பேச்சு, பேட்டி, அறிக்கை
அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'முதல்வரை நியமனம் செய்ய இயலவில்லை எனில் மருத்துவக் கல்லுாரிகளை திறப்பது ஏன்' என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்வி, உரிய பதவி உயர்வு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கும் மூத்த மருத்துவர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே உள்ளது.எதுக்கும் அசராத திராவிட மாடல் அரசு, இந்த கேள்விக்கெல்லாம் சாமர்த்தியமா பதில் தந்துடும், பாருங்க! ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: முருக பெருமானுக்கு பழனியில் மாநாடு நடத்திய தி.மு.க., தமிழகத்தில் ஹிந்துக்கள் ஓட்டுகளை வாங்க, பிள்ளையார் சதுர்த்தி விழாவை, திராவிட மாடல் தும்பிக்கை நாதன் திருவிழா என்ற பெயரில் நடத்துமா? 'எங்கள் கட்சியில் 90 சதவீதம் ஹிந்துக்கள் இருக்கின்றனர். நாங்கள் ஹிந்துக்களுக்கு விரோதி இல்லை' என சொன்ன முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.,வினருக்கு இது குறித்து கட்டளை பிறப்பிப்பாரா?நல்ல யோசனையா இருக்கேன்னு சேகர்பாபுவே முன்னின்று நடத்தினாலும் நடத்திடுவாரு!தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலர் பாண்டியன் பேட்டி: தென் மாநில விவசாயிகளை ஒருங்கிணைத்து ஒரு குழுவை அமைக்க முடிவு செய்துள்ளோம். மேகதாது அணை பாதிப்பு குறித்தும், ராசிமணலில் அணை கட்டுவதால் தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேச முடிவு செய்து உள்ளோம். விரைவில் கர்நாடக மாநிலம், மாண்டியாவில் விவசாயிகள் சார்பில் கூட்டம் நடத்த வும், நதிநீர் பிரச்னை அரசியலாக்குவதை தடுக்க, தென்மாநில விவசாயிகளை உள்ளடக்கி உயர்மட்ட குழுவை ஏற்படுத்தவும் முடிவு செய்துஉள்ளோம்.இனி, அரசியல்வாதிகளை நம்பி பிரயோஜனம் இல்லைன்னு விவசாயிகள் களம் இறங்கிட்டாங்களா...? ஆல் தி பெஸ்ட்!தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா பேட்டி: தமிழகம் மிக சிறப்பாக செயல்படக் கூடிய மாநிலம். மக்கள் தொகை கட்டுப்பாடு, வறுமை ஒழிப்பு என, பல துறைகளில் முன்னிலை வகிக்கிறோம். வட மாநிலங்களுடன் ஒப்பிடும் போது, பல வகைகளில் முன்னிலையில் இருக்கிறோம். மாற்றுக் கட்சி என்ற மனநிலையுடன் மத்திய அரசு, தமிழக அரசை பார்க்கிறது. இது, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. தமிழகத்தில் தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களின் தொகுதியில் நடக்கிற பணிகள் எல்லாம் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் தொகுதிகளிலும் நடக்குதா?