட்’ வைத்தது போல், அதிக இடங்கள் கேட்டு நிர்ப்பந்திக்க முடியாது ! அதே நிலைப்பாட்டை எடுப்பரா?
வ.உதயகுமார், சென் னையில் இருந்து எழுதுகிறார்: சென்னையில், கடற்கரை யோரம் விதிமீறி கட்டியுள்ள, 120 பங்களா உரிமையாளர்களுக்கு, 15 நாட்களுக்குள் பங்களாவை காலி செய்ய கெடு விதித்து மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீர்நிலைகள், மலை அடிவாரங்கள் மற்றும் மலைப்பகுதிகள் ஆக்கிரமிப்புகள் கண்டு கொள்ளப்படாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உறுதுணையாகவும் இருந்து வந்தன, கழக அரசுகள். அதுமட்டுமல்ல... ஆளுங்கட்சியினரின் ஆசியுடன் தான், இதுபோன்ற சட்டமீறல்கள் நடக்கின்றன என்றால், அது மிகையில்லை. அதிலும், சட்டம் பயின்றவர்கள், அரசு உயர் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., போன்ற உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளவர்கள் அனேகம் பேர், இதுபோன்ற சட்டமீறல்களை துணிந்து செய்கின்றனர். நடவடிக்கை எடுக்கப்பட்டால், ஆளும் அரசை அணுகி, விதிவிலக்கு வாங்கிக் கொள்ளலாம் என்ற அசட்டையே இதற்கு காரணம்! சமூக ஆர்வலர்கள் எவராவது விதிமீறல் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாலும், வழக்கு இழுத்தடிக்கப்படுகிறதே தவிர, உடனடியாக தீர்ப்பு கிடைப்பதில்லை! ‘சட்டம் ஈக்களை பிடிக்கும்; குளவிகளை தப்ப விடும்’ என்று அறிஞர் பிளாட்டோ கூறியது முற்றிலும் சரியே! தற்போது விதிமீறி கட்டிய பங்களாக்களில் பல, அரசி யல்வாதிகள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு சொந்தமானது என்கின்றனர். தஞ்சாவூர் மாவட்டம், சாஸ்த்ரா பல்கலை நில ஆக்கிரமிப்பு வழக்கில், அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர்கள், ‘அரசின் நிலங்களை ஆக்கிரமிக்கப்படுவதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது’ என்று வாதி ட்டனர். தற்போது, இந்த வழக் கிலும் அதே நிலைப்பாட்டை எடுப்பரா?