தொகுதி பங்கீடு தான் பாக்கியோ?
ஈரோடு கிழக்கு மற்றும் மொடக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில், பிரசாரத்துக்கு வந்த அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை ஆதரித்து, நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். ஒரு பேனரில், 'நாளை நமதே... 2026 - எங்களுடைய கஷ்டமான காலங்களில், எங்களுக்கு தோள் கொடுத்த முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு நன்றி. நாங்கள் என்றும் உங்களுக்கு கடமைப்பட்டுள்ளோம்' என குறிப்பிட்டிருந்தனர். மற்றொரு பேனரில், 'தலைவா... உன்னை எதிர்க்க ஆயிரம் எதிரிகள் இருந்தாலும், உன்னை ஆதரிக்க பழனிசாமி போதும்... நாம் வெற்றி பெற' என்றும் குறிப்பிட்டிருந்தனர். இந்த பேனர்களில் பழனிசாமி, விஜய் படங்கள் மற்றும் இரு கட்சிகளின் சின்னங்களும் இடம்பெற்றிருந்தன. இதை பார்த்த ஒருவர், 'கூட்டணி உறுதியாகிடுச்சு போலிருக்கே... தொகுதி பங்கீடு மட்டும் தான் பாக்கியோ...?' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தபடியே கலைந்தனர்.