இதே நாளில் அன்று
ஜனவரி 22, 1870
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகில் உள்ள வாவூர் கிராமத்தில், வரதராஜன் - மரகதம்மாள் தம்பதியின் மகனாக, 1870ல் இதே நாளில் பிறந்தவர் சேஷாத்ரி. தன் 14 வயதில் தந்தையை இழந்தார். இவரது ஜாதகத்தை பார்த்து, 'இவர் சன்னியாசியாகக் கூடியவர்' என ஜோதிடர்கள் கணித்தனர். இவரது தாய் இறந்தபோது, 'அருணாச்சலா' என மூன்று முறை சொன்னார்.இதனால், தன் 19 வயதில் திருவண்ணாமலைக்கு சென்றவர், நிற்பது, ஓடுவது, சத்தமாக சிரிப்பது, பார்ப்போரை அணைப்பது, வாழ்த்துவது, வசை பாடுவது என ஞானக் கிறுக்கன் போல நடந்து கொண்டார். நல்லவர்களுக்கு ஆசி வழங்கி, தீயவர்களை விரட்டினார். இவர் கை தொட்ட வியாபாரங்கள் சிறந்தன.ஏழாண்டுக்கு பின், திருவண்ணாமலை, பாதாள லிங்க சன்னிதியில் தவமிருந்த ரமணரை சுற்றி விஷ ஜந்துகள் இருந்ததை அறிந்து, அவரை காப்பாற்றி, மக்களுக்கு அறிமுகம் செய்தார். 1929, ஜனவரி 4ல், தன் 59வது வயதில் முக்தி அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சமாதியாகி அருளும் சேஷாத்ரி சுவாமிகள் பிறந்த தினம் இன்று!