அதெல்லாம் ஒரு காலமும் நடக்காது!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதியில், அமைச்சர் சாமிநாதனுக்கு, அமைச்சர் சக்கரபாணி சமீபத்தில் ஓட்டு சேகரித்தார். பிரசார வாகனத்தை விட்டு இறங்கி வந்து, முதியவர்களை கையெடுத்து கும்பிட்டு, ஆசீர்வாதம் வாங்கிய அமைச்சர் சாமிநாதன், அங்கிருந்த ஒருவரிடம் சக்கரபாணியை சு ட்டிக்காட்டி, 'இவர் யாருன்னு தெரியுதா?' என கேட்டார். புருவத்தை உயர்த்தி சிலர் யோசிக்க, 'இவரு பேரு சக்கரபாணி. ரேஷன் கடையில அரிசி, பருப்பு, சர்க்கரையெல்லாம் போடுறாங்கல்ல... அந்த துறை அமைச்சர் இவர் தான்' என, அறிமுகப்படுத்தி வைத்தார். கையை உயர்த்தி, சக்கரபாணிக்கு பெரிய கூம்பிடு ஒன்றை போட்ட முதியவர்கள், அவருடன் நின்று கும்பலாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அவர்கள் கிளம்பியதும், தொண்டர் ஒருவர், 'ரேஷன்ல நல்ல அரிசியா போடுங்கன்னு சொல்லாம போயிட்டோமே...' என முணுமுணுக்க, 'அதெல்லாம் ஒருக்காலமும் நடக்காது...' என சக தொண்டர் கூற, அங்கு சிரிப்பலை எழுந்தது.