உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  தேர்தல் வியூகத்தை மாற்றுமா அ.தி.மு.க.,!

 தேர்தல் வியூகத்தை மாற்றுமா அ.தி.மு.க.,!

க.ஜெயராமன் கல்யாணசுந்தரம், பெங்களூருவில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹார் தேர்தல் முடிவு களுக்கு பின், பா.ஜ.,எதிர்ப்பு அரசியலை தீவிரப்படுத்தியுள்ளது தி.மு.க., காரணம், அ.தி.மு.க.,வை எதிர்கொள்ளவும், நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் அ.தி.மு.க.,வின் பக்கம் சாய்ந்து விடாமல் தடுக்கவும், தங்கள் கூட்டணிக்குள் குழப்பம் வராமல் தடுக்கவும், பா.ஜ., எதிர்ப்பு என்ற அஸ்திரம் தி.மு.க.,விற்கு தேவையாக இருக்கிறது. அதுமட்டுமல்ல... சிறுபான்மையினரி ன் ஓட்டுகளை பெறவும், தங்கள் அரசின் மீதான விமர்சனங்களை சரிக்கட்டவும், தி.மு.க., நம்பியிருப்பது, பா.ஜ., எதிர்ப்பு என்ற ஒற்றை அஸ்திரத்தை தான்! கடந்த 2021 சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 2026 தேர்தலை தைரியமாக எதிர்கொள்ள தி.மு.க.,விற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை பா.ஜ., எதிர்ப்பு தான். ஹிந்தி எதிர்ப்பு, நிதி பிரச்னை, குடியுரிமை திருத்தச் சட்டம், தொகுதி வரையறை, வடக்கு - தெற்கு, மாநில உரிமை, சிறுபான்மையினர் பாதுகாப்பு, ஜி.எஸ்.டி., என அரைத்த மாவையே அரைத்து, தமிழகத்தில் அரசியல் செய்து வந்த தி.மு.க., தற்போது, மெட்ரோ விவகாரத்தையும் கையில் எடுத்துள்ளது. எனவே, தி.மு.க.,வின் இந்த பா.ஜ., எதிர்ப்பு எனும் அஸ்திரத்தை வீழ்த்த வேண்டும் என்றால், அதன் முனையை மழுங்கச் செய்ய வேண்டும். 'பா.ஜ., வந்தாலும் பரவாயில்ல, தி.மு.க., மட்டும் வந்துவிடக் கூடாது' என்று மக்களாக முடிவு செய்து, பா.ஜ.,வுக்கு ஓட்டு போடும் வரை, எதிர்ப்பு அரசியலை தி.மு.க., கைவிடாது. காரணம், கடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., எதிர்ப்பு என்ற ஒன்றை மட்டும் வைத்து, ஆட்சிக்கு வந்து ருசி கண்டுவிட்ட பூனை இது! அதனால், தி.மு.க.,வின் பா.ஜ., எதிர்ப்பு எனும் அஸ்திரத்தை வீழத்த வேண்டும் என்றால், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., தன் தேர்தல் பரப்புரை வியூகத்தை பலப்படுத்த வேண்டும். அவர்கள் பாணியில் பதிலடி தரக்கூடியவர்களை களத்தில் இறக்க வேண்டும். அ.தி.மு.க., கூட்டணி அடித்து ஆட வேண்டிய நேரம் இது... ஒவ்வொரு பந்தாக தட்டிக்கொண்டு இருந்தால் வெற்றி பெற முடியாது!

தேர்தல் அதிகாரிகள் கவனத்தில் கொள்வரா?

எஸ்.கோபிநாத், சென்னை-யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கச் சொல்லி ஆணை பிறப்பித்துள்ளது, தேர்தல் ஆணையம். முதன்மைத் தேர்தல் அதிகாரியும், தமிழக அரசும் 90, 92 சதவீத மக்களை நேரில் சந்தித்து, அதிகாரிகள் படிவங்களை வழங்கிவிட்டதாக மாறி மாறி அறிக்கை விடுகின்றனர். ஆனால், உண்மையில் சென்னையில் பல இடங்களில் தேர்தல் படிவங்கள் வழங்கப்படவில்லை. அப்படி வாக்காளர் படிவம் வழங்கப்படாததில், ஈஞ்சம்பாக்கம் இஸ்க்கான் பகுதியும் ஒன்று! வேதனை என்னவெனில், எங்கள் பகுதி தேர்தல் அதிகாரிகளை தொலைபேசியில் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. கட்சி முகவர்களை தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அவர்கள் எங்கள் வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை வாங்கிக்கொண்டு காணாமல் போய்விட்டனர். 82 வயதைக் கடந்து, இதயப்பிரச்னையால் அவதியுறும் நானும், என் மனைவியும் இம்முறை ஓட்டளிக்க முடியாது என்றே எண்ணுகிறேன். நான் குடியிருக்கும் பக்தி வேதாந்த ஸ்வாமி சாலை, 197வது வார்டில் உள்ள தெருவில் மட்டும், 35 முதல் 40 வாக்காளர்கள் உள்ளனர்! வீடுதோறும் தேர்தல் அதிகாரிகள் வருவர் என்றனர். ஆனால், அதிகாரிகளோ, கட்சிக்காரர்களோ எவரும் எங்கள் தெருபக்கம் வரவில்லை. எங்களைப் போன்ற வயதான, நடமாட முடியாத முதியோருக்கு யார் உதவி செய்வர், நாங்கள் எப்படி எங்கள் ஓட்டுகளை போடுவது? தமிழக தேர்தல் அதிகாரி கள் இதை கவனத்தில் கொள்வரா?

