உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய கம்யூ., கட்சியின் தேசிய பொதுச்செயலர், டி.ராஜா பேட்டி: தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. தமிழகத்தில் இந்திய கம்யூ., கட்சி, தி.மு.க., கூட்டணியில் உள்ளது. தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின், இந்தியாவின் முன்மாதிரி முதல்வராக உள்ளார். எனவே, எங்கள் கூட்டணி, சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். இப்படி நாலஞ்சு, 'பிட்'களை சேர்த்து போட்டால் தான், கூடுதலா 'சீட்'கள் கிடைக்கும்னு நினைக்கிறாரோ? தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், ஏ.என்.எஸ்.பிரசாத் அறிக்கை: கோவையில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று, நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு, 18,000 கோடி ரூபாயை பிரதமர் மோடி வழங்கியுள்ளார். இந்த மாநாட்டுக்கு வந்த பிரதமருக்கு எதிராக, கருப்பு கொடி ஆர்ப்பாட்டம், உருவ பொம்மை எரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்ட, ஈ.வெ.ரா., திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட தேச விரோதிகளை, தமிழக அரசு, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடிக்கு எதிராக கருப்பு கொடிய காட்டினவங்க எல்லாம், ஆளுங்கட்சியின் ஊதுகுழல் போன்றவங்களாச்சே...அவங்க மீது நடவடிக்கை எடுப்பாங்கன்னு எதிர்பார்த்தால், இவர் ஏமாந்து தான் போவார்! அ.தி.மு.க., துணை பொதுச்செயலர், கே.பி.முனுசாமி பேச்சு: தி.மு.க.,வினருக்கு கொள்கைகள் பற்றி கவலையில்லை. தாத்தா, மகன், பேரன் என, வாரிசு அரசியல் செய்கின்றனர். பீஹாரில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, மக்கள் அவர்களை துடைத்து எறிந்து விட்டனர். கருணாநிதியை தொடர்ந்து, ஸ்டாலின், உதயநிதி ஆகிய வாரிசுகள், தமிழகத்தை கபளீகரம் செய்து வருகின்றனர். அவர்களையும் வரும் தேர்தலில், மக்கள் துாக்கி வீசுவர். பீஹாரில் வாரிசு அரசியலை துாக்கி வீசக் கூடிய அளவில், தே.ஜ., கூட்டணி பலமா இருந்துச்சு... ஆனா, தமிழகத்தில் நிலைமை, தலைகீழா அல்லவா இருக்கு! தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பேச்சு: கடந்த, 2011 முதல், 2021 வரையிலான 10 ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட ரேஷன் கடைகளின் எண்ணிக்கை, 2,536. ஆனால், தி.மு.க., ஆட்சியில், 54 மாதங்களில் மட்டும் புதிதாக 3,136 ரேஷன் கடைகள் துவங்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க., கடந்த காலத்தில் செய்த திட்டங்களை விட, தி.மு.க., அதிகமாக செய்து உள்ளது. அதே போல, அ.தி.மு.க., ஆட்சி யில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி; தி.மு.க., ஆட்சியில் கடத்தப்பட்ட அரிசியின் அளவு பட்டியலையும் இவர் வெளியிடலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை