பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன் போன்றோர், பா.ஜ., அணியை ஆதரிப்பதால், தன் தலைமைக்கு ஆபத்து வருமோ எனும் அச்சத்தில் உறைந்திருக்கிறார் பழனிசாமி. அதனால், பா.ஜ.,வோடு சமரசமாக போய் விடலாமா; இல்லை சட்டசபை தேர்தல் நெருங்கும் வரை வாய்தா வாங்கி, விஜய் கட்சியோடு கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டால், வழக்கம் போல் காவி கட்சிக்கு விபூதி அடித்து விடலாமா எனவும் கணக்கு போடுகிறார்.பழனிசாமி கணக்கு என்னவோ தெரியாது... ஆனா, இவரது தலைவர் பன்னீர்செல்வம் போடும் கணக்கெல்லாம் தப்பு கணக்காகவே முடியுதே! ஹிந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: தமிழக அரசு இரு மொழி கொள்கையை பின்பற்றுவதாகக் கூறுகிறது. ஆனால், தமிழக அரசின், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அறிவிப்பு பலகை, ஹிந்தி உட்பட பல மொழிகளில் வைக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஐந்து மொழியிலும் அறிவிப்பு பலகை உள்ளது. தி.மு.க., ஆட்சியில், மாணவர்களுக்கு மட்டும் தான் இரு மொழி கொள்கையா?பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு வட மாநில பக்தர்களும் வருவர் என்பதால், அவங்க வசதிக்காக அப்படி எழுதி வச்சிருக்காங்க... அதுலயும் அரசியல் பண்ண பார்க்கிறாரே!தமிழக பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை: 'இரு மொழி கொள்கையை கடைப்பிடிக்கும் தமிழக மாணவர்கள் எந்த அளவில் பிற மாநிலத்தவருக்கு குறைவாக இருக்கின்றனர்' என, முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 'நீட்' தேர்வில், அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது மட்டுமே, தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. முதல்வரின் கேள்விக்கு இதை விட சிறந்த பதிலடி இருக்க முடியுமான்னு தெரியலை!தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேச்சு: அறிவை, வேலைவாய்ப்பை மொழி கொடுக்கிறது. அதனால், பல மொழிகள் கற்பதில் எந்த தவறும் இல்லை. தமிழை மட்டும் கற்க நாங்கள் தயார். ஆனால், அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும். வேலை தேடி வெளிநாடு, வெளி மாநிலம் செல்லும்போது, அங்கு பேச வேறு மொழி வேண்டும். எனவே, அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ளுங்கள். வாஸ்தவம் தான்... 'திரைகடல் ஓடியும் திரவியம் தேடணும்' என்றால், நாலு மொழிகளை கத்துக்கணும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை!