இரா.பொன்னுசாமி, கோவையிலிருந்து எழுதுகிறார்: கடந்த சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்படும்' என்று வாக்குறுதி அளித்தது தி.மு.க., ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் ஆகியும், எத்தனை மதுக்கடைகள் குறைக்கப்பட்டுள்ளன என்ற விபரம் தான் இல்லை. நாளுக்கு நாள் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; இதற்கு மது, கஞ்சா போதையே காரணம் என்றாலும், தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதால் குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக கூறுகின்றனர் சட்ட அமைச்சரும், டி.ஜி.பி.,யும்!சீப்பை ஒளித்து வைத்தால், திருமணம் நின்று விடுமா? குற்ற காரணங்களை மடை மாற்றுவதால், குற்ற செயல்கள் நியாயமாகி விடுமா என்ன? மதுவால் கிடைக்கும் வருமானத்திற்கு பங்கம் வந்து விடக் கூடாது என்று ஆளும் அரசும், அதிகாரிகளும் பரிதவிப்பது புரிகிறது.தமிழகத்தில் இனி பூரண மதுவிலக்கு அமலாக வாய்ப்பு இல்லை என அரசு கருதும் பட்சத்தில், பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்லும் முக்கிய நகரங்களை மட்டுமாவது, 'டாஸ்மாக்' இல்லாத நகரங்களாக அறிவிக்கலாமே! உதாரணமாக, ராமேஸ்வரம், பழநி, சிதம்பரம், கும்பகோணம், திருவண்ணாமலை, நாகூர், வேளாங்கண்ணி போன்ற ஊர்களை புனித நகராக கருதி, இந்த ஊர்களின் எல்லை வரை டாஸ்மாக் கடைகள் திறப்பதை நிறுத்தலாம். காரணம், இந்நகரங்களுக்கு தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விழா நாட்களில் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் நிலையில், மதுபோதையில், பெண் பக்தர்களிடம் அத்துமீறல், நகை பறிப்பு குற்றங்கள் அதிகரிக்கின்றன. அதை தடுக்க, மேற்படி இந்த ஏழு ஊர்களை புனித நகராக அறிவித்து, டாஸ்மாக் கடைகளுக்கு அரசு தடை விதிக்கலாம் அல்லவா? அத்துடன், இந்நகரங்களில் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க, கள்ளத்தனமாக எவராது மது விற்றால், அதற்கு அந்த மாவட்ட கலால்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளே முழுப்பொறுப்பு என்றும், எந்த எல்லைக்குள் போதைப்பொருள் விற்கப்பட்டதோ, அந்த எல்லைக்குரிய சட்டம் - ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர், கிராம நிர்வாக அலுவலர், மதுவிலக்கு போலீஸ் அதிகாரி ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்றும் அரசு அறிவிக்கலாம்!தற்போது, ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் மதுக்கடை இல்லை. இதை முன்னுதாரணமாக கொண்டு குறைந்தபட்சம், மேற்கண்ட ஏழு ஊர்களையாவது, டாஸ்மாக் இல்லா நகராக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்; செய்யுமா இந்த அரசு? ராகுலின் உள்ளம் புகைவது ஏன்?
