உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தமிழன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்!

தமிழன் என்று சொல்ல வெட்கப்பட வேண்டும்!

என்.தொல்காப்பியன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'ஈ.வெ.ரா.,தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னாலும், தமிழை இழிவுபடுத்தவில்லை; காட்டுமிராண்டி காலத்தில் எழுதப்பட்ட புராணங்கள் உள்ளன. அதனால் தான், தமிழ் மொழியை திட்டினார்' என்று புது விளக்கம் கொடுத்துள்ளார், வி.சி., கட்சித் தலைவர் திருமாவளவன்.தமிழை மட்டுமல்ல... திருவள்ளுவர் எழுதிய திருக்குறளையும், தங்கத் தட்டில் வைக்கப்பட்ட மலம் என்று ஈ.வெ.ரா.,இகழ்ந்துள்ளாரே... இதற்கு திருமாவளவன் என்ன விளக்கம் சொல்வார்? காட்டுமிராண்டிகள் வாழ்ந்த காலத்தில்எழுதப்பட்டவை தான் புராணங்கள் என்றால்,மஹாபாரதம் எழுதிய வியாசர், ராமாயணம்எழுதிய வால்மீகி எல்லாம் காட்டுமிராண்டிகளா? திருமாவளவன் சொல்வது போல மேற்கண்டவை காட்டுமிராண்டிகள் எழுதிய நுால்கள் என்றால், அதை, மக்கள் இன்று வரை வீட்டிலும்,கோவில்களிலும் புனித நுாலாக வைத்து படிக்கின்றனரே... இதை எல்லாம் தடுத்து நிறுத்த, இந்த வீராதிவீரரால் முடியுமா?அண்ணாதுரை எழுதிய கம்பரசம் போன்ற ஆபாச புத்தகங்கள் தான், நாகரிக மனிதர் எழுதிய புனித நுாலாக திருமாவளவனுக்கு தெரிகிறதோ? கன்னடரான ஈ.வெ.ரா., செம்மொழியான தமிழை இகழ்ந்து பேசினார்; அவர் காட்டுமிராண்டி மொழி என்று இழிவாக பேசிய தமிழை வைத்து திராவிடச் செம்மல்கள் ஆட்சியைப் பிடித்தனர்! 'தமிழுக்கு அமுது என்று பேர்; அந்த தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று தமிழைப் புகழ்ந்து பேசிய பாரதிதாசன் வாழ்ந்த நாட்டில் தான், தமிழ் விரோதியான, ஈ.வெ.ரா., வாழ்ந்தார் என்பதை நினைக்கும்போது, தமிழன் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது!

தமிழக எதிர்காலமே கேள்விக்குறி தான்!

