ஆகஸ்ட் 11, 2012ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், ஓங்கோல் எனும் ஊரில், 1928, ஜூன் 19ல் பிறந்தவர், பத்ரிராஜு கிருஷ்ணமூர்த்தி. மொழியியலில் ஆர்வமுள்ள இவர், பென்சில்வேனியா பல்கலையில், மொழியியல் அறிஞர் மரே எமெனோவின் மாணவராக சேர்ந்து, முனைவர் பட்டம் பெற்றார்.ஹைதராபாத் உஸ்மானியா பல்கலையில், மொழியியல் துறையை துவக்கி, திராவிட மொழிகள் குறித்த ஆய்வுகளை மேம்படுத்தினார். இவரின் ஆய்வு முடிவுகளை, 'திராவிட மொழிகள்' எனும் பதிப்பாக கேம்ப்ரிட்ஜ் பல்கலை வெளியிட்டது.ஹைதராபாத் மத்திய பல்கலையில் துணைவேந்தராக இருந்த இவர், கோண்டி மொழியின் இலக்கணத்தை ஆராய்ந்து, இலக்கிய, எழுத்து வடிவம் பெறாத திராவிட மொழிகளுக்கான வடிவியலை, 'கம்பேரிடிவ் திராவிடியன் லிங்குஸ்டிக் கரன்ட் பெர்ஸ்பெக்டிவ்' எனும் ஆய்வு நுாலாக வெளியிட்டார்.மெக்சிகன், கார்னெல், டோக்கியோ, பென்சில்வேனியா, உள்ளிட்ட சர்வதேச பல்கலைகளில் கல்வி மற்றும் ஆராய்ச்சி தலைமை பொறுப்புகளை வகித்த இவர், 2012ல் தன் 84வது வயதில் இதே நாளில் மறைந்தார். உலக பல்கலைகளில், மொழியியல் ஆய்வால், தனி பெருமை பெற்ற திராவிட மொழியியல் அறிஞரின் நினைவு தினம் இன்று!