விஜயை தான் குத்தி காட்டுறாரு!
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த வேப்பூரில், தே.மு.தி.க., நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில், கட்சியின் இளைஞரணி செயலரான விஜய பிரபாகரன் பங்கேற்றார். அவர் பேசும்போது, 'விருத்தாசலம் தொகுதியில், 2006 சட்டசபை தேர்தலில், என் தந்தை விஜயகாந்தை ஜெயிக்க வைத்தீர்கள். தற்போது, உங்களின் ஆரவாரத்தை பார்த்தால், எந்த கூட்டணியாக இருந்தாலும், விருத்தாசலம் தொகுதி, தே.மு.தி.க.,வுக்கு மட்டுமே என தெரிகிறது. 'கடந்த 2006ம் ஆண்டு தேர்தலில் விஜயகாந்த் எப்படி வெற்றி பெற்றாரோ, அதேபோன்று, 2026ல் பிரேமலதா இங்கு போட்டியிடுவார்; நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்; களத்தில் இறங்கி பார்க்க வேண்டும். ஆனால், தே.மு.தி.க., தான் உண்மையான கட்சி...' என்றார். இதை கேட்ட தொண்டர் ஒருவர், 'புதுசா கட்சி துவங்கியிருக்கும் நடிகர் விஜயை தம்பி குத்திக் காட்டுறது நல்லாவே தெரியுது...' என முணுமுணுக்க, சக தொண்டர்கள் ஆமோதித்தபடியே நடந்தனர்.