தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு:
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு: தமிழக அரசியல் களத்தின் தட்ப, வெப்பத்தை எப்போதும் தீர்மானிக்கும் நகராக மதுரை தான் இருக்கும். இங்கு முதல்வர் நினைப்பதை விட, மூன்று மடங்கு செயலாற்றுபவராக அமைச்சர் மூர்த்தி உள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் எப்போது வேண்டுமானாலும் நடக்கட்டும். எந்த கட்சியும், எப்படி வேண்டுமானாலும் கூட்டணி வைக்கட்டும். அரசியல் புயல் எப்படி மாறி அடித்தாலும், தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஸ்டாலின் தான் வருவார் . தி.மு.க., ஆட்சியின் சாதனைகள் கைகொடுக்கும்னு நம்புறாரா அல்லது தனித்தனியே நிற்கும் எதிரணிகளால, தி.மு.க., சுலபமா ஜெயிச்சிடும்னு இந்த அமைச்சர் நம்புறாரா? அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் பெருமாள் பிள்ளை அறிக்கை: 'கொரோனா' பெருந்தொற்று நேரத்தில் பணியாற்றி உயிரிழந்தவர் அரசு டாக்டர் விவேகானந்தன். அவரது மனைவி, கருணை அடிப்படையில் அரசு வேலை கேட்டு தொடர்ந்த வழக்கில், 'அரசு வேலை தரப்பட வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், இதுவரை அரசு மனம் இரங்க வில்லை. உண்மையில், அரசுக்கு கருணையே இல்லையா? உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றாத அரசு மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டியது தானே! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் அறிக்கை: 'ஒரு இலை உதிர்ந்தால், இரண்டு இலைகள் துளிர்க்கும்' என்பது இயற்கை நடத்தும் பாடம். செங்கோட்டையன் என்ற ஒருவர் விலகினால், 10 பேர் இணைவர் என்பது தமிழக அரசியலுக்கு, அ.தி.மு.க., சொல்லும் புதிய பாடம். அரசியல் பாடத்தை, எம்.ஜி.ஆரிடமும், ஜெய லலிதாவிடமும் படித்தவர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி என்பதால், அவரது தலைமையில், அ.தி.மு.க., ஆட்சி மீண்டும் அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. எப்படியோ, தன் கூடவே அரசியல் பாடம் படித்த செங்கோட்டையனை, நேற்று துவங்கிய கட்சிக்கு தாரைவார்த்துட்டாரே, உங்க கட்சியின் பொதுச் செயலர் பழனிசாமி! தமிழக வெற்றிக் கழகம் கட்சியின், ஐ.டி., அணி நிர்வாகி அர்ஜுன் அறிக்கை: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்த பின், முதல் முறையாக கோவை விமான நிலையத்திற்கு வந்தார். அவருக்கு, த.வெ.க., நிர்வாகிகளும், தொண்டர்களும் அளித்த உற்சாக வரவேற்பு, செங்கோட்டையனுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. த.வெ.க., வளர்ந்து வருவது மட்டுமல்லாமல், இன்றைய அரசியல் சூழலையும் மாற்றி வருகிறது என்றால், அது மிகையல்ல. செங்கோட்டையனின் வரவு, த.வெ.க.,வினருக்கு புதிய உற்சாகத்தை தந்திருக்கு என்பதில் மாற்று கருத்தில்லை!