ஜனவரி 12, 1863
ஜனவரி 12, 1863 மேற்கு வங்க தலைநகர் கொல்கட்டாவில், விஸ்வநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி தம்பதிக்கு மகனாக, 1863ல் இதே நாளில் பிறந்தவர் விவேகானந்தர். இவர், சிறு வயதிலேயே தியானத்தின் வாயிலாக நல்ல நினைவாற்றல், பகுத்தறிவு, விளையாட்டு திறன்களை பெற்றிருந்தார். கொல்கட்டா மாநில கல்லுாரியில் படித்தார். பின், ஸ்காட்டிஷ் சர்ச் கல்லுாரியில் மேலைநாட்டு தத்துவங்களை படித்தார். அப்போது, அவர் மனதில், இறை வழிபாடு பற்றி பல கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன. அவை பற்றி, சுவாமி ராமகிருஷ்ணரிடம் விளக்கம் பெற்றவர், அவரையே குருவாக ஏற்றார். குருவின் மறைவிற்கு பின், இவரும் துறவியானார். கன்னியாகுமரி கடல் பாறையில் அமர்ந்து, மூன்று நாட்கள் தியானம் செய்தார். 1893ல், அமெரிக்காவின் சிகாகோவில் நடந்த உலக சமய மாநாட்டில் பங்கேற்று, ஹிந்து மத தத்துவங்களை விளக்கினார். கொழும்பு முதல் கொல்கட்டா வரை பயணித்து, இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார். தன் குருவின் நினைவாக, உலகம் முழுதும் ராமகிருஷ்ண மடங்களை நிறுவி, ஆன்மிக பணிகளில் ஈடுபட்டவர், தன் 39வது வயதில், 1902, ஜூலை 4ல் மறைந்தார். இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படும் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம் இன்று!