போனில் மூழ்கி கிடக்கிறாங்க!
கோவையில், சின்மயா யுவ கேந்திரா சார்பில், 'பாரதி - யார், ஒரு புதிய பாதை' என்ற நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினராக, தமிழக, பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அவர் பேசுகையில், 'பாரதியை பற்றி படிக்க படிக்க, அவரது பல்வேறு பரிணாமங்களை பார்க்க முடியும். அவர் தன், 15 வயதில் பெற்றோரை இழந்து, தன் அத்தையுடன் காசிக்கு சென்று, அங்கு தங்கினார். காசியில் இருந்து வந்ததும், பத்திரிகைகளில் பணியாற்றினார். 'தமிழ், உருது, ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு என பல மொழிகளை கற்றவர். எனினும், 'யாம் அறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல இனிதாவது எங்கும் காணோம்' என முழங்கியவர். இன்றைய இளைஞர்கள், பாரதியை போல பல மொழிகளை கற்க வேண்டும். அவர் எழுதிய நுால்களை படிக்க வேண்டும்...' என்றார். பார்வையாளர் ஒருவர், 'எங்க, இன்றைய இளைஞர்கள் குனிஞ்ச தலை நிமிராம, மொபைல் போன்ல அல்லவா மூழ்கி கிடக்கிறாங்க...' என, முணுமுணுக்க, அருகில் இருந்தவர்கள் ஆமோதித்தனர்.