UPDATED : அக் 15, 2026 12:00 AM | ADDED : அக் 14, 2026 06:24 PM
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வு கூட்டம், சென்னை மாநகராட்சியின் அடையாறு மண்டல அலுவலகத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் அதாப் ரசூல் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில், 25க்கும் மேற்பட்ட குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது, ‘மழைக்கு முன் செய்ய வேண்டிய பணிகள், வேறு எதாவது புகார் இருந்தாலும் கூறுங்கள்’ என துணை கமிஷனர் கேட்டார். அதற்கு நலச்சங்க நிர்வாகி ஒருவர், ‘இரண்டு மாதங்களில் அமைச்சர் குமார் மற்றும் உதவி கமிஷனர் தலைமையில், நான்கு ஆய்வு கூட்டங்கள் நடத்தினீர்கள். அப்போது பல பிரச்னைகளை கூறினோம். ஒரே வாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தீர்கள். ‘இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கணக்கு காட்டவே, ஆய்வு கூட்டங்கள் நடத்துகிறீர்கள். உருப்படியாக ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. எங்களுக்கு வேறு வேலை இல்லாமலா வருகிறோம்’ என ஆவேசமாக கேட்க, அதிகாரிகள் அமைதியாகி விட்டனர். இதை பார்த்த ஊழியர் ஒருவர், ‘ஏன்டா கேட்டோம்னு துணை கமிஷனர் நொந்து போயிருப்பார்’ என முணுமுணுக்க, சக ஊழியர்கள் ஆமோதித்தனர்.