உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / எப்போது விடிவு வரும்?

எப்போது விடிவு வரும்?

என்.ராமகிருஷ்ணன், பழனியில் இருந்து எழுதுகிறார்: மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் நடந்த முருக பக்தர்களின் மாநாடு, ஹிந்துக்களின் மத்தியில் ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது, வரும் சட்டசபை தேர்தலில் எதிரொலித்தால் என்ன செய்வது என்ற பயத்தில் தி.மு.க.,வினரும், அதன் கூட்டணி கட்சியினரும் தினமும் வாய்க்கு வந்தபடி விமர்சனம் செய்கின்றனர். கடந்த 1981ல் எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, அன்றைய பிரதமர் இந்திரா தலைமையில் மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். முன்னாள் முதல்வர் என்ற முறையில் கருணாநிதிக்கும் அழைப்பிதழ் அனுப்பினார். எம்.ஜி.ஆருக்கு கிடைக்கப்போகும் வரவேற்பை காணப்பிடிக்காமல், அந்த அழைப்பை நிராகரித்தார், கருணாநிதி. அடுத்து, ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையில், 1994ல் தஞ்சையில் உலகத் தமிழ் மாநாடு நடத்தினார். அப்போதும் கருணாநிதிக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஜெயலலிதாவிற்கு பயந்து சட்டசபைக்கு செல்லாத கருணாநிதி, மாநாட்டிற்கு மட்டும் செல்வாரா? கருணாநிதி மீண்டும் முதல்வரான பின், 'கேரளாவை சேர்ந்த எம்.ஜி.ஆரும், கர்நாடகாவை சேர்ந்த ஜெயலலிதாவும், உலகத்தமிழ் மாநாடு நடத்தி, சரித்திரத்தில் இடம் பிடித்து விட்டனர். ஆந்திராவை சேர்ந்த நாம் ஏன் மாநாடு நடத்தக்கூடாது...' என்று நினைத்து, கோவையில் செம்மொழி மாநாடு நடத்தினார்.அதில், தன் குடும்பத்தாருக்கே முன்னுரிமை கொடுத்தார் என்பது வேறு விஷயம். வெளிநாட்டிலிருந்து வந்த தமிழறிஞர்களை சரியாக கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அன்று இருந்தது. இதுதான் தி.மு.க.,வின் லட்சணம்!ஹிந்து முன்னணியினர் தங்கள் சொந்த செலவில் மாநாடு நடத்தினர். ஆனால், தி.மு.க.,வினர் பழனியில் நடத்திய முருகன் மாநாட்டிற்கு கட்டாயப்படுத்தி நன்கொடை வசூலிக்கப்பட்டது; கூடவே, பழனி தேவஸ்தானமும் நிதி வழங்கியது. இன்று வரை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அதற்கான வரவு - செலவு கணக்குகளை வெளியிடவில்லை. இதற்கெல்லாம் எப்போது விடிவு வரும் என்று தெரியவில்லை! 

இதுவா உள்துறை அமைச்சரின் வேலை?

எஸ்.ஆர். த்ராவிட், ஹைதராபாத், தெலுங்கானா மாநிலத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சமீபத்தில், 'தினமலர்' நாளிதழில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியை படித்தேன்.ஆங்கிலத்தை வெறுக்கும் அவரிடம், நிருபர் தமிழில் கேள்வி கேட்க, அவர் குஜராத்தியில் அல்லவா பதில் சொல்லியிருக்க வேண்டும்!ஹிந்தி பேசும் மாநிலங்களில் இருந்து வந்த மறைந்த முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், இந்திரா மற்றும் ராஜிவ் கூட ஹிந்தி வெறியர்கள் என்று பெயர் எடுக்கவில்லை. ஆனால், உள்துறை அமைச்சர் அமித் ஷா அப்பெயரை பெற்றுள்ளார் என்றால், இதுகுறித்து அவர் சுயபரிசோதனை செய்வது அவசியம்.ஆங்கில உபயோகம் என்பது அன்னிய மொழியின் அடிமைத்தனம் அல்ல; அது, இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் சங்கிலி!அதேபோன்று, தமிழகத்தில் பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், தமிழக மக்களின் மனங்களை நெருங்க வேண்டும். அதற்கு, பிரதமர் மோடியும், அமித் ஷாவும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பேசி, தமிழகத்தில் பிரசாரம் செய்ய வேண்டும். மும்மொழி திட்டத்தை முதலில் நீங்கள் ஆரம்பித்து வைத்தால், நாங்களும் அதை பின்பற்ற தயார். நீங்கள் எப்படி தமிழர்கள் ஹிந்தி படிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களோ, அதேபோன்றுதான் நாங்களும் உங்களிடம் இருந்து ஆங்கிலத்தை எதிர்பார்க்கிறோம். ஆங்கில வெறுப்பு என்ற அடிப்படையில், தமிழகத்தில், பா.ஜ., பிரசாரம் செய்தால், சத்தியமாக ஒரு சீட்டு கூட பெற முடியாது. ஓர் உள்துறை அமைச்சரின் வேலை, நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்துவது தானே தவிர, ஒரு மொழியை பிரசாரம் செய்வது அல்ல. அதை செய்வதற்கு கல்வியாளர்களுடன், கல்வித்துறையும் இருக்கிறது. அதனால், 'ஆங்கிலத்திற்கு ஏன் அடி வருடுகிறீர்கள்?' என்று கேட்பதை விடுத்து, நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் அமித் ஷா கவனம் செலுத்தட்டும்!

