உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தொழில் வளர்ச்சிக்கு காரணம் யார்?

தொழில் வளர்ச்சிக்கு காரணம் யார்?

ப.ராஜேந்திரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஹிந்தியை முன்னால் அனுப்பிவிட்டு, பின்னால் சமஸ்கிருதத்துக்கு மணி கட்டுவதுதான் தேசியக் கல்வி கொள்கை' என்று விமர்சித்துள்ளார், கல்வித்துறை அமைச்சர் மகேஷ்.தி.மு.க.,வினர், ஹிந்தி எதிர்ப்பு என்பதை தேர்தல் ஆயுதமாக கருதி, அதில் குளிர்காய நினைக்கின்றனர். ஆனால், தொழிலாளர்கள் என்ற போர்வையில், ஏற்கனவே தமிழகத்தில் ஹிந்தி நுழைந்து, தன் ஆதிக்கத்தை செலுத்த துவங்கி விட்டது. காரணம், தொழிலாளர் தேவை!நம் மக்கள் ஒரு நாளைக்கு, 1,000 ரூபாய் கூலி கேட்கும் நிலையில், வடமாநில தொழிலாளர், 500 ரூபாய் கூலியில் வேலை செய்ய தயாராக இருக்கின்றனர். மேலும், தமிழக தொழிலாளர்கள் பண்டிகை, கோவில் திருவிழா, வீட்டில் விசேஷம் என்று ஏதேனும் காரணம் கூறி, அடிக்கடி வேலைக்கு வராமல் போய் விடுவதால், திட்டமிடப்பட்ட வேலைகள், குறித்த நேரத்தில் முடிவது இல்லை. ஆனால், வடமாநில தொழிலாளர்கள் வேலை நடக்கும் இடத்தில் தங்க இடமும், சமைத்து சாப்பிட சிறு வசதிகளும் கொடுத்துவிட்டால் போதும், எல்லா நாட்களிலும் வேலை செய்யத் தயாராக இருக்கின்றனர். இதனாலேயே இங்குள்ள ேஹாட்டல்கள், கட்டட பணிகள், சூப்பர் மார்க்கெட், சலுான், சிறு தொழிற்சாலைகளில் வடமாநில தொழிலாளர்களை வேலைக்கு எடுக்கின்றனர். தங்களுக்கான வாழ்வாதாரம் கிடைப்பதால், வடமாநிலங்களில் இருந்து தமிழகத்தை தேடி வருகின்றனர்.அவர்களுடன் பேசி பேசியே காய்கறி கடைக்காரர்கள் முதல், கட்டட மேஸ்திரிகள் வரை ஹிந்தியை கற்றுக் கொள்கின்றனர்.இந்த உண்மை தெரியாமல், ரயில் நிலையங்களில் பெயர் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கின்றனர், உடன்பிறப்புகள். இப்போது தமிழகத்தில் இருக்கும் தொழிலாளர்களில், 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வடமாநில தொழிலாளர்கள்தான். 'ஆகிறவன் அரைக் காசிலும் ஆவான்; ஆகாதவனுக்கு ஆயிரம் கொடுத்தாலும் விடியாது' என்பது போல் மதுவின் தாக்கத்தால், நம் தொழிலாளர்களின் வேலைத்திறனும் குறைந்து விட்டது என்பதே உண்மை!ஹிந்தியை எதிர்க்கிறோம் என்ற பெயரில், ஹிந்தி தொழிலாளர்கள் வேண்டாம் என்று தி.மு.க., கூறினால், தொழில் வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் முதல்வர், தமிழகத்தின் தொழில் வீழ்ச்சிக்கு காரணமாகி விடுவார். சொல்வாரா?

பில்டிங் ஸ்ட்ராங் பேஸ் மட்டம் வீக்!

