பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 23
தி.மு.க., துணை பொதுச்செயலரும், நீலகிரி லோக்சபா எம்.பி.,யுமான ஆ.ராஜா பேட்டி: எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தை, தேசிய அளவில் கொண்டு செல்ல மூன்றாவது அணியுடன் இணைந்து செயல்படுவது குறித்து, கரப்பான் பூச்சி கட்சியினரிடம் நாங்கள் எதுவும் பேசவில்லை. இந்தியாவில் ஜனநாயகம் இல்லை; ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டிய தேர்தல் கமிஷன், தேர்தலை முறையாக நடத்தவில்லை. தேர்தலை நடத்துபவரை திருடர் என்று அவர்கள் கூறுகின்றனர். அதற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம்; அவ்வளவு தான். தேர்தல்ல ஜெயித்து பதவிக்கு வரும் பலர், மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறாங்களே... அது மட்டும் ஜனநாயகத்துல சரியா? எம்.ஜி.ஆர்., மக்கள் இயக்கத்தின் தலைவரும், பாடநுால் வாரிய முன்னாள் தலைவருமான கா.லியாகத் அலிகான் அறிக்கை: குதிரைகளை துரத்திவிட்டு, லாயத்தை பூட்டி வைக்கிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. வேலுமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் போன்றவர்களின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை வெளியே அனுப்பி விட்டு, ‘லாயத்தின் சாவி என்னிடம் உள்ளது’ என பெருமை பேசும் இவரால், மன உளைச்சல் அடைந்து விலகி போனவர்களின் எண்ணிக்கை ஏறிக் கொண்டே போகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா, பழனிசாமியை மன்னிக்காது. அ.தி.மு.க., என்ற ஆல மரத்தின் விழுதுகளை எல்லாம் வெட்டி தள்ளிட்டு, பழனிசாமி என்னத்தை சாதிக்க போறார்னு தான் தெரியலை! மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவியும், சமூக செயற்பாட்டாளருமான அருள்செல்வி பேட்டி: ‘தமிழகத்தில் வெப்பத்தை தணிக்க, 1 கோடி மரங்கள் வளர்க்க வேண்டும்’ என்று, என் கணவர் விவேக்கிடம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியிருந்தார். அவரது இலக்கை அடைவதற்கு விவேக், தன் வாழ்நாளில், 37 லட்சம் மரங்களை நட்டுள்ளார். அவர் மறைந்த பின், ‘கிரீன் கலாம்’ அமைப்பின் வாயிலாக, 80 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளோம். உங்க கணவர் விட்டு சென்ற பணிகளை தொடரும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்! முன்னாள் அமைச்சரும், தி.மு.க., உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான பொன்.முத்துராமலிங்கம் அறிக்கை:தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்க வலியுறுத்தி, டில்லியில் கரப்பான் பூச்சி கட்சி உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் போராட்டத்திற்கு ஊக்கம் தரும் வகையில் ஆதரவளித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, இந்திய ஜனநாயகத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட மகுடம். அறிவாலயம் என்றைக்கும் ஜனநாயகத்தின் சரணாலயம் என்பது அழுத்தம் திருத்தமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.ஜனநாயகம் பத்தி இவ்வளவு ஆணித்தரமா பேசுறீங்களே... உங்க கட்சிக்குள்ள அது இருக்குதா?