நல்ல பெயர் கிடைச்சிடுமோ?
துாத்துக்குடி மாவட்ட சட்டம் - ஒழுங்கு தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் இளம்பகவத் தலைமையில் நடந்தது. பொட்டலுாரணி என்ற கிராமத்தில் உள்ள மீன் ஆலைகளுக்கு எதிராக, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் இளம்பகவத், 'ஊர் மக்கள், மீன் கழிவுகளால் பாதிப்பு இருப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். அதுகுறித்து ஏதேனும் ஆய்வு நடத்தினீர்களா?' என, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பினார். அவர்கள் பதில் ஏதும் பேசாமல் மவுனமாக இருந்தனர்.தொடர்ந்து பேசிய கலெக்டர், 'மீன் ஆலைகளால் பாதிப்பு இல்லை என்று எடுத்துக் கூற வேண்டியது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் பொறுப்பு. அவர்களே புகார்களை தட்டிக் கழிக்கும் வகையில் செயல்பட்டால், மக்கள் மத்தியில் எப்படி அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்' என்றார்.கடைசி வரிசையில் இருந்த ஊழியர் ஒருவர், 'அரசுக்கு நல்ல பெயர் கிடைச்சுடக் கூடாதுன்னு அதிகாரிகள் நினைக்கிறாங்களோ, என்னவோ...?' என, முணுமுணுக்க, சக ஊழியர்கள் சத்தமின்றி சிரித்தனர்.