வி.சி.,யின் கனவு பலிக்காது!

வெ.சீனிவாசன், திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பீஹார் சட்ட சபை தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும், சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 21 தொகுதிகளில் போட்டியிட்டு, 19ல் வெற்றி பெற்றது. அதையடுத்து, சிராக் பஸ்வானுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று அக்கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், 'துணை முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் அளவுக்கு நான் பேராசை பிடித்தவன் அல்ல' என்று கூறிவிட்டார், சிராக். தனிப்பெரும் செல்வாக்கால் அவருக்கு இந்த வெற்றி கிடைக்கவில்லை. கூட்டணி பலத்தால் மட்டுமே கிடைத்துள்ளதால், அவர் துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை. ஆனால், இங்குள்ள விடுதலை சிறுத்தை கட்சியினர் வரும் சட்டபை தேர்தலில், கணிசமான இடங்களில் வெற்றி பெற்று, திருமாவளவனை துணை முதல்வராக்க முடியுமா என்று கனவு காண ஆரம்பித்து விட்டனர். தமிழகத்தில் இதுவரை ஜாதி அரசியல் கட்சிகள் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக வரலாறு இல்லை. குறிப்பிட்ட அந்த ஜாதியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஓரளவு ஓட்டு சதவீதத்தை பெற்றுள்ளனரே தவிர, அதற்கு மேல் தனிப்பெரும் செல்வாக்கு என்று பெரிதாக ஜாதி கட்சிகளுக்கு ஓட்டு வங்கி கிடையாது. கடந்த முறை தி.மு.க., கூட்டணியில் இருந்ததால், வி.சி., சில இடங்களில் வெற்றி பெற்றது. பார்லிமென்ட் தேர்தலில் கூட சிதம்பரம் தொகுதியில் நின்ற திருமா, விபூதி, குங்குமத்துடன் காட்சி தந்தபோதும் தட்டு தடுமாறி குறைவான ஓட்டு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றார். இதுதான் அக்கட்சியின் கள எதார்த்தம். தனியாக நின்றால், அக்கட்சியால் டிபாசிட் கூட வாங்க முடியாது. இது, திருமாவளவனுக்கு நன்கு தெரியும் என்பதால் தான், தி.மு.க., கூட்டணியில் தான் இருப்பதை உறுதி செய்ய படாதபாடுபடுகிறார். அதன் வெளிப்பாடுதான், முதலில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற திருமா, பின், அதை மத்திய அரசே செய்ய வேண்டும் என்றதும், 'ஆட்சியில் பங்கு' என்று கூறியவர், இப்போது, தி.மு.க.,வே பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்பதற்கும் காரணம்! அதேநேரம், தி.மு.க.,வும் வி.சி.,யை அதிகம் துள்ள விடாமல் தன் கட்டுப்பாட்டிற்குள்ளேயே வைத்திருக்குமே தவிர, பெரிய அளவில் தொகுதிகளைத் தராது. அத்துடன், ஆட்சியில் பங்கு என்பது தி.மு.க.,வின் அகராதியிலேயே இல்லாதது. அதனால், திருமாவளவன் கையை கட்டி, வாயைப் பொத்தி எத்தனை தரம், 'உள்ளேன் ஐயா' போட்டாலும், தி.மு.க.,விடம் எதுவும் பலிக்கப் போவதில்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
டிச 01, 2025 06:29

எந்தெந்த வார்டுகளில் வாக்காளர்கள் படித்து விவரம் தெரிந்தவர்களாக இருக்கிறார்களோ, அந்தப்பக்கம் போகாமல் தளுக்காக காலத்தை ஓட்டிவிட ஆணையத்துக்குள் உள்கைகளால் உத்தரவு வந்திருக்கலாம் அவர்கள் தமது குடும்பங்களில் இறந்தவர்கள், வெளிநாடு, வெளியூர் சென்றவர்களின் விவரங்களை மறக்காமல் சொல்லிவிடுவார்கள் தே, ஆணையம் தடுக்கில் புகுந்தால், ஆள்பவர்கள் கோலத்தில் புகுந்துவிடுவார்களே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை