பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக, பா.ஜ., துணை தலைவர்,கே.பி.ராமலிங்கம் பேட்டி:வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தி.மு.க., எதிர்ப்பதற்கான காரணம் எல்லாருக்கும் தெரியும். கடந்த தேர்தலில், போலி வாக்காளர்கள் மூலம் எதிர்க்கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்கி, தி.மு.க., வென்றது. தேர்தல் கமிஷனின் தற்போதைய நடவடிக்கை யால், வரும் சட்டசபை தேர்தலில் எப்படி ஜெயிப்பது என்ற வருத்தத்தில், தி.மு.க.,வினர் உள்ளனர்.இவர் சொல்ற உதாரணத்தை தானே, 'பீஹார் தேர்தல்ல, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியினர் செய்துட்டாங்க'ன்னு தி.மு.க., கூட்டணி கட்சிகளும் குற்றஞ்சாட்டுறாங்க!தமிழக, பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் பேட்டி: பீஹார் தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிமிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதுபோல, வரும் தமிழக சட்டசபை தேர்தலிலும், தே.ஜ., கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்து, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் தவறான பிரசாரம் செய்கின்றனர். ராகுல் உள்ளிட்டவங்க செய்த பிரசாரத்துக்கு தான், பீஹார் வாக்காளர்கள், 'ஓட்டு' என்ற ஆயுதத்தால் சம்மட்டி அடி கொடுத்துட்டாங்களே! தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர், கோவி.செழியன் பேட்டி: 'வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மை, பட்டியலின மக்களை நீக்கி விட்டால், தமிழக முதல்வருக்கு உள்ள ஆதரவை தடுத்து விடலாம்' என்ற எண்ணத்தில், வாக்காளர் திருத்தப் பட்டியல் என்ற சதி திட்டத்தை, தேர்தல் ஆணையத்தின் துணையோடு, மத்திய, பா.ஜ., அரசு செய்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து வரும் போலி வாக்காளர்கள் மூலம், தி.மு.க.,வின் வெற்றியை திருடி விடலாம் என நினைக்கும், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணிக்கு, 2026 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவர். பீஹார் சட்டசபை தேர்தல் முடிவுகள், இவரது துாக்கத்தை கெடுத்திருப்பது நல்லாவே தெரியுது! தமிழக, பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சு: நான்கரை ஆண்டு, தி.மு.க., ஆட்சியில் ஒரு துரும்பை கூட கிள்ளி போடவில்லை. சொத்து வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும், தி.மு.க.,வினர் நிறைவேற்றவில்லை. எங்களின், தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து, தி.மு.க.,வினர் பயந்து நடுங்குகின்றனர். 2026 தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை, தமிழக மக்கள் வெற்றி பெற செய்ய வேண்டும். நாலரை ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், கூட்டணி கட்சிகளை வெளியேற விடாமல், அடை காத்து வருவதே பெரிய சாதனை தானே!