அ.குணா, கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சிறந்த கல்வியாளர்களையும், ஏழை - எளியவராகப் பிறந்து பல துறைகளில் சாதனை படைத்தவர்களையும், தன்னம்பிக்கை பேச்சாளர்களையும் வரவழைத்து, அரசு பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் மாணவர்களிடையே பேச வைத்து, ஊக்குவிக்கும்நிகழ்ச்சிகளை நடத்த, அரசு தடை விதித்துள்ளது.இதனால், தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவை செய்வோர், அரசு பள்ளி - கல்லுாரிக்கு உதவி செய்யத் தயங்குகின்றனர். சமீபத்தில், 500 அரசு பள்ளிகளுக்கு, கட்டமைப்புகள் செய்து தருவதற்கு தனியார் பள்ளிகள் முன் வந்ததும், அது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியதும் நாம் அறிந்ததே. தமிழக அரசால், போதிய நிதி ஒதுக்க முடியாமல் போனதால் தான், இப்படி தனியார் பள்ளிகளிடம் கையேந்தும் நிலை உருவாகி விட்டது.உண்மையில், ஒவ்வொரு ஊரிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பல செல்வந்தர்கள் மற்றும் சேவை மனம் படைத்தவர்களால் தான், அரசு பள்ளிகளில், போதிய கட்டமைப்புகள் செய்யப்பட்டு வந்தன. இப்போது, கல்வித் துறையின் செயல்பாடுகளைக் கண்டு அஞ்சி, சேவையை நிறுத்தி விட்டனர்.தனியார் பள்ளிகளும், கல்லுாரிகளும், கல்வியாளர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுனர்களை தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து வந்து, மாணவர்களுக்கு போதனை வழங்கி வரும் சூழலில், அரசு பள்ளி மாணவர்களுக்கு இது கிடைக்காமல் செய்து விட்டது, கல்வித் துறை.ஏற்கனவே, சினிமாக்களால் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பார்த்து வருகிறோம்.இந்நிலையில், பள்ளிகளில் சினிமா ஒளிபரப்பாளர்களை அழைத்து, மாதம் ஒருமுறை, சிறார் சம்பந்தப்பட்ட சினிமா திரையிடப்பட்டு, அதற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து வருகின்றனர்.பின், சினிமா விமர்சனம், கருத்து, மாணவ - மாணவியர் விமர்சனம் என, இரண்டரை மணி நேர நிகழ்ச்சி நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.மாணவர்களுக்கு பாடங்கள் நடத்த போதிய நேரமோ, ஆசிரியர்களோ இல்லை; வகுப்பறைகள், விளையாட்டு மைதானம், நுாலகங்கள் கட்டடங்கள் இல்லை; மாணவர்களுக்கு ஒழுக்கத்தை சொல்லித் தரும் நீதி போதனை வகுப்புகள் மற்றும் சாரணர் வகுப்பு இல்லை.இதே நிலை நீடித்தால், மாணவர்களுக்கு படிப்பின் மீது ஆர்வம் குறைந்து, சினிமா மோகத்தில் அலைவதோ அல்லது சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதோ தான் அதிகரிக்கும்; மிச்சம் மீதி இருக்கும் மாணவர்கள், சாதாரண தேர்வுகளில் கூட தேர்ச்சி பெற முடியாத நிலை ஏற்படும். இனியும் கல்வித் துறை விழிக்காவிட்டால், தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடும்!

டிரம்பின் எண்ணம் நிறைவேறுமா?

சி.ஏ.கே.கல்யாண சுந்தரராஜன், மஸ்கட், ஓமன் நாட்டில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சில நாட்களுக்கு முன், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றார். அவரது உரையில், உள்ளூர் முதல், உலக அரசியல் வரை, அவரின் பார்வை அதிகாரத் தொனியுடனும், அதை பறைசாற்றும் உடல் மொழியோடும் வெளிப்பட்ட விதம், உலக நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்தது என்றால், மிகையல்ல!'அமெரிக்கர்களைச் சுரண்டி, உலக நாடுகளுக்கு தாரை வார்த்த பொருளாதாரச் சீரழிவுகளை மீட்டு, உலக நாடுகளைச் சுரண்டி, அமெரிக்கர்களைக் கொழிக்கச் செய்வோம்' என்றஅவரின் அறைகூவலால், இன்று உலகின் முன்னணி பங்குச் சந்தைகள் எல்லாம் ஆட்டம் காண்கின்றன!மெக்சிகன் ஊடுருவல் தடுப்பு, குடியேற்றச் சட்ட மாறுதல்கள், அன்னிய பொருட்களுக்கு அபரிமிதமான வரி விதிப்பு, சுதேசி நிறுவனங்களை ஊக்குவித்தல், உள்நாட்டு உற்பத்தியை பெருக்குதல் என அவரின் அடுத்தடுத்த அறிவிப்புகள், உலக நாடுகளை மிரள வைத்துள்ளன. அவரது நாட்டுப்பற்றும், அமெரிக்காவை மீட்டு எடுக்க நினைக்கும் தாகமும், 'அதை அடைந்தே தீருவேன்' என்ற மன உறுதியும் உண்மையில் பாராட்டப்பட வேண்டியவை!இதையே பிரதமர் மோடி செய்ய நினைத்தால், கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள், டிரம்பிடம் பாடம் கற்க வேண்டும்!நிறைவாக, தாம் அமைதியை விரும்புபவராகவும், உலகை ஒருங்கிணைக்கக் கூடியவராகவும் அறியப்பட வேண்டும் எனக் கூறினார்.அதேநேரம், பனாமா கால்வாயை மீட்டெடுக்கும் முயற்சி, இன்னொரு யுத்தத்துக்கு வழி வகுக்கலாம்!அண்டை நாடுகளை அமெரிக்க மாகாணங்கள் ஆக்கும் முயற்சியும் அவ்வாறே!ஆனால் ஒன்று... அவர் சொன்னதை எல்லாம் நிறைவேற்ற முடியுமா எனக் கேட்டால், அதற்கு காலம் தான் பதில் சொல்லும்!ஆக மொத்தம், உலக நாடுகளின் பார்வையை தன் பக்கம் இழுத்துள்ளார், டிரம்ப். என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

