உள்ளூர் செய்திகள்

இது உங்கள் இடம்

 கேலிக்கூத்து!

எஸ்.ராமசுப்ரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில், கண்காணிப்புகளை தீவிரப் படுத்தும்படி உளவுத் துறை, அமலாக்கத் துறை உள்ளிட்ட மத்திய விசாரணை மற்றும் பாதுகாப்பு முகமைகளுக்கு தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. கள்ளன் பெரிதா, காப்பான் பெரிதா என்று கேள்வி எழுப்பினால், கள்ளன் வென்றதாகத் தான் வரலாறு கூறுகிறதே தவிர, காப்பான் வென்றதாக சரித்திரமே கிடையாது! அதன்படி, தேர்தல் கமிஷன் அறிவிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்பே, பிரதான ஆளுங்கட்சியான, தி.மு.க., தன் பணப்பட்டுவாடாவை சீரும் சிறப்புமாக நடத்தி முடித்து விட்டது. புலனாய்வு அமைப்புகளும், அரசு அமைப்புகளும் நடத்தும், 'ஸ்டிங் ஆப்பரேஷனி'ல் சிக்கி தவிக்க, தி.மு.க.,வினர் ஒன்றும் பா.ஜ.,வைச் சேர்ந்த பங்காரு லட்சுமணனோ, நயினார் நாகேந்திரனோ அல்லவே! இதுவரை நடந்த தேர்தல்களில், தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள உச்சவரம்புக்கு மேலாக பணம் எடுத்துச் சென்றதாக அப்பாவி குடும்பஸ்தர்களும், வியாபாரிகளும் தான் பறக்கும்படை வலையில் சிக்கியுள்ளனரே தவிர, பெரும்பாலும் அரசியல்வாதிகள் பிடிபடுவதில்லை. மேலும், தலைவர்களின் சிலைகளை துணியால் மூடவும், அரசியல்வாதிகளின் படங்கள் பொறித்த சுவரொட்டிகள், போஸ்டர்கள் மற்றும் பேனர்களை நீக்கவும், அரசு கார்களில் உள்ள தேசியக் கொடியை அகற்றவும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்று விடுமா? சிலைகளை துணியால் மூடி, போஸ்டர்களில் உள்ள படங்களை அப்புறப்படுத்தி விட்டால், ஓட்டளிக்கும் மக்களுக்கு எதுவும் தெரியாமல் போய் விடுமா அல்லது காரிலுள்ள கொடியை அகற்றுவதால் அமைச்சர் என்ற பதவியும், அது கொடுக்கும் அதிகாரமும், 'அம்பேல்' ஆகி விடுமா? கொடியை அகற்றினாலும், போர்டை நீக்கினாலும், போஸ்டர்களை கிழித்தாலும், அமைச்சர் என்ற பதவியும், அதிகாரமும் அவர்களுடன் தானே இருக்கிறது? எனவே, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டுமென்று தேர்தல் கமிஷன் விரும்பினால், தேர்தல் தேதி அறிவித்ததும், நடத்தை விதிகள் அமலுக்கு வருவதாக கூறும் நிமிடம் முதல், மாநிலம் என்றாலும், மத்திய அரசு என்றாலும் அமைச்சரவைகள் அனைத்தும் உடனடியாக பதவி விலக வேண்டும். மாநிலத்தின் நிர்வாக பொறுப்பு முழுதும் கவர்னரின் கையிலும், மத்திய நிர்வாக பொறுப்பு ஜனாதிபதியிடமும் வந்து விட வேண்டும். தேர்தலை நடத்தும் பொறுப்பும், கடமையும் முறையே கவர்னரிடமும், ஜனாதிபதியிடமும் தான் இருக்க வேண்டும். அப்படி நடந்தால் தான், அது ஜனநாயக முறைப்படியான தேர்தல்! மேலும், ஒரு வாக்காளருக்கு என்ன உரிமைகள் உள்ளதோ, அந்த உரிமைகள் மட்டும் தான், போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் இருக்க வேண்டும். இது எதுவும் நடக்காமல், தற்போது தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருப்பது போல நடக்கும் தேர்தல் என்பது, ஜனநாயகத்தை போற்றும் தேர்தல் அல்ல; ஜனநாயகத்தின் பெயரை சொல்லி நடத்தும் கேலிக்கூத்து! lll ஏமாற்றுவோருக்கு வெற்றி தகுமா? ஜெ.