உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / ஆதரவு அளிக்காதது ஏன்?

ஆதரவு அளிக்காதது ஏன்?

டி.ஈஸ்வரன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கருணாநிதி மறைந்த போது, அவரை கடற்கரையில் அடக்கம் செய்ய அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தேன்; அதை அவர் நிராகரித்து விட்டார்' என்று, பிரசார கூட்டத்தில் தி.மு.க., முதல்வர் ஸ்டாலின் பேச, 'அ.தி.மு.க., முன்னாள் முதல்வரும், எம்.ஜி.ஆரின் மனைவியுமான ஜானகி இறந்தபோது, கடற்கரையில் அடக்கம் செய்ய அனுமதி கேட்டபோது, கருணாநிதி மறுத்தாரே... அது எப்படி?' என்று பதில் கேள்வி கேட்டிருந்தார், அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி.உடனே, 'அதற்கு என்ன ஆதாரம்?' என்று, 'முரசொலி' பத்திரிகையில் கேள்வி கேட்டுள்ளது, தி.மு.க.,கடந்த 1996, மே 19ல் ஜானகி மறைந்த போது, அவரை எம்.ஜி.ஆர்., சமாதி அருகே அடக்கம் செய்ய நினைத்து, அப்போதைய முதல்வர் கருணாநிதியை சந்தித்தார், ஜானகியின் சகோதரர் நாராயணன்.'ராஜாஜி, காமராஜர் நினைவிடங்களின் அருகில் வேண்டுமானால், ஜானகியை அடக்கம் செய்யுங்கள்; கடற்கரையில் அடக்கம் செய்ய விதியில் இடமில்லை' என்று நிர்தாட்சண்யமாக மறுத்து விட்டார், கருணாநிதி.அதன்பின், ஜானகியின் உறவினர்கள், 'ராமாவரம் தோட்டத்திலேயே அடக்கம் செய்-து விடுகிறோம்' என்று கூறியவுடன் தான், எம்.ஜி.ஆர்., சமாதி அருகில் அடக்கம் செய்ய அனுமதி வழங்கினார், கருணாநிதி.இந்த உண்மையை மறைத்து, இப்போது 'ஆதாரம் என்ன' என்று கேட்கிறது, தி.மு.க.,!அதேபோன்று, தலைமை செயலகத்தில் முன்னாள் முதல்வர்கள் படங்களின் வரிசையில், ஜானகி படத்தை ஜெயலலிதா வைக்கவில்லை என்றும், கருணாநிதி பதவியேற்றவுடன் தான், ஜானகி படத்தை மாட்டச் சொன்னார். அந்த அளவு பெருந்தன்மை மனம் கொண்டவர் கருணாநிதி என்றும் குறிப்பிட்டுள்ளனர்.எம்.ஜி.ஆர்., மறைந்த போது, அவரது ஆட்சியை ஜானகி தலைமையில் தொடர, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 99 பேர் ஆதரவு தெரிவித்தனர்; 28 பேர் ஜெயலலிதாவுடன் சென்று விட்டனர். இதனால், சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்படி ஓட்டெடுப்பு நடக்க இருந்தது.அதுவரை, அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த இந்திரா காங்கிரஸ், 'ஒன்றுபட்ட அ.தி.மு.க.,வுக்குதான் ஆதரவு' என்று கூறி, கடைசி நிமிடத்தில் கைவிரித்து விட்டது.எப்படியாவது ஆட்சியை காப்பாற்ற வேண்டுமே என எண்ணி, முதல்நாள் இரவு அ.தி.மு.க., பொருளாளர் மாதவன், தி.மு.க., வின் ஆதரவு கோர கோபாலபுரம் சென்றார்.'அண்ணன் எப்போது சாவான்; திண்ணை எப்போது காலியாகும்' என்று இலவு காத்த கிளிபோல காத்துக் கொண்டிருந்த கருணாநிதி, அ.தி.மு.க., ஆட்சி தொடர ஆதரவு கொடுத்து விடுவாரா என்ன?கீழ் தளத்து இன்டர்காமில் இருந்து, 'நான் மாதவன் வந்திருக்கிறேன்' என்று கூறியதும், எதற்காக வந்திருக்கிறார் என்பதை யூகித்துக் கொண்ட கருணாநிதி, 'எந்த மாதவன்' என்று வேண்டுமென்றே கேட்க, வெறுத்துப்போய் அங்கிருந்து வெளியேறி விட்டார், மாதவன்.இப்போது, 'ஜானகி படத்தை கோட்டையில் வைத்தவர் கருணாநிதி; பாருங்கள்... எங்கள் தலைவரின் பெருந்தன்மையை' என்கின்றனர், தி.மு.க.,வினர்.அவ்வளவு பெருந்தன்மை மனசுக்காரர், ஜானகி ஆட்சி தொடர ஆதரவு அளிக்காதது ஏன்?

