இதே நாளில் அன்று
அக்டோபர் 28, 1867அயர்லாந்து நாட்டின், டங்கனன் என்ற இடத்தில், ரிச்மெண்ட் -மேரி இசபெல் ஹாமில்டன் தம்பதியின் மகளாக, 1867ல் இதே நாளில் பிறந்தவர், மார்கரெட் எலிசபெத் நோபிள் எனும் சகோதரி நிவேதிதா.கல்லுாரி படிப்பை முடித்ததும், பிரிட்டன் நாட்டில் கெஸ்விக் நகர பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார். ஸ்விட்சர்லாந்து நாட்டில், புதிய கல்வி முறையின் கீழ், 'ரஸ்கின்' என்ற பள்ளியை துவக்கி, சிறப்பான கல்வியை வழங்கினார்.'சமய நம்பிக்கை என்பது கோட்பாடுகளை நம்புவதல்ல; உண்மையை தேடுவது' என, நம்பிய இவரின் ஆன்மிக சந்தேகங்களுக்கு, பல சமய பெரியோரிடம் விளக்கம் கிடைக்காத நிலையில், விவேகானந்தரை சந்தித்து தெளிவு பெற்றார். இந்திய பெண்களுக்கு கல்வி கற்பிக்கும்படி இவரிடம் விவேகானந்தர் கேட்டுக் கொண்டார்.அதன் படி, இந்தியா வந்த இவர், பள்ளிகள் திறந்து குழந்தைகள், பெண்களுக்கு கல்வி, நுண்கலைகள், தொழில்களை கற்பித்தார். விவேகானந்தரின் சீடராகி, அவருடன் வெளிநாடுகளுக்கு சென்று, பயண அனுபவங்களை நுாலாக்கினார். இந்திய விடுதலை போரிலும், 'பிளேக்' நோய் சிகிச்சையிலும் பங்கேற்று, அனைவருக்கும், 'சகோதரி' ஆனார். இவர், 1911 அக்டோபர் 13ல், தன், 43வது வயதில் மறைந்தார்.