கோபாலசுவாமி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகளான இலவச மின்சாரம், மாதாந்திர உதவித்தொகை, கடன் தள்ளுபடி போன்றவை கட்சி நிதியிலிருந்து வழங்கப்படுவதில்லை; அவை, வரி வருவாயிலிருந்தும், எதிர்கால தலைமுறை செலுத்த வேண்டிய பொதுக்கடனிலிருந்தும் வழங்கப்படுகின்றன. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பொதுப்பணம் குறித்து மிகத்தெளிவாக வரையறை செய்துள்ளது. சட்டப்பிரிவு 266-ன் படி, அரசின் அனைத்து வருவாயும், 'திரள் நிதியத்திற்கு' செல்ல வேண்டும். சட்டப்பிரிவு, 282 பொது நோக்கங்களுக்காக மானியம் வழங்க அனுமதித்தாலும், அரசு கருவூலத்தை, ஒரு கட்சி அரசியல் தேர்தல் நிதியாக மாற்ற, சட்டம் அனுமதிக்கவில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பொதுச் சொத்துகளின் அறங்காவலர்களே தவிர, தனிப்பட்ட முறையில் தானம் வழங்கும் வள்ளல்கள் அல்ல! அதேநேரம், தேர்தல் ஆணையத்திற்கு, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் குறைவாகவே உள்ளது. காரணம், 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தல்களில் இரு திராவிட கட்சிகளும் 'டிவி' காஸ் அடுப்பு, கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி, மடிக்கணினி போன்ற பல்வேறு இலவச திட்டங்களை தங்கள் தேர்தல் அறிக்கையாக வெளியிட்டன. இதை எதிர்த்து, தமிழகத்தை சேர்ந்த பாலாஜி என்பவர், அரசு கருவூலத்திலிருந்து செய்யப்படும் இந்த செலவினம் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு சென்ற போது, தேர்தல் அறிக்கைகளில் வாக்குறுதிகளை அளிப்பது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 123-ன் கீழ், ஊழல் செயல் ஆகாது என்று தீர்ப்பளித்திருந்தது, நீதிமன்றம். கடந்த 2013-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய இத்தீர்ப்பைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகளில் சில வழிகாட்டுதல்கள் சேர்க்கப்பட்டன. எனினும், இவை வெறும் அறிவுரைகளே தவிர, கட்டாயமானவை அல்ல. இந்நிலையில் தான், 2022-ல் உச்ச நீதிமன்றம் இது குறித்து, 'இலவசங்கள் மாநில அரசுகளை திவால் நிலைக்குத் தள்ளக்கூடும்; இதனால் அடிப்படை வசதிகளைக் கூட வழங்க முடியாத சூழல் உருவாகும்' என்று கவலை தெரிவித்தது. இவ்விவகாரம் தற்போது நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது. எனவே, அரசியல் கட்சிகள் அறிவிக்கும் ஒவ்வொரு பெரிய வாக்குறுதிக்கும்... l திட்டத்திற்கான மொத்தச் செலவு எவ்வளவு? l இதற்கான நிதி எங்கிருந்து பெறப்படும்? l திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலக் கெடு என்ன என்பது குறித்து, வெளிப்படையாக அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்று, பார்லிமென்டில் சட்டம் இயற்ற வேண்டும். கலப்படப் பொருட்கள் விற்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது; முதலீட்டாளர்களை ஏமாற்றும் நிறுவனம் தண்டிக்கப்படுகிறது. ஆனால், நடைமுறைக்கு சாத்தியமற்ற வாக்குறுதிகளை அளிக்கும் ஒரு கட்சிக்கு மட்டும் வெற்றி பரிசாக கிடைக்கிறது! வெளிப்படைத்தன்மை என்பது நலத்திட்ட அரசியலை தடுப்பதல்ல; மாறாகப் பொறுப்பற்ற வாக்குறுதிகளையும், முறையான கொள்கைகளையும் வேறுபடுத்திப் பார்ப்பதே! எனவே, பொதுப்பணத்தைச் செலவிடும் ஆட்சியாளர்கள், அப்பணத்தை வழங்கும் குடிமக்களுக்கு அதற்கான கணக்கை காட்டகடமைப்பட்டவர்களே! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை