இதே நாளில் அன்று
பிப்ரவரி 8, 1963தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில், முகமது அசிசுதீன் - யூசுப் சுல்தானா தம்பதியின் மகனாக, 1963ல் இதே நாளில் பிறந்தவர் முகமது அசாருதீன்.இவர், ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளி, நிஜாம் கல்லுாரி, உஸ்மானியா பல்கலைகளில் படித்தார். அப்போது, கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். 1984ல் கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் சதம் விளாசினார்.'மிடில் ஆர்டர்' வலது கை பேட்ஸ்மேனான இவர், தொடர்ந்து ஒரு நாள் போட்டிகளிலும் சாதித்தார். 1989ல் இந்திய அணியின் கேப்டன் ஆனார். 47 டெஸ்ட், 174 ஒரு நாள் போட்டிகள், மூன்று உலக கோப்பை போட்டிகளுக்கு தலைமை ஏற்று, 14 டெஸ்ட், 90 ஒரு நாள் போட்டிகளில் வெற்றியை தந்தார். கடந்த, 2000ம் ஆண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், பி.சி.சி.ஐ., இவருக்கு விளையாட தடை விதித்தது. பின், காங்கிரசில் இணைந்து, எம்.பி.,யாகவும், தெலுங்கானா காங்கிரஸ் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். 'அர்ஜுனா, பத்மஸ்ரீ' விருதுகள் பெற்றவரின், 62வது பிறந்த தினம் இன்று!