பேச்சு, பேட்டி, அறிக்கை
தி.மு.க., துணை பொதுச்செயலர் கனிமொழி அறிக்கை: என் தொகுதியான துாத்துக்குடியில்,பார்வையற்ற பெற்றோரை மகன் கைவிட்டு சென்றார்; மாதாந்திர உதவித் தொகையும் நின்று போனது. இது, என் கவனத்திற்கு வந்ததும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தேன். வங்கி ஐ.எப்.எஸ்.சி., எண் தவறாக இருந்ததால், அவர்களுக்கு இந்த சிரமம் நேர்ந்துள்ளது. உடனே அதை சரி செய்து கொடுக்க, அதிகாரிகளிடம் அறிவுறுத்தினேன்; விரைவில் அவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கும்.இவங்க கவனத்துக்கு வராத, இதுபோன்ற ஆயிரக்கணக்கான பிரச்னைகள் துாத்துக்குடியில் இருக்கு தெரியுமா?அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: மகன் உதயநிதிக்கு எம்.எல்.ஏ., அமைச்சர், துணை முதல்வர் என, தன் குடும்பத்தினருக்கு கொடுத்த வாக்குறுதியை, 100 சதவீதம் முதல்வர் ஸ்டாலின்நிறைவேற்றி விட்டார்; ஓட்ட ளித்த மக்களுக்கு கொடுத்தவாக்குறுதியை, 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. பழனிசாமி ஆட்சியில், 52 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கி, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டது. அடுத்த தேர்தலில், ஒட்டுமொத்த இளைஞர்களும் ஸ்டாலினை வீட்டுக்கு அனுப்பி வைக்க தயாராகி விட்டனர்.'லேப்டாப்' வாங்கிய, 52 லட்சம்மாணவர்களும், அ.தி.மு.க.,வுக்குஓட்டு போட்டாலே வெற்றி நிச்சயம்னு நம்புறாரோ?சென்னை மாநகராட்சி காங்.,கவுன்சிலர் சிவராஜசேகரன் பேச்சு: மத்திய நிதி அமைச்சகம், மாநிலங்களுக்கான அக்டோபர் மாத வரி பகிர்வில், வழக்கம் போல் தமிழகத்திற்கு பாராமுகம் காட்டி உள்ளது. பா.ஜ., ஆளும் மாநிலமான உ.பி.,க்கு, 31,962 கோடி ரூபாயும், தமிழகத்திற்கு, 7,268 கோடி ரூபாயும் ஒதுக்கியுள்ளது. உ.பி.,யின் மக்கள் தொகை, 24 கோடி; தமிழக மக்கள் தொகை, 8 கோடி... நம்மை விட மூன்று மடங்கு அதிகம் மக்கள் இருக்கிற மாநிலத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்குறது தப்பா?அ.தி.மு.க., - எம்.ஜி.ஆர்., இளைஞரணி முன்னாள் இணை செயலர் கே.சீனிராஜ் பேச்சு: தமிழக அரசியல் வரலாற்றில், அ.தி.மு.க., சந்தித்த சோதனை போல எந்த கட்சிகளும் சந்தித்து இருக்காது. மீண்டும் பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க.,ஆட்சி அமைய, கட்சியின்,53வது ஆண்டு துவக்க விழாவில், தி.மு.க., கூட்டணியை வெல்லவும்,பழனிசாமி கரத்தை வலுப்படுத்தவும் சூளுரைப்போம்.இவரது சபதத்தை பார்த்தால், முன்னாளாக இருக்கிறவர், இன்னாளாக ஆசைப்படுவது நல்லாவே தெரியுது!