தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: வீட்டில் துாங்கிய சிறுமி மாயம். சிறைகளில் இருந்து கைதிகள் மாயம். விசிலடித்த விரல்கள் யாவிலும், வேதனை காயம். விளங்குது தமிழருக்கு விளம்பர மோகம். வெள்ளி போல் பூசப்பட்டது யாவும் ஈயம். வெத்துக்கழக ஆட்சியில் நித்தம் நித்தம் வெளுக்குது சாயம். ‘த.வெ.க., அரசு மீது மக்கள் அதிருப்தியில் இருக்காங்க’ன்னு நீங்க சொல்றது உண்மையா, இல்லையா என்பது, ஐந்து தொகுதி இடைத்தேர்தலில் தெரிஞ்சிடும்! முன்னாள் எம்.எல்.ஏ.,வும், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க., செயலருமான மயிலை வேலு அறிக்கை: சென்னை, பட்டினப்பாக்கத்தில் வீட்டு வசதி வாரிய பழைய குடியிருப்புகளை இடிக்க, அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக செய்தி வருகிறது. நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் தவறில்லை. பாதுகாப்பற்ற கட்டடங்களை இடிப்பதிலும் தவறில்லை. ஆளில்லாத கட்டடங்களை இடிக்க காட்டும் வேகத்தை, அதே பட்டினப்பாக்கத்தில் பாதுகாப்பற்ற வீடுகளில் வாழும் ஏழை மக்களை காப்பாற்றுவதில் ஏன் காட்டக் கூடாது; அவர்களும் மனிதர்கள் தானே? அதனால் தான், அவங்களை அங்கிருந்து காலி பண்ணிட்டு, புது தலைமை செயலகம் கட்டலாம்னு பார்க்கிறாங்க... அதுக்கும் முட்டுக்கட்டை போடுறீங்களே! மா.கம்யூ., கட்சியின் தமிழக செயலர் சண்முகம் அறிக்கை: இயல், இசை நாடக மன்ற தலைவர் பதவிக்கு எவரோ, 5 கோடி ரூபாய் கொடுக்க முன்வந்ததாக, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். அவர் யார் என்பதையும், அவர் மீது சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும்; அமைச்சர்கள் பொறுப்புணர்ந்து பேசுவது அவசியம். ‘பொறுப்புணர்ந்து’ன்னு சொல்லும்போதே, நீங்க எதுக்கோ பயப்படுறீங்கன்னு தோணுதே... அமைச்சர் ராஜ்மோகன், கூடிய சீக்கிரம், ‘அந்த நபர்’ மீது, காவல் துறையிடம் வழக்கு பதிவார்... கவனிச்சிக்கிட்டே இருங்க! அவரும் சட்டப்படி நடந்தாகணுமே!
தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ.,வும், த.வெ.க., பிரமுகருமான டாக்டர் சரவணன் பேச்சு:
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார், தினமும் செய்திகளில் இடம்பெற வேண்டும் என்பதற்காக, த.வெ.க., அரசை பற்றி ஏதாவது விமர்சித்து கொண்டு இருக்கிறார். மதுரை, திருமங்கலம் தொகுதியில், 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும் இருந்த அவர் தொகுதிக்கு என்ன செய்தார்? மக்களுக்கு 100 ரூபாய், பழைய சேலை கொடுத்தால் ஏமாந்து விடுவர் என நினைத்து விட்டார். ஆனால், அப்படி ஏமாற மக்கள் தயாராக இல்லை.- காசுக்கும், இலவச பொருட்களுக்கும் ஓட்டு போடும் கலாசாரத்தை தான் த.வெ.க., வந்து அடிச்சு நொறுக்கிடுச்சே... அந்த கடுப்பை தான் உதயகுமார் தினமும் காட்டுறாரோ?