எஸ்.ஸ்ரீனிவாசன்,
சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பா.ஜ., மற்றும்
பிரதமர் மோடி மீது, காங்., - எம்.பி., ராகுலுக்கு கருத்து வேறுபாடுகள்
இருக்கலாம். ஆனால், நாடு என்று வரும்போது, அனைத்தையும் புறம்தள்ளி இந்தியர்
என்ற ஒற்றைப் புள்ளியில் நின்று சிந்திக்க வேண்டுமே தவிர, அப்போதும்
அரசியல் செய்ய நினைக்க கூடாது. 'பாகிஸ்தானை தாக்குவதற்கு முன்,
அதுகுறித்த செய்தியை அவர்களுக்கு சொன்னது தவறு. இதனால், நம் போர்
விமானங்களை இழந்து விட்டோம்' என்று கூறியுள்ளார் ராகுல். முதலில்
பாகிஸ்தான் மீது நாம் போர் தொடுக்கவில்லை; அந்நாட்டு பயங்கரவாதிகள் நம்
மக்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு பதிலடி தான் கொடுத்தோம்!நாம் தாக்கி அழிக்க நினைத்தது பயங்கரவாதிகளை மட்டுமே அன்றி, அந்நாட்டின் பொதுமக்களையோ அல்லது அவர்களது ராணுவ நிலைகளையோ அல்ல. பாகிஸ்தான்
தங்கள் மீது நடந்த தாக்குதலாக எண்ணி, நம் குடியிருப்புகள் மீது தாக்குதல்
நடத்த துவங்கவே, அவர்களது ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த துவங்கியது
நம் ராணுவம். இதில், பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு,
அங்கிருந்து வரும் போட்டோக்களும், வீடியோக்களுமே சாட்சியாக உள்ளன. ஆனால்,
ராகுலோ எந்தவித ஆதாரமும் இன்றி, நம் போர் விமானங்கள் பாகிஸ்தானால் சுட்டு
வீழ்த்தப்பட்டது என்கிறார்.அப்படி வீழ்த்தப்பட்டது என்றால், அதற்கான ஆதாரங்களை பாகிஸ்தான் ஏன் இன்னும் வெளியிடவில்லை? ராகுலின்
இந்த அர்த்தமற்ற கேள்விகளைத்தான், நம் போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு
வீழ்த்தியதற்கான ஆதாரமாக காட்டிக் கொண்டிருக்கிறது. எந்த போர்
விமானங்களையும் நாம் இழக்கவில்லை என்று, நம் ராணுவம் கூறுவதை ஏற்றுக்
கொள்ளாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் பேசுவது, நாட்டுக்கு தொண்டாற்றிய
பாரம்பரியமிக்க குடும்பத்தை சேர்ந்த ராகுலுக்கு அழகல்ல!இத்தகைய
பேச்சு, ராணுவத்தின் மீது மக்கள் அவநம்பிக்கை கொள்வதற்கு இடமளித்து விடும்.
அதேநேரம், உலக நாடுகளே மோடி அரசின் செயலை பாராட்டும் போது, ராகுலின்
உள்ளத்தில் மட்டும் ஏன் இந்த புகைச்சல்? சாலை வசதிகள் அவசியம்!
ரெ.ஆத்மநாதன்,
சூரிச், சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அச்சாணிக் கொம்பே மேம்பட்ட சாலை வசதி
தான்!அவ்வகையில் மறைந்தமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்
காலத்தில் போடப் பட்ட தங்க நாற்கர சாலைகளால், நாடு பெற்ற வளர்ச்சி
அபரிமிதமானது.உதாரணமாக, கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டதால்,
நாகப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் எளிதாக இணைக்கப்பட்டதுடன்
போக்குவரத்தும் பெருகியது. பெருநகரங்களை இணைக்கும் வகையில் பல சாலைகள்
மேம்படுத்தப்பட்டன.அதேநேரம், நம் நாட்டின் பெருங்குறையே சரியான பராமரிப்பு இன்மை தான்! போதுமான
பராமரிப்பு இல்லாத காரணத்தாலேயே பல சாலைகள் குண்டும், குழியுமாகி,
ஓட்டுநர்களை சிரமப்படுத்துவதுடன், விபத்து ஏற்படவும் வழிவகுக்கின்றன. இன்னும் சில இடங்களில்சாலை அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும்முன்னரே, சிதலமடைந்து விடுகின்றன. தமிழகத்தில்
பெரும்பாலும் சாலை ஒப்பந்தம் எடுப்போர் இந்தப்பக்கம் ஒருவரும்,
அந்தப்பக்கம் ஒருவரும் என ஒப்பந்தம் எடுத்து சாலை போடுவர். இதில், நடுவில்,
10 - 20 அடிகள் கொண்ட சாலை அம்போ என விடப்பட்டு, குண்டும் குழியுமாக
தென்படும். அதை இணைக்க வேண்டுமென்ற அடிப்படை அறிவுகூட அவர்களுக்கோ, அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளுக்கோ இருப்பதில்லை!தங்களுக்கு கமிஷன் கிடைத்தால் போதும் என்ற மனநிலையே இதற்கு காரணம்! தற்போது,
பொருளாதாரத்தில் நம் நாடு நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இது மூன்று,
இரண்டு என்று முன்னேற வேண்டுமானால், சாலை வசதிகளில் மத்திய - மாநில அரசுகள்
கவனம் செலுத்துவது அவசியம்!