பேச்சு, பேட்டி, அறிக்கை
விருதுநகர் காங்., - எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி: ஜாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, 27 சதவீதமாக இருந்த இட ஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்த பின்பு 42 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசும் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவாதத்தை துவக்கி உள்ளது. தமிழக அரசும், அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும்.'ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்தணும்'னு முதல்வர் எப்பவோ கைகழுவிட்டாரே... இவர், கூட்டணி தர்மத்துக்கு எதிரா கருத்து சொல்றாரே! த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து சென்ற நான்கு மீனவர்கள், கடலில் இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அவர்களின் படகுகளை சேதப்படுத்தி, மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்து, மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்திருக்கின்றனர் இலங்கை கடற்கொள்ளையர்கள். தமிழக மீனவர்கள் அச்சத்துடன் கடலுக்கு செல்லும் நிலை மாற வியூகம் வகுத்து, அதை செயல்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமை.பிரதமர் மோடி, சமீபத்தில் இலங்கைக்கு சென்று வகுத்த வியூகம் பலன் அளிக்கவில்லைன்னு சொல்றாரோ?தி.மு.க., ராஜ்யசபா எம்.பி.,யும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் பேச்சு: 'முதல்வர் ஸ்டாலின், தன் ஆட்சியை தமிழக மக்கள் பாராட்டுவதாக நம்பி, ஒரு கற்பனை உலகில் வாழ்கிறார்' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஆனால், 'சி சர்வே' கருத்து கணிப்பில் கூட, மக்களிடையே மிகவும் பிரபலமான முதல்வராக ஸ்டாலின் திகழ்கிறார். ஸ்டாலின், தன் நான்கு ஆண்டுகால பதவிக் காலத்தில், தொடர்ந்து முதல் மூன்று இடங்களுக்குள் இருந்து வருகிறார். அவரது புகழ் என்பது கற்பனை அல்ல; யதார்த்தம்.இந்த சர்வே முடிவுகளே, அடுத்த வருஷம் தேர்தல்ல தி.மு.க.,வை கரை சேர்த்துடும்னு நம்பி இருந்துடாதீங்க!மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பேட்டி: கவர்னருக்கு எதிரான வழக்கில், தமிழக அரசுக்கு வெற்றி கிடைத்துள்ளது. அந்த வெற்றியை பெற்ற தி.மு.க.,வினர் தேசிய அளவில் கொண்டாடப்பட வேண்டியவர்கள். தேசிய அளவில் இந்த வெற்றியை மற்றவர்களுக்கு பயன்படும்படியும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் படியும் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை முதல்வரிடம் வைத்துள்ளேன்.அவசரப்படாதீங்க... இந்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வருது... அதன் முடிவு வர்ற வரைக்கும் அடக்கி வாசியுங்க!