இதே நாளில் அன்று: நவ. 6
நவம்பர் 06: குஜராத் மாநிலம், சூரத் நகரில், சமஸ்கிருத பேராசிரியர் ஜேகிசுந்தாஸ் மகனாக, 1890, நவம்பர் 3ம் தேதி பிறந்தவர், ஹரிலால் ஜேகிசுந்தாஸ் கனியா. இவர், பாவ்நகர் சமல்தாஸ் கல்லுாரியில் இளங்கலை பயின்றார். மும்பை அரசு சட்ட கல்லுாரியில் இளங்கலை, முதுகலை பட்டங்களை பெற்றார். மும்பை உயர் நீதிமன்றத்தில், 1915ல் வழக்கறிஞ ராக பணியை தொடங்கி, 1933ல் மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியானார். 1943ல் பிரிட்டிஷ் அரசால், ‘நைட்’ பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டு, சர் ஹெச்.ஜே.கனியா என அழைக்கப்பட்டார். 1946ல் இந்திய கூட்டாட்சி நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டு, 1947 ஆக., 14ல் அதன் தலைமை நீதிபதியானார். நாட்டின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத்துக்கு, பதவி பிரமாணம் செய்து வைத்த பெருமைக்குரியவர். இந்தியா குடியரசான, 1950 ஜனவரி 26ல் உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டபோது, அதன் முதல் தலைமை நீதிபதியானார். ‘அரசியல் மற்றும் அரசியல் கோட்பாடுகளில் இருந்து விலகி, சட்டத்தின்படி நீதிமன்றங்கள் செயல்பட வேண்டும்’ என்ற கருத்தை வலியுறுத்திய இவர், தன் 61வது வயதில் 1951, நவம்பர் 6ல் காலமானார். உச்ச நீதிமன்ற முதல் தலைமை நீதிபதியின் நினைவு தினம் இன்று!