எங்கே போனது மனிதாபிமானம்?

வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ------------------------------------------------கடந்த நான்கு ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சி, திருப்புவனம் அஜித்குமாருடன் சேர்த்து, 25 பேருக்கு லாக்கப் மரணங்களை நடத்தி வெள்ளி விழா கண்டுள்ளது.விசாரணை என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டுஉள்ளது காவல் துறை. பசிக்கு வேட்டையாடும் விலங்குகள் கூட, ஐந்தாறு என கூட்டாக சேர்ந்து இரையைக் கொல்வதில்லை.ஆனால், ஓர் அப்பாவி இளைஞனிடமிருந்து உண்மையை வரவழைக்க, மிருகத்தை விட கொடூரமாக தாக்கிஉள்ளனர்.'அடித்துக் கொல்லும் அளவுக்கு அவர் என்ன பயங்கரவாதியா?' என்று நீதிபதியே காட்டமாகக் கேட்டுள்ளார். பொதுவாகவே, புகார் கொடுக்க காவல் நிலையம் செல்லும் சாதாரண பொது மக்களை, காவல் துறையினர் மதிப்பதில்லை. காவல் நிலையங்களில் புகார் மனுக்களை பெறுவதற்கென்றே எழுத்தர் ஒருவர் இருப்பார். அவர் தன்னை உயரதிகாரி போல் பாவித்து, புகார் கொடுக்க வருவோரை உட்காரச் சொல்ல மாட்டார். வயதானவர்களைக் கூட நிற்க வைத்தே புகார் மனுவை பெறுவார்.பிரச்னையோடும், வேதனையோடும் வருவோரிடம் காவல் துறை கண்ணியம் காட்டாவிட்டாலும், குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். காவல் நிலையத்தின் வாயிலாக பெறப்படும் பாஸ்போர்ட்டை, சம்பந்தப்பட்ட நபரின் வீடு தேடிச்சென்று விசாரித்து வழங்குவதற்குப் பதிலாக, ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு காவல் நிலையம் வரச் சொல்லி அலைக்கழிப்பர்.பாஸ்போர்ட் பெறுவதற்காக காவல் நிலையம் சென்றால், ஏதோ தவறு செய்து விட்டு தண்டனைக்காகக் காத்திருக்கும் குற்றவாளி போல், பல மணி நேரம் நிற்க வைத்த பின் வழங்குவர்; இது என் சொந்த அனுபவம்.நம் பாஸ்போர்ட்டை பெறுவதற்கு கூட காவலரிடம் கை கட்டி நிற்க வேண்டும். ஏனென்றால், அவர் காக்கிச் சட்டை அணிந்த, வானளாவிய அதிகாரம் கொண்ட காவலராயிற்றே!காமராஜர் ஆட்சிக் காலம் வரை காவல் துறை கண்ணியமாகத் தான் இருந்தது. எப்போது கழகங்கள் ஆட்சிப் பீடத்தில் ஏறினவோ, அன்றே காவல் துறையின் கண்ணியம் காற்றில் பறந்து விட்டது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை