பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 21
மா.கம்யூ., கட்சியின் தமிழக செயலர் சண்முகம் அறிக்கை: பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் மதம் மாறியதன் காரணமாக, அவர்களின் சமூகம் பின்தங்கிய நிலையை புறக்கணித்து, இட ஒதுக்கீட்டு பயன்களை மறுக்கும் வகையிலான உச்ச நீதிமன்ற தீர்ப்பு கவலை அளிக்கிறது. சமூக நீதி என்பது, மத அடையாளத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டியதல்ல. மாறாக, சமூக ஒடுக்குமுறை, கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அணுகப்பட வேண்டியதாகும். ஒதுக்கீடு பற்றி இவ்வளவு வியாக்கியானம் பேசும் நீங்க, பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு தருவதை மட்டும் ஏத்துக்க மறுப்பது ஏன்? சிவகங்கை காங்., – எம்.பி., கார்த்தி பேட்டி: காங்கிரஸ் மீது தி.மு.க.,விற்கு சில மனஸ்தாபங்கள் உள்ளன என்பதை முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன். மாநில அளவில் எதிரெதிராக இருந்தாலும், மத்திய அளவில் ஒன்றுபட்டு செயல்படலாம். கேரளாவில் காங்கிரஸ் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் இரு துருவங்களாகச் செயல்பட்டாலும், மத்தியில், ‘இண்டி’ கூட்டணியில் காங்கிரசுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து செயல்படுவது போல செயல்படலாம். அது சரி... ‘எங்களுக்கு மாநிலத்தில் த.வெ.க., அரசிலும் அங்கம் வகிக்கணும்... டில்லியில் நாங்க நடத்தும் போராட்டங்களுக்கு கூடவே குடை பிடிச்சிட்டு தி.மு.க., – எம்.பி.,க்களும் வரணும்’னு சொல்றீங்களோ? தி.மு.க., இளைஞர் அணி செயலர் உதயநிதி அறிக்கை: வேளாண் துறைக்கு செயலர் இல்லாததை நாம் சுட்டிக்காட்டிய பின், வேளாண் செயலரை நியமித்த முதல்வர் விஜய், விவசாயிகள் பிரச்னையை தீர்ப்பதற்கான ஆய்வு கூட்டங்களையும் நாம் சொன்ன பின் தான் நடத்துவாரா? இப்பிரச்னை குறித்து உடனே ஆய்வு கூட்டங்களை நடத்தி, டெல்டாவை வறட்சி பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு அனைத்து நிவாரண உதவிகளையும் உடனே வழங்க வேண்டும். கொஞ்சம் பொறுங்க... வடகிழக்கு பருவமழை முடியட்டும்... வறட்சி பாதிப்பு என்பது மழை பாதித்த பகுதிகளா மாறிடும்!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி:
அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,விற்கு சென்றவர்களுக்கு மரியாதை இல்லை. அங்கு சென்றவர்கள் வேதனையில் உள்ளனர்; சந்தோஷமாக இல்லை. ஆளுங்கட்சியில் சேர்ந்து அல்வா சாப்பிட வேண்டும் என நினைத்தவர்கள் தான் த.வெ.க.,விற்கு சென்றனர். அவர்கள் அனைவரும் அ.தி.மு.க.,விற்கு திரும்பி வருவதற்கான காலத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.- இது எப்படி உங்களுக்கு தெரியும்... ஒருவேளை, நீங்களும் அங்க போக முயற்சி பண்ணி, உங்க பழைய சகாக்களிடம் பேசினீங்களா?