அக்கறை காட்டி என்ன பயன்?
எஸ்.ராமசுப்பிரமணியம், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, மழை நீர் வடிகால் பராமரிப்பு பணிகளுக்காக, மத்திய அரசு, 4,000 கோடி ரூபாய் நிதியை தமிழகத்திற்கு அள்ளித் தந்தது. அப்பணத்தை முறைப்படி செலவழித்து, பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்தால், இன்று கனமழை குறித்த கவலை சென்னைவாசிகளுக்கு ஏற்பட்டு இருக்காது. ‘மழை என்று வந்தால், வெள்ளம் வருவது வாடிக்கை தானே’ என்ற அலட்சிய மனோபாவத்தில், 4,000 கோடி ரூபாயையும் கபளீகரம் செய்துவிட்டு, 90 சதவீத பணிகளை முடித்து விட்டதாக கூறி, வாயில் வடை சுட்டது, அப்போதைய, தி.மு.க., அரசு. விளைவு... இன்று வரை, சிறு மழை பொழிவுக்கும் சென்னை வெள்ளக்காடாக மாறிவிடுகிறது. இந்த லட்சணத்தில், சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாம். கடந்த ஐந்து ஆண்டுகளில், இப்படி ஒரு கூட்டம் நடத்தப்பட்டதாக தெரியவில்லையே... ஆட்சியில் இல்லாத போது ஏற்பட்டுள்ள இந்த திடீர் அக்கறைக்கு காரணம் என்ன? ‘த.வெ.க., அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுபவம் இல்லாததால், அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை; பாருங்கள்... நாங்கள் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்கள் மீது எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம்’ என்று காட்டிக் கொள்ள போடும் நாடகம் இது! அதிலும், ‘முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்னெச்சரிக்கை பணி, மீட்புப்பணி போன்ற நடவடிக்கைகளை கடமை உணர்ச்சியோடு செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தி உள்ளார், ஸ்டாலின். ஆட்சியில் இருந்தபோது, மத்திய அரசு கொடுத்த, 4,000 கோடி ரூபாயில், வெறும், 1,000 கோடி ரூபாயை கால்வாய் பணிகளை சீரமைக்க செலவு செய்திருந்தாலே, இன்று மழைநீர் தேங்கி இருக்காது; மக்களும் அவஸ்தைப்பட மாட்டார்கள். அப்போது, மழைநீர் வழிந்தோட வழிவகை செய்யாமல், பணத்தை பதுக்குவதில் குறியாக இருந்து விட்டு, ஆட்சியை இழந்த பின், அக்கறை காட்டி என்ன பயன்? lll