உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இதே நாளில் அன்று / இதே நாளில் அன்று: அக். 19

இதே நாளில் அன்று: அக். 19

அக்டோபர் 19, 1888 நாமக்கல் மாவட்டம் மோகனுாரில், வெங்கடராமன் பிள்ளை- – -அம்மணி அம்மாள் தம்பதியின் மகனாக, 1888ல் இதே நாளில் பிறந்தவர், ராமலிங்கம் பிள்ளை. நாமக்கல், திருச்சியில் பள்ளி படிப்பையும், கோவையில் கல்லுாரி படிப்பையும் முடித்தவர், ஆரம்பத்தில் ஓவியராகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார். மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று சிறை சென்ற இவர், அங்கிருந்தே கவிதைகள் எழுதி, மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பினார். ‘கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது... சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்!’ என்ற இவரது வரிகள், தமிழகத்தில் விடுதலை உணர்வை ஊட்டிய போர்க்கள பாடலாக மாறியது. ‘நாமக்கல் கவிஞர்’ என போற்றப்பட்ட இவர், ‘மலைக்கள்ளன்’ உள்ளிட்ட நாவல்கள், நாடகங்கள், திறனாய்வு கட்டுரைகளை எழுதி, தமிழ் இலக்கியத்தை வளப்படுத்தினார். தமிழகத்தின் முதல் அரசவை கவிஞராக 1949ல் நியமிக்கப்பட்டு, சிறப்பிக்கப்பட்டார். மத்திய அரசின் பத்ம பூஷண் விருது பெற்ற இவர், தன் 83வது வயதில், 1972, ஆகஸ்ட் 24ல் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !