உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: 'கல்வி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். நீங்கள், 'பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய் உரிமை தொகை' என சொன்னீர்கள். ஆனால், 'தகுதியான பெண்களுக்கு' என மாற்றினீர்கள். அங்கே தகுதி என்ற விதி ஏன் வந்தது. அனைவருக்கும் கொடுக்கலாமே. அதுபோல்தான் கல்வி நிதி பெற, நீங்கள் இதை செய்ய வேண்டும் என விதி வகுத்துள்ளனர். எம்.எல்.ஏ.,வான யாரும் முதல்வர், துணை முதல்வராகலாம் என்ற விதி உள்ளது. நீங்கள் ஏன் உங்கள் குடும்ப உறுப்பினர்களை மட்டும், முதல்வராக, துணை முதல்வராக ஆக்குகிறீர்கள்? அந்த பதவிகளுக்கு தகுதியான யாரும், அந்த கட்சியில் இல்லையோ, என்னவோ? அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் பேட்டி: கரூர் சம்பவத்தை வைத்து, த.வெ.க.,வுடன் கூட்டணி பேச்சு நடத்தி வருகிறார் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி. அவரது தலைமையை ஏற்று, எப்படி அவர்கள் இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் செல்ல முடியும். விஜய் கட்சியை கூட்டணிக்கு வரவழைக்க, கரூர் சம்பவத்திற்கு ஆட்சியாளர்கள் தான் காரணம் என குள்ளநரித்தனமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் பழனிசாமி. பழனிசாமி என்ன குற்றம் சாட்டினாலும், அதுக்கு பதிலடி தரணும்னு தான், கரூர் சம்பவத்தில் ஆளுங்கட்சியை இவர் ஆதரிக்கிறாரோ? தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை: 'ஹிந்தியை ஏற்றுக் கொண்டால் தான் கல்வி நிதி' என, எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை. புதிய கல்வி கொள்கை என்பது தாய்மொழியை ஊக்குவிப்பது தானே தவிர, ஹிந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல. முதல்வர் ஸ்டாலின், ஹிந்தியை எதிர்த்து போராடுகிறேன் என்றால், ஹிந்தி மொழியை திணித்த காங்கிரசுடன் தான் போராட வேண்டும். காங்.,குடன் போராடி தானே தமிழகத்தில், 1967ல் ஆட்சியை பிடிச்சாங்க... அன்னைக்கு இழந்த ஆட்சியை, இன்று வரை காங்கிரசால் மீட்க முடியலையே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை: தேச விடுதலைக்கு பாடுபட்ட சுப்பிரமணிய சிவா, தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்ட முயன்று, முடியாமல் போனது. காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனும், அந்த முயற்சியில் ஈடுபட்டார். அவ்விரு தியாகிகளின் விருப்பம் நிறைவேறும் வகையில், அதே பாப்பாரப்பட்டியில் அரசு சார்பில், பாரத மாதா ஆலயம் அமைக்க ஆணையிட்டவர் முன்னாள் முதல்வர் பழனிசாமி. அந்த அரசாணை இன்றும் ஏட்டளவில் தானே இருக்கு... செயல்பாட்டுக்கு வந்தால் தானே சாதனையாகும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை