பேச்சு, பேட்டி, அறிக்கை
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: மாநில சுயாட்சி வேண்டும். ஆனால், மதுக்கடைகள் விவகாரத்தில் மட்டும், இந்தியா முழுதும் மூடப்பட்டால் தான், முதல்வர் மூடுவார். கடந்த ஆண்டைவிட, 2,488 கோடி ரூபாய் டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. இது, மது விற்பனையை அதிகரிக்க அரசு முயற்சி செய்து வருவதைக் காட்டுகிறது. மது மற்றும் பிற போதைப் பொருட்கள் அதிக அளவு விற்கப்படுவதால், பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன.மது விற்பனையால், மது ஆலை நடத்துற ஆளுங்கட்சி புள்ளிகள், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்வதை இவங்க கண்டுக்கலையா? தமிழக காங்., மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேட்டி: மத்திய அமைச்சர்கள், அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது உறுதிமொழி எடுத்துவிட்டு, அதற்கு எதிராக செயல்படுகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் வகையில், கட்சி தலைமை அறிவித்து உள்ள போராட்டம், தமிழகத்திலும் நடத்தப்படும்.குறைஞ்சது, 1,000 பேரையாவது திரட்டி போராட்டம் நடத்துங்க... இல்லேன்னா உங்க பதவிக்கு அது மரியாதையா இருக்காது!தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'அமைச்சர் பதவி வேண்டுமா இல்லை மீண்டும் சிறைவாசம் வேண்டுமா?' என்ற கேள்வியை, செந்தில் பாலாஜியிடம் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். தி.மு.க., அரசுக்கு அழிவுப் பாதையை, ஆயத்தீர்வை துறை அமைச்சரே உருவாக்கி இருக்கிறார். இனி, ஊழல் செய்த ஒவ்வொரு தி.மு.க.,வினரும், சிறைக்கு செல்ல வரிசையாக நிற்கப் போவதை, தமிழக மக்கள் பார்க்கத்தான் போகின்றனர்.ஏற்கனவே, சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள தங்கம் தென்னரசு, பொன்முடி, துரைமுருகன்னு இந்த வரிசை நீளும் என்பதை இப்பவே சுட்டிக்காட்டுறாரோ?பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: 'தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் இனி அலுவலக உதவியாளர் உள்ளிட்ட அனைத்து குரூப் டி பணியாளர்களையும் நிரந்தரமாக நியமிக்கக்கூடாது' என்றும், 'ஒப்பந்தம் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் குத்தகை முறையில் தான் நியமிக்க வேண்டும்' என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், 1.50 லட்சம் அரசு பணியிடங்கள் ரத்து செய்யப்படும் நிலை உருவாகும். ஒப்பந்த முறை நியமனங்களில் இட ஒதுக்கீடு இருக்காது என்பதால் இது சமூக அநீதி. எனவே, குத்தகை நியமனங்களுக்கு அனுமதி அளிக்கும் உயர்கல்வித் துறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.அரசு ஊழியர்கள், சங்கம் வாயிலாக குடைச்சல் தருவதால், அரசு பணியிடங்களை முடிஞ்ச அளவுக்கு ஒழிக்க பார்க்கிறாங்களோ?