குரூப்பில் இருந்து நீக்கலையா?
கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக கூறி, தி.மு.க., அயலக அணியின் தர்மபுரி கிழக்கு மாவட்ட அமைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பூம்புகார் சின்னசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் வைத்தியலிங்கம் மற்றும் லோகநாதன் ஆகிய நால்வரும் கட்சியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டனர்.இதையடுத்து, 'தகடூர் மாவட்ட தி.மு.க.,' என்ற, 'வாட்ஸாப்' குரூப்பில் ஒரு பதிவு போடப்பட்டது... அதில், '40 ஆண்டு காலம், தி.மு.க.,வுக்கு உயிரினும் மேலாக உழைத்து, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைக்கு சென்று, திறம்பட கட்சியை வளர்த்த மூத்த முன்னோடிகள் நான்கு பேரை நீக்கிய, மாவட்ட பொறுப்பு அமைச்சரான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரது உதவியாளர் தேவ் ஆனந்த், அதற்கு உறுதுணையாக இருந்த தர்மபுரி எம்.பி., மணிக்கு நன்றி, நன்றி, நன்றி' என, கிண்டலாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதை பார்த்த தி.மு.க.,வினர், 'கட்சியில் இருந்து நீக்கிய இவங்களை, குரூப்ல இருந்து இன்னும் நீக்கலையா...?' என, தங்களுக்குள் முணுமுணுத்தனர்.