இதே நாளில் அன்று: அக். 13
அக்டோபர் 13, 1877 குஜராத் மாநிலம், வல்சாட் நகரில், ஜீவன்ஜி தேசாய் – ரம்பாய் தம்பதிக்கு மகனாக, 1877ல் இதே நாளில் பிறந்தவர், பூலாபாய் தேசாய். வல்சாட், மும்பையில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்த இவர், மும்பை பல்கலையில் ஆங்கிலத்தில் முதுகலை பட்டம் பெற்றார். குஜராத் கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றியபோதே சட்டமும் படித்தார். பின், 1905-ல் மும்பை உயர் நீதிமன்ற வழக்கறிஞரானார். மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று, 1928-ல் பர்தோலி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தரப்புக்கு வாதாடினார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து, விடுதலை போராட்டத்தில் பங்கேற்றார். சுதேசி சபை அமைத்து அன்னிய பொருட்களைப் புறக்கணிக்க முயன்று, 1932ல் கைதானார்; மத்திய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி தலைவராக செயல்பட்டார். கடந்த 1945-ல், இந்திய ராணுவ வீரர்களான ஷாநவாஸ் கான், பிரேம் குமார் சேகல், குர்பக் ஷ் சிங் தில்லான் ஆகியோர் மீதான தேச துரோக வழக்கில், அவர்களுக்காக வாதாடினார். குறிப்புகளை பயன்படுத்தாமல் பல நாட்கள் இவர் நிகழ்த்திய சட்ட வாதங்கள் புகழ்பெற்றவை. இந்திய விடுதலை போராட்டத்திற்கு சட்டத்துறை வாயிலாக பங்களித்த இவர், 1946, மே 6-ல் தன் 68 வயதில் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!