raman
ஏப் 10, 2025 07:24

ஒவ்வொரு நாடும் தன்னிறைவு பெற்ற நாடாக மாறவேண்டும் என்பதே அந்த நாட்டை வழி நடத்தும் தலைவரின் குறிக்கோளாக இருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க ஜனாதிபதி கூறுவதாக நான் நினைக்கிறேன் சைனா தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் தன்னிறைவு பெற்று விட்டதாக நான் கருதுகிறேன் அதனால்தான் இன்று உலக நாடுகளுக்கு சவால் விடுகிறது.


Dharmavaan
பிப் 01, 2025 18:44

மாணவன் கெட்டு மடையனானால்தான் இவனுக்கு ஒட்டு வரும் எனவே சினிமா பற்றி அறிவுரை .கேவலமான கூட்டம் சினிமாவால் பிழைத்த கூட்டம் எதற்கு முன்னுரிமை கொடுக்கும்


SUBRAMANIAN P
பிப் 01, 2025 13:53

திருமா சரியான காட்டுமிராண்டி. காட்டுமிராண்டின்னா நீங்க உடனே தப்பா நினைக்கக்கூடாது.. ஆதித்தமிழன்னு அர்த்தம் கொள்ளவேண்டும்.


Sridhar
பிப் 01, 2025 13:23

காட்டுமிராண்டி காலத்துல எப்படியா ஒருத்தர் புராணமெல்லாம் எழுதமுடியும்? அந்த ஆளு ஒரு தெலுங்கர் அவரு இருந்த காலத்துல மதராஸ் மாகாணத்துல எல்லா மொழிக்காரனுகளும் தமிழகத்துல இருந்தானுங்க. அப்போ இருந்த தகவல்கள் அடிப்படையில் பிறமொழியினர்தான் தமிழர்களை விட அதிகம் இருக்கிறார்கள் என்ற காற்றுவாக்கிலான செய்தி ஈவேராவுக்கு வந்திருக்கணும். அதனடிப்படையில், திராவிடர்கள்னு ஒரு தீம் மை தொடங்கியிருப்பார். அவருடைய பேச்சுக்கள் மற்றும் நடவடிக்கைகளை பார்க்கும்போது நிச்சயமாக அவர் ஒரு ஓபிசி மற்றும் பிராமணர் அல்லாத FC களின் தலைவர் என்று தெளிவாக தெரிகிறது. ஒருபோதும் ஈவேரா பிற்படுத்தப்பட்ட மக்கள் பக்கம் நின்றதில்லை. ஈழத்தமிழருக்கு ஆதரவுனு கூவிட்டு ராஜபக்சேயிடம் பொய் பரிசு வாங்கற புத்தி இருக்கறவங்க, ஈவேராவ பட்டியலின மக்களுக்கான தலைவர்னு சொல்ல முயலறது ஒன்னும் வியப்பாயில்லை


shyamnats
பிப் 01, 2025 08:39

அமைதி வழி என்று சொல்லிக்கொண்டே வன்முறையில் ஈடுபடுவதுதான் நாடுகளுக்கும் மதங்களுக்கும் நடைமுறையாக இருக்கிறது. சொந்த நாட்டின் வளர்ச்சியில் எல்லோருக்கும் ஆர்வம் இருக்கும் என்பதை அனைவரும் புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். நான், மற்றும் தான் மட்டுமே எனும்போதுதான் முரண்பாடு.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை