உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி: மத்தியில் பா.ஜ., தலைமையிலும், தமிழகத்தில் அ.தி.மு.க., தலைமையிலும் ஒரு வலுவான கூட்டணி அமைந்துள்ளது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., ஆட்சியை அகற்றவே, புது கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகள், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் சேர வாய்ப்பு உள்ளது. பா.ஜ., கூட்டணியில் த.மா.கா., தொடர்ந்து அங்கம் வகிக்கும்.அதெல்லாம் சரி... சட்டசபை தேர்தல்ல இவங்க 'சீட்' கேட்டு பா.ஜ.,விடம் பேசணுமா; அ.தி.மு.க.,விடம் பேசணுமா? தமிழக பா.ஜ., விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை: தேர்தலில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, இலவசங்களை, நிதியை வாரி வழங்குகிறது தி.மு.க., அரசு. தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் அக்கறை காட்டவில்லை. விவசாயிகளையும், விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்னைகளையும் கண்டு கொள்வதில்லை. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தங்கள் ஓட்டு வங்கி அரசியலுக்காக பயன்படுத்தி, விவசாயத்தையும் பாழ்படுத்தி விட்டனர்.அதனாலதான், 100 நாள் வேலை திட்ட நிதியை ஒதுக்கீடு செய்யாமல், மத்திய அரசு நிறுத்தி வச்சிருக்குதா?தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க., முன்னாள் செயலர் சிவபத்மநாபன் பேச்சு: நாட்டின் தேசியக்கொடியை மாநில முதல்வர்கள் ஏற்றி மரியாதை செய்ய வேண்டும் என்ற உரிமையை பெற்றுத் தந்தவர் கருணாநிதி. பல்கலைக் கழகத்திற்கு வேந்தராக, மாநில முதல்வர் இருக்க வேண்டும் என்ற உரிமையை சட்டரீதியாக போராட்டம் நடத்தி பெற்றுத் தந்தவர் முதல்வர் ஸ்டாலின். மாநில சுயாட்சி கொள்கைக்கு எதிரான நடவடிக்கையை வென்று பாதுகாப்பவர், துணை முதல்வர் உதயநிதி. நேற்று, இன்று, நாளை என, மக்களின் உரிமைக்கு குரல் கொடுத்து வரும் சமூக நீதி கட்சியாக தி.மு.க., திகழ்ந்து வருகிறது.'தி.மு.க.,வில் தாத்தா, அப்பா, மகன்னு வாரிசு அரசியல் தான் நடக்குது' என்பதை நாசுக்கா சொல்றாரோ?தமிழக காங்., பொதுச்செயலர் கே.ஜி.ரமேஷ்குமார் அறிக்கை: கடந்த ஆண்டு வேலையுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதற்காக, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது. ஆனால், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கு அளிக்கப்பட்ட தொகை எங்கே போனது? 'எங்கே என் வேலை' எனக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு மோடி அரசின் பதில் என்ன?தமிழகத்தில், இவங்க கூட்டணி கட்சியான தி.மு.க.,வின் நான்காண்டு ஆட்சியில், எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு தந்திருக்காங்க?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை