உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / முதல்வரின் முகவரியால் என்ன பயன்?

முதல்வரின் முகவரியால் என்ன பயன்?

எஸ்.பி.சுந்தரபாண்டியன், திருப்பூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், முதல்வரின் தனிப்பிரிவு என்று ஒன்று செயல்பட்டு வந்தது. அரசுத்துறை சார்ந்த புகார் அளிக்க விரும்புவோர், நேரில் செல்ல இயலாத சூழலில் ஆன்லைன் வாயிலாக புகார் தெரிவித்து வந்தனர். அப்புகார் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தீர்வு கிடைத்து வந்தது. தி.மு.க., எப்போது ஆட்சிக்கு வந்ததோ, அன்றிலிருந்து அந்த தனிப்பிரிவு, 'முதல்வரின் முகவரி' என்று பெயர் மாற்றப் பட்டது. இத்துறைக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஒருவர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்; மேலும், புகார்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு செல்லும்படி மாற்றம் செய்யப்பட்டது. இதனால், நாம் எவர் மீது புகார் தெரிவிக்கிறோமோ, அவருக்கே அந்த புகார் மனு அனுப்பப்படுகிறது. எப்படி அந்த அலுவலர் நடவடிக்கை எடுப்பார்? உதாரணத்திற்கு, டாஸ்மாக் ஊழல் குறித்து புகார் தெரிவித்தால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க, மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு அனுப்பப்படுகிறது. குற்றவாளியிடமே தீர்ப்பு கூறு என்றால், அவன் குற்றத்தை ஒப்புக் கொண்டு, தனக்கு தானே தண்டனை கொடுத்துக் கொள்வானா என்ன? அந்த அளவிற்கு இங்கு நீதி நிலை நிறுத்தப்பட்டுள்ளதா, அதிகாரிகள் மனசாட்சிக்கு பயந்து, தங்களுக்கு தாங்களே தண்டனை கொடுத்துக் கொள்ள! அதுமட்டுமல்ல, புகார் மனுவை பார்ப்பதற்கே ஒரு மாதத்திற்கு மேல் கால அவகாசம் எடுத்துக் கொள்கின்றனர். தமிழக அரசின் அனைத்து துறைகளிலும் ஆன்லைன் புகார்களின் நிலை இதுதான்! ஆட்சி பொறுப்பேற்று, இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி முடிவடையப் போகிறது. ஆனாலும், இதுவரை உருப்படியாக எந்த புகார்களுக்கும் தீர்வு கிடைத்தபாடில்லை. பெயர் மாற்றம் செய்தால் மட்டும் போதாது; அரசு இயந்திரம் சரியாக வேலை செய்ய வேண்டும். 'முதல்வரின் முகவரி' என்ற பெயர் வைத்துவிட்டு, மக்கள், எங்கே அந்த முகவரி எனத்தேடி அலையும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு ஆட்சியாளர்களின் மெத்தனப் போக்கே காரணம்!  தன்மானத்தை இழந்த காங்கிரஸ்! பொ.ருக்மணி தேவி, பாம்பனார், இடுக்கி மாவட்டம், கேரளாவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காமராஜர் இறக்கும்போது, கருணாநிதியின் கையைப் பிடித்து, 'நீங்கள் தான் இந்த நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பற்ற வேண்டும்' என்று கூறியதாகவும், காமராஜர், 'ஏசி' இல்லாமல் துாங்க மாட்டார் என்று கருணாநிதி சொன்னதாகவும், தி.மு.க., - எம்.பி., சிவா பேசியுள்ளார். காமராஜர் இறக்கும் போது கருணாநிதியை சந்தித்ததாக எந்த தகவலும் இல்லை. ஒருவேளை அவர் சொல்வதுபோல் கருணாநிதியை சந்தித்திருந்தால், 'நானும், அண்ணாதுரையும் மக்கள் நலனுக்காக மதுவை விற்காமல் இருந்தோம். 