இது உங்கள் இடம்: அக். 23
‘தினமலர்’ நாளிதழின் பணி தொடரட்டும்!
கே.ராமநாதன், மதுரையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ----------------------------------------------------- ஒவ்வொரு ஆண்டும், ‘அரிச்சுவடி’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக, ‘தினமலர்’ நாளிதழ், குழந்தைகளுக்கு தமிழ் மொழித் தொடர்பினை ஏற்படுத்தும் அரிய சேவையை செய்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. ‘தமிழ் என் மூச்சு; தமிழுக்காக உயிரையும் கொடுப்பேன்’ என, அரசியல்வாதிகள் வெட்டி முழக்கம் செய்கின்றனரே தவிர, தமிழுக்காக எந்த ஆக்கப்பூர்வமான செயல்களும் செய்வதில்லை. ஆனால், அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியை, பிஞ்சுக் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக, அரிச்சுவடி என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது, ‘தினமலர்’ நாளிதழ். கல்வி எனும் முதல் படியில் அடியெடுத்து வைக்க இருக்கும் மழலைகளின் கைப்பிடித்து, ‘அ, ஆ’ என அரிச்சுவடி பயிற்றுவிப்பது, அக்குழந்தைகளின் கல்விக்கு போடும் முதல் அச்சாரமாக இருப்பதுடன், இதுபோன்ற நிகழ்வுகள், பெற்றோர் நெஞ்சில் அளவிட முடியாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும். தமிழுக்காகவும், தமிழர்களின் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் விதமாகவும் இந்த அற்புதத் தொண்டை, எந்தவித எதிர்பார்ப்போ, ஆடம்பரமோ இல்லாமல், ஒரு கடமையாகச் செய்து வரும், ‘தினமலர்’ நாளிதழின் பணி என்றென்றும் தொய்வின்றி தொடரட்டும்! lll கொள்ளை போவதை தடுக்க முடியாது!
எஸ்.வேலுமணி, சென் னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கடந்த 2017ல், ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் அமைந்துள்ள நாகபாளையம் பொன்னாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான, ஒரு ஏக்கர், 10 சென்ட் நிலத்தை, அப்போதைய தற்காலிக அறங்காவலர், தாலுகா அலுவலகம் கட்டுவதற்காக, அரசுக்கு தானப் பத்திரமாக வழங்கியுள்ளார். கலெக்டர், தாசில்தார் ஆகியோரை பிரதிநிதிகளாக கொண்ட குழு, அந்த தானத்தை ஏற்று, இப்போது, அந்த நிலத்தில் தாலுகா அலுவலகமும் கட்டப்பட்டு விட்டது. இதில், சம்பந்தப்பட்ட கோவில் நிலம், வழிபாடு மற்றும் பராமரிப்புக்காக வழங்கப்பட்ட இனாம் நிலமாம்! கோவில்கள் மற்றும் வீடுகளில் கடவுளுக்கு பிரசாதம் நிவேதனம் செய்து வழிபடுகிறோம். என்னதான் சுவாமிக்கு படைக்கப்பட்டாலும், அந்த பிரசாதங்களை சுவாமி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. சிறிது நேரம் பொறுத்து, நிவேதனம் செய்த நாம் தான், அவற்றை எடுத்து சாப்பிட்டு மகிழ்கிறோம். அதைப்போன்று, ‘நாகபாளையத்தில் அருள் பாலிக்கும் பொன்னாட்சியம்மனா வந்து, அந்த நிலத்தில் கட்டடம் கட்டி குடியேறப் போகிறாள்’ என்று நினைத்து, ஆட்சியாளர்கள், அந்த நிலத்தை கையகப் படுத்தி, கட்டடம் கட்டி, தாலுகா அலு வலகத்தையும் குடியமர்த்தி விட்டனர். இதுபோன்று, கோவில் சொத்துக்கள், 1967 முன் வரை இருந்த காங்கிரஸ் ஆட்சியில், சுருட்டப்பட்டதில்லை. ‘கோவில்கள் வேண் டாம் என்று கூறவில்லை; கோவில்கள் கொள்ளையரின் கூடாரமாக மாறக் கூடாது’ என்று, பராசக்தி திரைப்படத்தில் வசனம் எழுதிய கருணாநிதியின் கையில் எப்போது ஆட்சி அதிகாரம் சென்றதோ அதன் பின் தான், கோவில்கள் கொள்ளையரின் கூடாரமாகி போனது. மாவட்ட செயலர்களும், வட்ட செயலர்களும், கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்டனர். இவர்களின் ஒரே வேலை, கோவிலுக்கு எங்கெங்கே, என்னென்ன சொத்துக்கள் உள்ளன என்று கணக்கெடுப்பது தான்! அதைத்தான், கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த இரு திராவிட கட்சி அரசுகளும் செய்து வந்திருக்கின்றன. இப்போது கணக்கெடுத்து பார்த்தால், 1967 முன், கோவில்களுக்கு சொந்தமாக இருந்த பெரும்பாலான நிலங்கள் இன்று, உடன்பிறப்புகளுக்கு உரிமையாகி இருக்கும். இவை தடுக்கப்பட வேண்டுமாயின், மன்னர்கள் ஆட்சியில் கோவில் சொத்துக்கள் அனைத்தும், எப்படி அந்தந்த ஊர் பெரிய மனிதர்களின் பராமரிப்பில் இருந்ததோ, அதேபோன்று மீண்டும் ஏற்படாத வரை, கோவில் சொத்துக்கள் கொள்ளை போவதை யாராலும் தடுக்கமுடியாது! lll