சம்பாதிக்கிற காசு தப்பும்!
திருப்பூர், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில், சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது. இதில், பயிற்சியாளர் சிவசண்முகம் பேசுகையில், 'சித்தாந்தம் என்றாலே, புரியாமல் பேசுவது என்றே பலரும் நினைக்கின்றனர்; ஆனால், சித்தாந்தம் என்றால், கொள்கை என்று பொருள். ஒவ்வொருவரும் வெவ்வேறு கொள்கைகளை வைத்துள்ளனர். 'சிலர், எந்த சூழலிலும் கடன் வாங்கக்கூடாது என்ற கொள்கை வைத்துள்ளனர்; இது, நல்ல கொள்கை தான். இன்னும் சிலரோ, கடன் வாங்க வேண்டும்; ஆனால், வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்கக் கூடாது என்ற கொள்கையை வைத்துள்ளனர்' என்றார்.முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒருவர், 'உண்மை தான்... நாம யாருக்கும் கடன் கொடுக்கவே கூடாது என்ற கொள்கையை வச்சுக்கணும்... அப்ப தான் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசு தப்பும்...' என முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.