கருத்தை கூறுங்கள்!

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தில் தமிழகத்திற்கு பாதிப்பு என்றால், தமிழகம் கொந்தளிக்கும்; மத்திய அரசு பழைய, 1960களில் இருந்த தி.மு.க.,வை பார்க்கும்' என்று, பிரதமர் மோடிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின். இவர், வீரவசனம் பேசுவதையும், தன்னை குறித்து தானே பெருமையாக பீற்றி கொள்வதையும், சவால் விட்டு பேசுவதையும் கேட்டு கேட்டு அலுத்துவிட்டது. ஸ்டாலின் மிரட்டல் விட்ட சில மணி நேரத்திலேயே பார்லிமென்ட் தொகுதிகள் மறுவரையறை குறித்து வரைவு மசோதாவை வெளியிட்டது, மத்திய அரசு. அதன்படி, லோக்சபா தொகுதிகள், 543லிருந்து 850 ஆக உயர்கிறது; தமிழகத்தின் தொகுதிகளும், 39லிருந்து, 59 ஆக உயர இருப்பதாக கூறுகின்றனர். மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு முடிவும், பார்லிமென்டில் விவாதித்த பின்னர் தான் அமலுக்கு வரும். அப்படியிருக்கும் போது எதற்கு இந்த மிரட்டல் டிராமா? இந்த கொதிப்பையும், கொந்தளிப்பையும் சட்டம் - ஒழுங்கை காப்பதில் காட்டியிருந்தால், இன்று தமிழகம் குற்றம்மிகு மாநிலமாக உருமாறி இருக்காது. ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி, காமராஜரை வீழ்த்தி, 1967ல் ஆட்சியை பிடித்தது போல், இன்று தொகுதி மறுவரையறை என்ற பெயரில் கலவரத்தை துாண்டி ஆட்சியை தக்க வைக்க நினைக்கிறார், ஸ்டாலின். ஆனால், அதற்கெல்லாம் ஏமாற இது, 1967 அல்லவே! எனவே, ஸ்டாலின் காற்றில் கம்பு சுற்றாமல், தொகுதி மறுவரையறை சட்ட திருத்தத்தில், தன் ஆக்கப்பூர்வமான கருத்தை முன்வைக்கட்டும்!

எம்.ஜி.ஆர்., ஆக முடியுமா?

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: இந்தியாவிலேயே முதன் முதலில் ஒரு சினிமா நடிகர் ஆட்சிக்கு வந்தது தமிழகத்தில் தான் நடந்தது. அந்த சரித்திரத்தை படைத்தவர் எம்.ஜி.ஆர்., அதன்பின், ஆந்திராவில் என்.டி.ராமாராவ் ஆட்சிக்கு வந்தார். எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின், அவர் ஆரம்பித்த கட்சி என்ற பிம்பமும், இரட்டை இலை சின்னமும், ஜெயலலிதாவுக்கு உறுதுணையாக இருக்கவே, எளிதாக ஆட்சிக்கு வந்து, தன் ஆளுமையால், கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார், ஜெயலலிதா. இவர்களை பார்த்து அரசியலுக்கு வந்த எந்த ஒரு நடிகரும் ஆட்சிக்கு வந்ததில்லை என்பதே வரலாறு; இப்போது, நடிகர் விஜய் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார். எம்.ஜி.ஆர்., எளிய குடும்பத்தில் பிறந்தவர்; ஏழை மக்களுடன் இரண்டற கலந்து பழகி; அவர்களது இன்ப - துன்பங்களில் பங்கெடுத்துக் கொண்டவர். அடித்தட்டு மக்களிடம் அவருக்கு இருந்த அன்பே, மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருந்த போதும், அவர் வெற்றி பெற காரணம்! எம்.ஜி.ஆரை முன்மாதிரியாக கொண்டு விஜய் அரசியல் களத்தில் இறங்கி இருந்தாலும், அவரது எளிய பண்புகள், ஒற்றை மகனாக செல்வ செழிப்புடன் வளர்ந்த விஜய்க்கு இல்லை. எனவே, எம்.ஜி.ஆரைப் போல் விஜய் கட்சி ஆரம்பித்திருப்பது பெரிய விஷயம் அல்ல; அவரைப் போன்று எளிய மக்களிடம் இரண்டற கலந்து பழக வேண்டும். அப்போது தான், விஜய் தமிழக அரசியலில், தன் அழுத்தமான முத்திரையை பதிக்க முடியும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஏப் 18, 2026 06:50

அதுதான் எளிமைக்கு ஆரம்பமாக வாசல்தோறும் ‘கோலம் போட’ ஆரம்பித்திருக்கிறார் தேர்தலுக்குமுன் ‘முறைவாசலும்’ செய்து எளிமையை நிரூபித்துவிடுவார்


புதிய வீடியோ