இது உங்கள் இடம்: அக். 17
ஆதரவுக்கும் எதிர்ப்புக்கும் காரணம் என்ன?
வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘கடந்த மூன்று பார்லிமென்ட் தேர்தலிலும் ஆளுங்கட்சிக்கு எதிராக எந்த அலையுமில்லாமல், பா.ஜ., கூட்டணியே எப்படி வெற்றி பெற்று வருகிறது? ஓட்டு திருட்டு இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும்?’ என்ற கேள்வி எழுப்பியுள்ளார், காங்கிரஸ் எம்.பி., ராகுல். ஓர் ஆளுங்கட்சிக்கு தேர்தலில் மக்கள் ஆதரவோ, எதிர்ப்போ தருவது அக்கட்சியின் செயல்பாட்டை பொறுத்து அமைவது! கடந்த 2014ல் காங்., தோற்றதற்கு ஓட்டு பதிவு இயந்திரமோ, தேர்தல் ஆணையமோ காரணம் அல்ல; பொருளாதார வீழ்ச்சி, குறைந்து வந்த இந்திய ரூபாயின் மதிப்பு, பணவீக்கம், விலைவாசி உயர்வு, அனைத்து துறைகளில் நீக்கமற நிறைந்திருந்த ஊழல்களே காரணம்! கூடவே, எங்கே, எப்போது பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வெடிக்க வைப்பரோ என்று மக்கள், தங்கள் உயிருக்கு பயந்த காலகட்டம் அது! இதில், நக்சல்களின் அட்டகாசம் வேறு! ஒட்டுமொத்த காஷ்மீருமே பயங்கரவாதிகளின் புகலிடமாக இருந்தது. இதற்கெல்லாம் தீர்வு காண முடியாத, கையாலாகாத அரசாக அன்றைய காங்., இருந்தது. அதனாலேயே, 2014 தேர்தலில் காங்., தோல்வியுற்றது. காங்., செய்த தவறுகள் அனைத்தும், பா.ஜ., ஆட்சியில் சரி செய்யப்பட்டன. இதுவரை ஆண்ட எந்த அரசும் கையில் எடுக்க துணியாத, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கி, இந்தியாவில் அதுவும் ஒரு மாநிலம் என்ற நிலையை உண்டாக்கி, பயங்கரவாதத்தையும் கட்டுப்படுத்தியது. பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை இயலாமையுடன் வேடிக்கை பார்த்த நிலை மாறி, பதிலடி தரத் துவங்கியது. நக்சல்கள் ஒழிக்கப்பட்டனர். ஊழல் ஒழிக்கப்பட்டது; இன்று, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்ந்துள்ளது என்றால், அதற்கு காரணம், பிரதமர் மோடியின் நிர்வாகத் திறன்! எனவே தான், மக்கள் மத்தியில் பா.ஜ., ஆட்சிக்கு எதிர்ப்பு அலை இல்லை. இந்த உண்மை புரியாமல், ‘அதெப்படி எதிர்ப்பு அலை இல்லாமல் இருக்கும்...’ என்று கேட்பது, சிறுபிள்ளைத்தனமான பேச்சு! ஓர் அரசுக்கு ஆதரவும், எதிர்ப்பு அலையும் உருவாக, ஓர் அரசின் செயல்பாடுகள் தான் காரணமே தவிர, வாக்காளர் பட்டியல் அல்ல என்பதை ராகுல் உணர்ந்து, அதற்கேற்ப தன் செயல்பாட்டை மாற்றிக் கொண்டால், இனி வரும் காலத்திலாவது, இழந்த செல்வாக்கை மீட்கலாம்! lll
அன்புமணி சுயபரிசோதனை செய்து
கொள்வாரா?
டி.ஈஸ்வரன், சென்னையில்இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘சட்டசபை தேர்தலில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தற்போது நடந்த இடைத்தேர்தலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தோல்விக்கான காரணத்தை கண்டறிய, கட்சி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’ என்று கூறியுள்ளார், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி. சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., அளித்த ராஜ்யசபா எம்.பி., பதவியையும், 17 எம்.எல்.ஏ., சீட்டையும் பெற்று, தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்காக பிரசாரம் செய்தார், அன்புமணி. அப்போது, பா.ஜ., தலைவர்கள், ‘தேசிய ஜனநாயக கூட்டணி தான் தலைமை தாங்குகிறது; உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வரை தேர்வு செய்வார்’ என்றனர். இதுகுறித்து, அன்பு மணியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘கூட்டணிக்கு தலைமை அ.தி.மு.க., தான்; முதல்வர் வேட்பாளர் பழனிசாமி தான். தமிழக சட்டசபை தேர்தலுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி பொருந்தாது’ என்று கோபத்துடன் பதிலளித்து, அந்தப் பேச்சுக்கே முற்றுப்புள்ளி வைத்தார். அதே அன்புமணியிடம், ‘இடைத்தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளிக்காத பா.ம.க., கூட்டணியில் நீடிக்கிறதா?’ என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘தேசிய ஜனநாயக கூட்டணியில், பா.ம.க., இடம் பெற்றுள்ளது’ என்று கூறி, அ.தி.மு.க.,வை இருட்டடிப்பு செய்து, மழுப்பலாக பதில் அளித்தார். அதுமட்டுமல்ல... தாராபுரம், மதுராந்தகம் அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தபோது, ‘இது ஜனநாயகமா... இடைத்தேர்தலில் அவர்களை தோற்கடிப்பே ன்’ என்று சபதம் எடுத்தார், அன்புமணி. அதேநேரம், இடைத்தேர்தலில் அவர்களை எதிர்த்து போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதுடன், அவர்கள் வெற்றி பெற்றதும், ‘ஜனநாயக முறையில் வெற்றி பெற்றுள்ளனர்’ என்று வாழ்த்தியுள்ளார். இப்படி நேரத்திற்கு ஒரு பேச்சு பேசும் அன்புமணி, பழனிசாமிக்கு அறிவுரை கூறுகிறார். பழனிசாமி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்கிறாரோ இல்லையோ, நேரத்துக்கு ஏற்ப, தான் எடுத்து வரும் அரசியல் நிலைப்பாடு குறித்து, அன்புமணி சுயபரிசோதனை செய்ய வேண்டும்! lll