'ஆனால், நீங்கள் மதுவிலக்கை ரத்து செய்து, மக்களை குடிக்க வைத்து, அவர்களின் எதிர்காலத்தை கெடுப்பது நியாயமா?' என்று வேண்டு மானால் கேட்டிருப்பார். இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி, ஒன்பது ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தவர், காம ராஜர். வெள்ளைக்காரன் அவருக்காக சிறையில், 'ஏசி' வசதி செய்து கொடுத்தானோ? ஆனால், சுதந்திர இந்தியாவில், ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற கருணாநிதி, பாளையங்கோட்டை சிறையில் சகல வசதிகளுடன், 60 நாட்கள் மட்டுமே இருந்து விட்டு, பெரிய தியாகி போல், 'பாளையங்கோட்டை சிறையினிலே, பாம்புகள் பல்லிகள் நடுவினிலே' என்று பாட்டு தயார் செய்து, மக்களை ஏமாற்றியது போன்ற வித்தை எல்லாம் காமராஜருக்கு தெரியாது. முதல்வராக இருந்த போது கூட, அரசு விருந்தினர் மாளிகையில், திடீரென கரன்ட் இல்லாமல் போக, மரத்தடியில் கட்டிலை போட்டு நிம்மதியாக உறங்கியவர் காமராஜர். அத்தகைய தலைவரை, 'ஏசி' இல்லாமல் உறங்க மாட்டார் என்றால் உலகம் நம்புமா? அதேநேரம், கருணாநிதி குறித்து அப்படிச் சொன்னால் நம்புவர். ஏனென்றால், கடற்கரைக்கே, 'ஏர் கூலருடன்' சென்று, வெறும் இரண்டு மணி நேரம் மட்டும், 'சாகும் வரை உண்ணாவிரதம்' இருந்த ஒப்பற்ற ஒரே தலைவர் கருணாநிதி அல்லவா? கருணாநிதியை புகழ்வதற்காக காமராஜரை இழிவுபடுத்தும் விதத்தில் பேசிய, எம்.பி., சிவாவின் பேச்சை, பல அரசியல் கட்சி தலைவர்களும் கண்டித்தனர். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்களோ பட்டும் படாமல் கண்டித்தது வெட்கக்கேடானது. இவ்வளவு கண்டனங்கள் எழுந்த போதும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'கலகமூட்டி குளிர் காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்கள்' என்று எதிர்க்கட்சிகள் மீது பழிபோடுகிறாரே தவிர, சிவா பேசியது தவறு என்றோ, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றோ கூறவில்லை. கூட்டணி தர்மத்தை மதிக்காமல், காங்கிரஸ் கட்சியினர் மனம் புண்படுமே என்று நினைக்காமல், ராஜிவ் கொலையாளியை நேரில் சந்தித்து, கட்டியணைத்து வாழ்த்தியவர் ஸ்டாலின். அப்போதும் காங்., தலைவர்கள் பெரிதாக கண்டனம் தெரிவிக்கவில்லை. இப்படி தன்மானத்தை இழந்து ஒரு சில சீட்டு களுக்காக தி.மு.க.,வின் அடிமையாக இருப்பதை விட, தனித்து போட்டியிட்டு தோல்வியடைவது கவுரவமானது!  கண்டுகொள்ளப்படுமா பி.எஸ்.என்.எல்.,? ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இன்றைய வாழ்வில் தவிர்க்க முடியாத ஒரு கருவியாக, 'மொபைல் போன்' மாறிவிட்டது. இதை பயன்படுத்தி, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டணத்தை தாறுமாறாக ஏற்றுகின்றன. கடந்த ஆண்டு, 11 முதல் 23 சதவீதம் வரை கட்டண உயர்வு இருந்தது; வேறுவழியின்றி மக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், நடப்பாண்டில், மேலும், 10லிருந்து 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த உள்ளதாக வரும் செய்தி, வயிற்றில் புளியைக் கரைக்கிறது. பல நிறுவனங்கள் இச்சேவை யில் இருந்தால் போட்டி போட்டு விலையைக் குறைப்பர். ஆனால், இருப்பதோ, ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற சில தனியார் நிறுவனங்கள் தான். இவை போட்டி போட்டு சந்தையை பங்கு போட்டுக் கொள்கின்றன. அரசு நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., மூடப் படவில்லை என்றாலும், சந்தாதாரர்களைக் கவர திக்குமுக்காடுகிறது. தனியார் நிறுவனங்களின் கட்டண கொள்ளையிலிருந்து மக்கள் தப்பிக்க வேண்டும் என்றால், அரசு துரிதமாக செயல்பட்டு, பி.எஸ்.என்.எல்., சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப, சேவை களை வழங்க வேண்டும். மத்திய அரசு கவனம் செலுத்துமா? 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