எஸ். கண்ணம்மா, விழுப்புரத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, அடல் -- வாகா எல்லை மூடல், பாக்., துாதரக ஆள் குறைப்பு, பாகிஸ்தான் மக்கள் வெளியேற வேண்டும் என்ற முக்கியமான முடிவுகளை எடுத்தது, இந்தியா.சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து செய்தவுடன், 'இது போர் அறிவிப்பு' என்று குதித்தது பாகிஸ்தான். மறைந்த முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ, 'சிந்து நதியில் தண்ணீர் வரவில்லை என்றால், இந்தியர்களின் ரத்தம் ஆறாக ஓடும்' என்று பொங்கினார். அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனிர், 'ஹிந்துக்கள் வேறு; இஸ்லாமியர் வேறு. அவர்களுடன் நாம் வாழ முடியாது. காஷ்மீர் எங்கள் கழுத்து நரம்பு' என்று வீராப்பாக பேசினார். பாகிஸ்தான் அமைச்சர்களின் இந்த கொக்கரிப்புக்கு மத்திய அரசு அலட்டிக் கொள்ளவில்லை என்றதும், எல்லையில் ராணுவ தளவாடங்களை இறக்குவது போல் பூச்சாண்டி காட்டியது, அந்நாட்டு அரசு. அதற்குபின் தான் காமெடி... பாகிஸ்தானில், பழுதான விமானங்களுக்கு உதிரி பாகங்கள் இல்லை. டாங்கிகள் நீண்ட துாரம் செல்ல எரிபொருள் இல்லை என்று 'தினமலர்' நாளிதழ் செய்திகள் வெளியிட்டு வந்த நிலையில், அந்நாட்டு ராணுவத்தினர் கொத்துகொத்தாக ராஜினாமா செய்யத் துவங்கினர். கடைசியாக, அந்நாட்டு ராணுவ தளபதி ஆசிம் முனிரை, பாகிஸ்தான் தேடிக் கொண்டிருக்கிறது. மக்கள் தங்கள் நாட்டு ராணுவத்தை, 'ட்ரோல்' செய்து, சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இதன் வாயிலாக அறிய வந்தது... பாகிஸ்தான் அரசு தன் வருவாய், ஆற்றல் முழுதையும் ஆயுதம் வாங்கவும், பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கவும் மட்டுமே செலவு செய்துள்ளது; ராணுவத்தை கண்டு கொள்ளவில்லை என்பது! இப்போது போர் என்றவுடன், வளைக்குள் எலி பதுங்குவது போல், அந்நாட்டு ராணுவத்தினர் ராஜினாமா செய்வதும், வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்வதுமாக இருக்கின்றனர்.தமாஷ் நடிகர் வடிவேலு பாணியில் சொல்வது என்றால், பாகிஸ்தானின் தற்போதைய நிலவரம், 'பில்டிங் ஸ்ட்ராங்; பேஸ் மட்டம் வீக்' என்ற நிலையில் தான் உள்ளது!

எத்தனை காலம் இந்த துன்பம்?

ஜெ.மனோகரன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 1,246 ஏரிகள் வறண்டு போய் இருப்பதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒருபுறம், பருவநிலை மாறுபாடு உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறது. இன்னொருபுறம், சட்டப்படி நமக்கு தரவேண்டிய நீரை, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் தர மறுக்கின்றன.ஆண்டாண்டு காலமாக தண்ணீருக்காக இயற்கையுடனும், அண்டை மாநிலங்களுடனும் தமிழகம் போராட வேண்டிய பரிதாபமான சூழ்நிலையே உள்ளது. இந்நிலையில், சட்டசபையில் சமீபத்தில், நீர்நிலைகளை துார்வாரும் கோரிக்கைக்கு பதில் அளித்து பேசிய நீர்வளத்துறை முன்னாள் அமைச்சர் துரைமுருகன், 'அரசுக்கு வருவாய் இருந்தால்தான் துார்வார முடியும்' என்று பொறுப்பற்ற முறையில் பதில் அளித்து உள்ளார். கருணாநிதியின் பேனா சின்னம் வைக்க பணம் இருக்கிறது, நீர்நிலைகளை துார்வார பணம் இல்லையா? ஒவ்வொரு ஊரிலும் ஏரிகளும், குளங்களும் கண்மாய்களும் சீமை கருவேல மரங்கள் அடர்ந்து, அல்லி கொடி படர்ந்து வறண்டு போய் கிடக்கின்றன. எப்படி விவசாயம் பார்ப்பது? வானம் பொழியும் நீரையும் தேக்கி வைக்க வழியை காணோம். ஒரு மழை பொழிந்தாலே, வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து விடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்படும்போது, நாலு கிலோ அரிசியும், ரெண்டு போர்வையும், மூணு மெழுகு வர்த்தியும் கொடுத்தால் போதுமா... நீர்நிலைகளை பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்து உள்ளது?இன்னும் எத்தனை காலம் வறட்சியிலும், வெள்ளத்திலும் மக்கள் துன்பப்பட வேண்டும்? அரசு யோசிக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
மே 09, 2025 04:29

ஒருபக்கம் ஆறு ஏரிகளில் மண்ணை வாரி மலடாக்கியும், மறுபக்கம் நீர்நிலைகளை கட்டிடங்களாக ஆக்கியும் நீர் ஆதாரத்தையே அழித்துவிட்டு, இருக்கும் ஏரி குளங்களையும் தூர் வாராமல் ஒதுக்கிய பணத்தையும் ‘ஒதுக்கிக்கொண்டு’ பணம் வந்து கொட்டவில்லையென்று மூக்கால் அழுதால் என்ன பயன் ?


முக்கிய வீடியோ