உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / விஜய்க்கு சாணக்கியர் கிடைப்பாரா?

விஜய்க்கு சாணக்கியர் கிடைப்பாரா?

முனைவர்.ரா.ஷண்முகசுந்தரம், விவசாய ஆராய்ச்சியாளர், அவினாசி, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும்’ என்கிறார், திருவள்ளுவர். ‘தவறுகளை சுட்டிக்காட்டும் ஆலோசகர்கள் இல்லாத ஆட்சியாளர், எதிரிகள் இல்லாவிட்டாலும், வீழ்ச்சியடைவார்’ என்பதே இதன் பொருள். முதன்முறையாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசில், முதல்வர் விஜய் முதல், அமைச்சர்களில் பலர் அரசியல் மற்றும் அரசு நிர்வாக அனுபவம் இல்லாதவர்கள். இந்நிலையில், அமைச்சர்கள் சிலரின் நிர்வாகச் செயல்பாடுகளும், சட்டம்- – ஒழுங்கு தொடர்பான நிகழ்வுகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாகி வருகின்றன. புதிய அரசு என்பதால், அனுபவக் குறைபாடு இதற்கு காரணமாக இருக்கலாம். இதன்பொருட்டு, பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகள் வருவதும் இயல்புதான். ஆனால், அவற்றில் எது சரி, எது தவறு என்பதை பிரித்தறிந்து முடிவெடுக்க வேண்டிய பொறுப்பு முதல்வருக்கு உண்டு. அந்தத் தெளிவு இல்லாதபோது, நிர்வாகத்திலும், சட்டம் – -ஒழுங்கை பராமரிப்பதிலும் தடுமாற்றம் ஏற்படவே செய்யும்! ஒரு முதல்வர் அனைத்து துறைகளிலும் நிபுணராக இருக்க வேண்டியதில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் திறமையானவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, மக்களின் நலனுக்கு ஏற்ற முடிவுகளை எடுக்கலாம். நண்பர்கள், அரசியல் விசுவாசிகள் அல்லது தனிப்பட்ட முறையில் நெருக்கமானவர்களின் கருத்துகளை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துவது நல்ல நிர்வாகத்திற்கு உதவாது. புகழ்ந்து பேசுபவர்களைவிட, தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களே ஒரு தலைவருக்கு தேவை. எனவே, முதல்வருக்கு ஒரு தனிப்பட்ட ஆலோசகர் மட்டுமல்ல; அரசியல் சார்பற்ற, அனுபவமும், துறைசார் அறிவும் கொண்ட நிபுணர் குழு அவசியம். அதில், ஓய்வுபெற்ற தலைமை செயலர்கள், பொருளாதார நிபுணர்கள், கல்வியாளர்கள், மருத்துவர்கள், வேளாண் விஞ்ஞானிகள், சட்ட வல்லுநர்கள் என, பல துறைகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும். ஒவ்வொரு துறையிலும் நிபுணர்களைக் கொண்ட ஆலோசனைக் குழுக்கள் அமைக்க வேண்டும். தரவுகள், களநிலவரம், சட்டம் மற்றும் நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில், அரசின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். முதல்வர் விரும்புவதைக் கூறுபவர்கள் அல்லாமல், அவர் எடுக்க வேண்டிய சரியான முடிவைத் துணிந்து எடுத்துரைப்பவர்களே அவருக்கு ஆலோசகர்களாக இருக்க வேண்டும். ஏனெனில், தவறான ஆலோசனையால் ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது ஆலோசகர்கள் அல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர் தான். பண்டைய மன்னர்களுக்கு, ராஜகுருவும், சாணக்கியத்தனம் நிறைந்த அமைச்சர்களும் தேவைப்பட்டனர். மவுரிய குல மன்னர் சந்திரகுப்தருக்கு, சாணக்கியர் என்ற ஞானி, அரசியல், நிர்வாகம், பொருளாதாரம், பாதுகாப்பு என பல துறைகளில் வழிகாட்டினார். அதேபோன்று, முதல்வர் விஜய்க்கு அறிவார்ந்த, நேர்மையான, துணிச்சலான ஆலோசகர் குழு தேவை. விஜய், மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை வழங்க விரும்பினால், அவரைச் சுற்றி இருப்பவர்கள் அவருக்குப் பிடித்தமானவற்றை பேசுபவர்களாக இல்லாமல், நாட்டின் நலனுக்காக உண்மையை பேசு பவர்களாக இருக்க வேண்டும். மன்னரின் பலம் அவரது படை அல்ல; அவருக்கு சரியான வழியைக் காட்டும் அறிவார்ந்த ஆலோசகர்கள் தான். விஜய் மன்னருக்கு அப்படியொரு சாணக்கியர் கிடைப்பாரா? lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

D.Ambujavalli
நவ 22, 2026 19:38

சுற்றி. இருப்பவர்களெல்லாம். இவரை. மவுனசாமியாக. அமர்த்திவிட்டு, ஆளாளுக்கு. அவருக்கே. தெரியாமல். ஆட்சியில். கோலோச்சுகிறவர்களாக. இருக்கிறார்களே. 'இங்கு. நான்தான் பவர். சென்டர்'. என்று. அவர். வந்த. அன்று. கோரினாலும், இன்று நாலு. திக்கிலும். நாற்பது. ' பவர். சென்டர்கள்' ஆட்சி. செய்வதை. வெறும். Silent Spectator ஆக. பார்த்துக். கொண்டுதான். இருக்கிறார்


Anantharaman Srinivasan
நவ 22, 2026 18:40

சுய விருப்பு வெறுப்புயில்லாத தன்னலற்ற பலதுறை சாணக்கியர் இனி அவதாரமெடுத்தால் தான் உண்டு.