கோட்டைக்கு போவாரா சீமான்?
பொ.ருக்மணி, கூடங்குளம், நெல்லை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் சட்டசபை தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், தி.மு.க.,- – அ.தி.மு.க., ஆதரவுடன், பொது வேட்பாளராக போட்டியிட போகிறீர்களா?’ என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘பசியோடு இருக்கிறவனுக்கு, பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்பானா... ஆனாலும், இது தொடர்பாக அவர்களோ, நானோ இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று கூறியுள்ளார், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமான். தி.மு.க., தலைவர் ஸ்டாலினும், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமியும் கூட இதுகுறித்து பெரிதாக மறுப்பு தெரிவிக்கவில்லை. இதிலிருந்தே கூட்டணிக்கான பேச்சு நடப்பது உறுதியாகிறது. ‘திராவிடத்தை ஒழிக்கப் போகிறேன்; இது, ஈ.வெ.ரா., மண் அல்ல; ஈ.வெ.ரா.,வே எங்களுக்கு மண்தான். இலங்கை தமிழர்களை கொன்று குவிக்க துணை போன கட்சி, தி.மு.க., ’ என்றெல்லாம் வீர வசனம் பேசியவர் தான், சீமான். அதுமட்டுமல்ல... தி.மு.க.,வின் ஊழல்கள் குறித்தும், வாரிசு அரசியலையும் கடுமையாக விமர்சனம் செய்ததுடன், ‘கள்ளத்தனம் கொண்ட கிராதகன் கருணாநிதி’ என்று மேடை தோறும் வசை பாடியவர். ஆளுங்கட்சியான, தி.மு.க.,வுக்கு எதிரான அவரது தைரியமான பேச்சை, மக்கள் வரவேற்றனர். அதனால் தான் அவருக்கு, கடந்த ஆட்சியில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில், 8 சதவீத ஓட்டுகள் கிடைத்தது; கட்சியும் வளர்ந்தது. மேலும், கட்சி ஆரம்பிக்க போவதாக விஜய் சொன்னவுடன், அதை, மிகவும் மகிழ்வுடன் வரவேற்ற சீமான், ‘என் தம்பி அரசியலுக்கு வருகிறான்; அவனை துணை முதல்வர் ஆக்கி விடுவோம்’ என்று கூறி மகிழ்ந்தார். காரணம், விஜய் ரசிகர்களின் ஓட்டுகளை பெற்று, தாம் முதல்வர் ஆகிவிடலாம் என்பதால்! ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தை துவக்கிய விஜய், ‘என் தலைமையில் தான் கூட்டணி’ என்று அறிவித்தவுடன், சீமானின் முதல்வர் கனவு சிதைந்து விட்டது. அன்று முதல், விஜயை வசை பாட ஆரம்பித்து விட்டார். ஆளுங்கட்சியான, தி.மு.க.,வை விமர்சிக்காமல், புதிய அரசியல் கட்சியான, த.வெ.க,வையும், விஜயையும் சீமான் கடுமையாக விமர்சிப்பதை மக்கள் விரும்பவில்லை. அதனால் தான், 2026 சட்டசபை தேர்தலில் அவரது ஓட்டு சதவீதம், 8 லிருந்து, 4 சதவீதமாக குறைந்தது. அதேபோன்ற விமர்சனத்தை அவர் தொடர்ந்ததால், தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஓட்டு சதவீதம் மேலும் குறைந்து போனது. இப்போதும் கூட, த.வெ.க.,வை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க., குறித்து பேசியவைகளை மறந்து, திராவிட கட்சிகளுடன் கைகோர்க்க துடிக்கிறார், சீமான். அதேபோன்று, ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்பது போல், த.வெ.க., அரசுக்கு குடைச்சல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே, சீமான் தங்களுக்கு எதிராக பேசியதை எல்லாம் மறந்து, இடைத்தேர்தலில் சீமானை களமிறக்க நினைக்கின்றன, இரு திராவிட கட்சிகளும்! சீமானுக்கான எதிர்காலத்தை, மக்கள் எப்படி தீர்மானிக்கின்றனர் என்பது, அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல் நடக்கும் போது தெரிந்து விடும்! lll